ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பவள் நீ

Vinkmag ad

ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பவள் நீ – காதல் கவிதை – வித்யாசாகர்!

 

யிரானாய்
உயிராகவே இருப்பாய்
உயிருள் உயிர்மை ஊட்டுபவளே
உயிருள்ளவரை
உடனிரு.

ஒரு அலைபோல
மீண்டும் மீண்டும்
ஓயாது வருபவள் நீ
அந்த அலை அந்தக் கடலிலிருந்து
மெல்ல விலகினால்
அந்தக் கடலென்ன ஆகும்?
நானென்ன ஆவேன்???

நீ போனால்
உயிர்போகும்
உயிர் தானே போகட்டும்,
நீ வந்தால்
உயிர் வரும்
வாழ்க்கையும் வரும்.

நீ என்பதுள்
அத்தனை அழகைச் சேர்ப்பவள்
நீ மட்டுமே,
நீ யிருப்பதால் தான்
அந்த நீ கூட
அப்படி இனிக்கிறது,

உனக்கொன்று தெரியுமா?
நீயும் நானும்
உயிரும் நஞ்சும் போல
நீ உயிர் பருகிச் செல்கிறாய்
நான் நஞ்சுண்டு நிற்கிறேன்
மரணம் என் சன்னல் வழியே
வரும்போதெல்லாம்
உன் கொலுசொலி கேட்டு
மறைகிறது,
உன் கொலுசு சத்தம் கேட்கையில் தான்
எனக்குள் நீ பிறக்கிறாய்
நானும் பிறக்கிறேன்.

உண்மையில் நீ
காற்றில், தென்றல் எனக்கு
மழையில், ஈரம் எனக்கு
ஈரத்தில் மனம் நீ யெனக்கு
அது சரி, நானென்ன
தென்றல் தானே வீசுகையில் போவோமென்று
இருந்துவிடாதே
எனக்குத் தென்றலும் நீ தான்
உயிர்க் காற்றும் நீ தான்.

அன்பின்
நிகர் மதிப்பு தெரியுமா?
பிடித்தவர் இறக்கையில்
அது தெரியும்,
நீ சற்று பிரிந்தாலே
அது யெனக்குத் தெரிகிறது.

பிரிவு
மரணத்தினும்
கொடிது என்பார்கள்
மரணம்
உன் பிரிவைவிட
பெரிதில்லை, அறி.

காக்கைக்கு
தன் குஞ்சு
பொன்குஞ்சு என்பார்கள்
எனக்கு காக்கையும்
நீ தான்;
பொன் குஞ்சும் நீதான்.

பெண்
எத்தனை உயர்வானவள்,
பெண்மையின்
உயரத்தை உன் கொண்டே
அளக்கிறேன் நான்,
நீ தான் எனக்கு
வானிலும் மேலாய் தெரிகிறாய்
கடலென குளிர்கிறாய்
உள்ளே யொரு
நட்சத்திரம் போல ஒளிர்கிறாய்.

ஆயிரந் தான் நீ ஒளிர்ந்தாலும்
வெளிச்சமென்றாலும்
காற்று என்றாலும்
மூச்சு என்றாலும்
நீயின்றி நானில்லை என்றால்
அது பொய்யாகும்,
உண்மையில் நானிருக்கிறேன்
நீயில்லாமலும் நானிருக்கிறேன்
ஆனால்
நானாக இருக்கிறேனா??

அது தான் கனம்
நீயில்லாத கனம் மிகப் பெரியது
பிரபஞ்சம் வலுக்கும் வலி அது
நதியை விட நீளமானது உன் பிரிவு
உன் பிரிவில் தான்
என்னை நான்
வேகமாய் இழக்கிறேன்.

நான் என்பது ஒரு
வெற்றிடம்
நீயில்லாமல் அது
வெற்றிடமாகவே இருக்கிறது
நீ தான் அதை
உன் சிரிப்பால் நிறைத்துப் பழகியவள்.

நீ
உன்னை நிறைத்தது போலென்
வாழ்வு
வேறெது கொண்டும்
நிறைந்ததில்லை,

நீ தான் இந்த கணம்
நீ தானிந்த பொழுது
நீ தான் இந்த இரவு
நீதானிந்த பகல்
எனக்கு எல்லாம் நீ மட்டுமே.

நீயில்லாத வீட்டில்
கோலமிருக்கும் வீடுமிருக்கும்
வீடு சுவறாக மட்டுமிருக்கும்
உயிரிருக்காது.

வா…
நீ வந்து சென்ற
அதே இடந் தான் வா,

மீண்டும்,

மீண்டும் மீண்டும் வந்து போ
வந்து ஒருமுறை ஆயிரம் பூக்களால்
என்னை நிறை.

அல்லது
ஆயிரம்
புற்களேனும் முளைக்கட்டும்
ஒரு மலரேனும் வைத்துச் செல்!!
——————————————————
வித்யாசாகர்

News

Read Previous

நகரமயமாக்கலும் கொரோனாவும்

Read Next

கொள்ளை நோய் தந்த இலக்கியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *