யாதுமாகி நின்றாய் வாசிப்பே !

Vinkmag ad

யாதுமாகி நின்றாய் வாசிப்பே !

எஸ் வி வேணுகோபாலன் 

ங்கிலத்தில் சுவாரசியமான விடுகதை ஒன்று கேள்விப்பட்டதுண்டு. மேலும் போகிறது, கீழும் இறங்குகிறது. இருந்த இடத்திலேயே இருக்கிறது, அது எது?

மலைப்பாதை என்பது தான் விடை.  அது மேல் நோக்கியும் செல்கிறது. கீழ் நோக்கியும் இறங்குகிறது. அங்கேயே இருக்கவும் செய்கிறது. வாசகர் மனநிலையும் அப்படித்தான். ஒரு வாசிப்பு கடந்த காலத்தை நோக்கிக் கொண்டு போகிறது, இன்னொன்று, எதிர் காலத்தில் பயணம் செய்ய வைக்கிறது. பிறிதொன்று, நிகழ் காலத்தில் உலவ வைக்கிறது. அது மட்டுமா, வயது நிலையிலும் முன்னுக்கும் பின்னுக்கும் நகர்த்திக் கொண்டு போகும் அசாத்திய தன்மை வாசிப்பு வழங்குகிறது. பாலினம் கடந்துபோய் மாற்றுப் பாலினத்தின் இயல்புகளை உணர்ந்து கொள்ளவும் கூட வாய்ப்பு நல்குவது புத்தக வாசிப்பு.

இளவயதில், சிறுவர்களுக்கான இதழ்களையும், பெரியவர்களுக்கான நூல்களையும் சம காலத்தில் வாசிப்பதும் அருமையான விஷயம் தான். அம்புலி மாமா எங்கே எப்போது யாரிடம் கிடைத்தாலும் உற்சாகமான வாசிப்பு தான். ராஜா காலத்துக் கதைகளும், அவற்றுக்கான ஓவியங்களும், முக்கியமாக, விக்கிரமாதித்யனும் வேதாளமும் ! ‘மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில ஏறிருச்சா?” என்று அன்றாட வாழ்க்கையில் அதற்குப்பின் எத்தனையோ முறை யாரோ யாரிடமோ சொல்லக் கேட்டதெல்லாம் நினைவில் வந்துபோகிறது.

சித்திரக் கதைகள் எப்போதும் கூடுதல் ஈர்ப்பானவை.  சிறுவர் இதழ்களில் அதுதான் அசத்தல் பக்கங்கள். தனியே முத்து காமிக்ஸ் போல் கிடைத்துவிட்டால் கேட்கவே வேண்டாம். இரும்புக் கை மாயாவியை யார் மறக்க முடியும்…. பிரச்சனை என்று வந்ததும், உடனே அருகே இருக்கும் மின்சார ஸ்விட்ச் பலகை அருகே சென்று, தனது விரலை ப்ளக் பாயிண்ட்டில் நுழைத்து மின்சக்தி உறிஞ்சியெடுத்த அடுத்த கணம் அவர் உடல் மறைவதும், அந்த இரும்புக் கை மட்டும் நகர்ந்து சென்று தாக்குதல்கள் நடத்தி முடிப்பதும், அந்த இரும்புக் கை மட்டும் மிக அருகே பெரிய அளவில் வரையப்பட்டிருப்பதும், வாசிப்போர்க்கு ஓர் இசையும், விசையும் கலந்து வாசிக்கும் அனுபவம் காமிக்ஸ் புத்தகங்களில் வாய்க்கும்.

கல்கி இதழிலும் சித்திரத் தொடர்கதை வருவதுண்டு, குதிரைகள், வாள், வேல், அம்பு என்று அந்த ஓவிய மொழி தனி ஈர்ப்பாக இருக்கும். ஆனந்த விகடனில் வந்த சித்திரத் தொடர் ஒன்றும் நினைவில் உண்டு. சங்கர் என்பவரின் சாகசங்கள், அவரே காலட்சேபம் செய்து சொல்வதுபோல் மங்கலாக நினைவில் இருக்கிறது. இதே காலத்தில் தான் துப்பறியும் சங்கர்லால் கதைகள் என்று தமிழ்வாணன் எழுத்தை ரசித்து வாசித்தது. கல்கண்டு இதழும் விருப்பத்தோடு வாசிப்போம். அஞ்சல் அட்டையில் கறுப்புக் கண்ணாடி வரைந்து, சென்னை என்று போட்டால் போதும் எனக்கு வந்து சேர்ந்துவிடும் என்று சொல்வார் அவர்.

பின்னாளில், மகாகவி உரைநடைத் தமிழ் எனும் ஒரு புத்தகம் வாங்கி வாசித்துக் கொண்டிருக்கையில்,  திடீர் என்று ‘ஜானி வாக்கர்’ என்று பக்கங்கள் வந்தது. ‘பாண்டிச்சேரிக்குச் சென்று ரகசியமாக மது பாட்டில்கள் வாங்கிக்கொண்டு அவன் பேருந்தில் பெரிய அச்ச உணர்வோடு சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான்’ என்று போகிறது கதை…. சரி, படித்து விடுவோம், பாரதி எப்படி இந்தக் கதையை எழுதினார் என்பதை அப்புறம் பார்ப்போம் என்று வாசித்தாயிற்று. விழுப்புரத்தில் பேருந்து நிற்கையில், இவனருகே வந்தமரும் வேறு ஓர் இளம் பயணி, சட்டென்று இறங்கிச் சென்றுவிடும்போது அவசரத்தில் பெட்டி மாற்றி எடுத்துக் கொண்டுபோய் விடுவார். அப்போது மதுவிலக்கு மிகவும் தீவிரமாக அமலில் இருந்த காலத்துக் கதை அது.

பேருந்து புறப்பட இருக்கும் நேரத்தில் திடீர் என்று காவல் துறை ஆட்கள் வண்டியில் ஏறி சோதனை மேற்கொள்வார்கள். நம் நாயகன், ‘அப்பாடா தப்பித்தோம், ஜானி வாக்கர் இருந்த பெட்டி கைமாறிப்  போன வரைக்கும் புண்ணியம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அவன் காலருகே இருக்கும் பெட்டியை எடுத்துத் திறப்பார் ஓர் அதிகாரி, உள்ளே கஞ்சா பொட்டலங்கள் என்று முடியும் கதை.  இது பாலகுமாரன் அவர்களது சிறு கதை. மகாகவி பாரதியின் புத்தகத்திற்கான அச்சடித்த தாள்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருக்கும் பைண்டிங் பிரிவில் பக்கத்தில், சின்னச் சின்ன வட்டங்கள் எனும் பாலகுமாரன் தொகுப்பின் தாள்களும் இருந்திருக்க வேண்டும், பெட்டி மாறியது போலவே குறிப்பிட்ட சில பக்கங்கள் கைமாறி அடுக்கி பாரதி புத்தகத்தில் கலந்திருக்கவேண்டும்.

இன்னொரு பக்கம்,  நகைச்சுவை ரசனையில் பாக்கியம் ராமசாமி அப்புசாமியை வைத்து என்ன எழுதுகிறார் என்று வார இதழில் தேடித் தேடி வாசித்தது. குறிப்பாக, ஜெ வரைந்திருக்கும் ஓவியங்கள். ஜெயராஜ் அப்போது பல இதழ்களிலும் வரைந்து கொண்டிருந்தார். கலைமகளில் மூர்த்தி, குமுதத்தில் மாருதி, விகடனில் மணியம் செல்வன்.  ராமுவின் தனித்துவக் கோடுகள், வர்ணம் அவர்களது ஓவியங்கள், சில்பி வார்த்த சிற்பங்கள்  உள்பட யாரது தூரிகை என்று வீட்டில் போட்டி வைத்துக் கண்டுபிடித்துவிடுவோம். இதில் சீதாப்பாட்டி, அப்புசாமி ஓவியங்களைத் தான் தமது லெட்டர் பேடில் அச்சிட்டிருந்தார் ஜெயராஜ் என்று பின்னர் வாசித்தது சுவாரசியமான செய்தி.

பாரதி நூற்றாண்டு நேரத்தில் வாசித்த இரண்டு முக்கியமான கதைகள் நினைவில். ஒன்று நகைச்சுவைக் கதை, பாக்கியம் ராமசாமி எழுதியது. மற்றொன்று, ஒரு லட்சம் புத்தகங்கள் எனும் சுஜாதா அவர்களது அபாரமான கதை. விகடன் சிறப்பிதழில் வந்த கதைகளாக இருக்கவேண்டும் இரண்டும்.

பாக்கியம் ராமசாமி அவர்களது கதையில் (‘யாதுமாகி நின்றாய் காளீ’ என்று நினைவு!) அப்புசாமி, பீமாராவ், ரசகுண்டு கோஷ்டி வழக்கம்போல் என்ன ஏமாற்று வேலை செய்யலாம் என்று அலையும்போது அல்வா போலக் கிடைக்கும் விஷயம் தான், பாரதி நூற்றாண்டு. உடனே அவரது இல்லத்தில் கண்காட்சி நடத்தி அமைச்சரை வரவழைத்துக் கட்டணம் போட்டு மக்களிடமிருந்து காசு கறப்பது தான் திட்டம்.

மூர் மார்க்கெட் எல்லாம் போய்த் தேடியலைந்து பழைய மேசை, நாற்காலி, இன்னபிற பொருள்கள் தேற்றி எடுத்து வந்து, பாரதி அமர்ந்த நாற்காலி, வாசித்த பழைய செய்தித்தாள் என்று கண்காட்சி தயாரிப்புப் பணிகள் இரவு வரை கனஜோராகப் போய்க்கொண்டிருக்கும். திடீர் என்று சீதாப்பாட்டி  உள்ளே நுழைவாள், ‘ஏய் ஓல்ட் மேன், ஆல் அலாங் வேஸ்ட் என்று நினைத்தேன், யுர் ஆல்சோ டூயிங் சம்திங் கிரேட்’ என்று பாராட்டிவிட்டுப் போவாள்.

மறுநாள் அமைச்சர் வந்து திறப்பு விழா செய்து உள்ளே நுழைந்து மிகவும் பாராட்டிக் கொண்டே செல்வார். பாரதியார் பயன்படுத்திய கட்டைப் பேனா, அது இது என்று அசந்து போய்ப் பார்த்துக் கொண்டே வருகையில், புதிய டிவி செட் ஒன்று வைத்து அதன்மீது பாரதியார் பார்த்த டிவி என்று எழுதி வைத்திருக்கும். என்னது பாரதியார் காலத்தில் டிவி இருந்ததா… அவ்வளவு தான், அப்புசாமி அண்ட் கோ மாட்டிக் கொண்டு முழி முழி என்று முழிப்பார்கள், இவர்களது வண்டவாளத்தை முழுதாகக் கண்டுணர்ந்து விலங்குபோட்டு இழுத்துச் செல்லும்போது, வழியில் சீதாப்பாட்டி அர்த்தமுள்ள புன்னகையோடு  எல்லாம் தான் செய்த வேலை என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டு நிற்பார். ‘வந்து கவனிச்சிக்கிறேன் கெய்வி’ என்று புலம்பிக்கொண்டே போவார் அப்புசாமி.

சுஜாதாவின் ‘ஒரு லட்சம் புத்தகங்கள்’, மிகவும் பேசப்பட்ட சிறுகதை. யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட தாள மாட்டாத துயரத்தையும் ஆவேசத்தையும் சுமந்து வரும் இலங்கைத்  தமிழ் அறிஞர், சென்னை பாரதி நூற்றாண்டு விழா கருத்தரங்க மேடையில், விழா சிறப்பு மலரை மட்டும் குறியீடாக எரித்துக் காட்டப் போகிறேன் என்று நிகழ்வில் தலைமை ஏற்க உள்ள பேராசிரியரை சந்தித்துச் சொல்வார். அவரோ, மைத்துனர் மூலம் அமைச்சரைப் பிடித்து விழா நிறைவில் தாம் பல்கலை துணைவேந்தர் என்ற அறிவிப்பு வெளிவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பதட்டத்தோடு காத்திருப்பவர்.  விடுவாரா, விழாவில் எந்த அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்று மனைவியை அழைத்து, அவளது அண்ணன் உதவியைக் கோருவார்.

கருத்தரங்கத் தலைமை உரையில், ‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதி சொன்னது கான்க்ரீட் பாலம் அல்ல, மனப்பாலம்’ என்று பேராசிரியர் முழங்கியது அடுத்த நாள் தினசரிகளில் வந்திருக்கும், அவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட செய்தியோடு !  பாரதி பாடலுக்கான அந்த விளக்கத்தை, அதற்குமுன் தனிப்பட்ட சந்திப்பில் பேராசிரியருக்குச் சொன்ன இலங்கைத் தமிழறிஞரை விழாவில் சேதம் விளைவிக்க வந்த தீவிரவாதி என்று மேடையில் அவரைப் பேச அழைக்குமுன்பே காவல் துறை அப்புறப்படுத்தி இருக்கும். அந்தச் செய்தி நாளேடுகளில் வந்திருக்காது. கதை நெடுக பாரதியார் கவிதை வரிகளைப் பயன்படுத்தி இருப்பார் சுஜாதா. ஒரு லட்சம் புத்தகங்கள் என்றால் எத்தனை எழுத்துகள், பாருங்களேன் என்று கேட்பார் அந்த இலங்கைத் தமிழர். ஒரு நூலகம் எரிக்கப் படுவதன் நோக்கம், அவஸ்தை இரண்டையும் சிந்திக்க வைக்கும் கதை.

நகரம், மகாபலி உள்ளிட்டு சுஜாதாவின் சிறுகதைகள் பலவும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. பஞ்ச பூதங்களின் பெயரில் வாரம் ஒரு கதை, அவர் தினமணி கதிரில் எழுதி வந்தார் என்று நினைவு. அவற்றில் நீர், நெருப்பு எனும் கதைகள் இன்னும் நினைவில் இருக்கின்றன. தீபாவளி மலர்களிலும் அவரது கதைகள் இடம் பெறும்.

வாசிப்பில் கணையாழியும் சேர்ந்திருக்க, அதன் கவிதைகள், கடைசி பக்கம் என்று மட்டும் படிக்கத் தொடங்கியது, சிறுகதைகள் பக்கம் திரும்புகையில் தான் அந்த அதிர்ச்சி சிறுகதை கண்ணில் பட்டது. அதோடு விட்டதா, அடுத்தடுத்த மாதங்களில் அந்தக் கதையைக் கேள்விக்குட்படுத்தி எத்தனை கடிதங்கள்.  அப்படி என்னதான் பேசியது அந்தக் கதை?

(தொடரும் ரசனை….)

கட்டுரையாளர் மின்னஞ்சல் முகவரிsv.venu@gmail.com

அலைபேசி எண்: 94452 59691

News

Read Previous

சமூக வலைத்தளங்களின் மருத்துவப் பதிவுகள்: ஓர் எச்சரிக்கை

Read Next

ஈகை இன்பம்

Leave a Reply

Your email address will not be published.