சமூக வலைத்தளங்களின் மருத்துவப் பதிவுகள்: ஓர் எச்சரிக்கை

Vinkmag ad
சமூக வலைத்தளங்களின் மருத்துவப் பதிவுகள்: ஓர் எச்சரிக்கை
ஊடகங்களில் எந்த நோய் குறித்த செய்திகள் அதிகம் வந்தாலும், சமூக வலைத்தளங்களில் மருத்துவப் பரிந்துரைகள் அதிகமாக வரத் துவங்கிவிடும். அதுவும் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மருத்துவப் பரிந்துரைகளுக்கு அளவே இல்லை.
மரபுவழி மருத்துவங்களில் மிக முக்கியமான ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் “தனித்தன்மை”.
ஒரு மனிதருக்கு ஒரு மூலிகையையோ, மருந்துத்தன்மையுள்ள உணவினையோ பரிந்துரைப்பதற்கு முன்னால் அவரது உடல்நிலை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அவருடைய உடல்நிலை குளிர்ச்சியா, வெப்பமா என்பதில் துவங்கி, அவர் ஏற்கனவே பின்பற்றும் மருத்துவம், உடலிலுள்ள தொந்தரவுகளின் நிலை. .  என அனைத்தையும் கணக்கில் கொண்டே பரிந்துரை செய்யப்பட வேண்டும். எந்தவிதமான உடல் புரிதலும் இன்றி, சமூக வலைத்தளங்கள் வழியாக பரப்பப்படும் இப்பரிந்துரைகள் உடல் நலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடும்.
உதாரணமாக, குளிர்ச்சித் தன்மை அதிகமுள்ள ஒரு நபரின் உடலில் அதே குளிர்ச்சித் தன்மையை மிகைப் படுத்தும் உணவுகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டாலோ, விளக்கெண்ணெய் போன்ற சாதாரணமான உணவுப் பொருள் கொடுக்கப்பட்டாலோ அவருடைய உடல் அதீதமான குளிர்ச்சியை அடையும். காய்ச்சல் முதல் வலிப்பு வரை பல தொந்தரவுகள் உருவாகும்.
சாதாரண காலங்களில் இருமலுக்குப் பரிந்துரைக்கப்படும் மரபுவழி மருத்துவ மருந்துகள் நுரையீரலில் இருந்து சளியை வெளியேற்றும் தன்மை கொண்டவை. அதே மருந்துகளை உடலின் நிலையை அறியாமல் மூச்சுத் திணறல் உள்ள நிலையில் பயன்படுத்தினால், இருமல் அதிகமாகி இன்னும் சிக்கலை ஏற்படுத்தும்.
பார்ப்பதற்கு சாதாரண உணவாகவோ, எளிய மூலிகையாகவோ இருக்கும் ஒன்று பொருத்தமற்று கொடுக்கப்படும் போது கடும் விளைவுகளைத் தோற்றுவிக்கலாம்.
ஒருவருக்குப் பரிந்துரைக்கப்படும் சித்தா, ஹோமியோ, ஆயுர்வேத, யுனானி, மூலிகை மருந்துகள் இன்னொருவருக்குப் பொருந்தாது. அனைவருக்கும் பொருந்துகிற சர்வரோக சராசரி என்று எந்த மருத்துவத்திலும் இருக்க வாய்ப்பில்லை.
இப்படியான பொதுப் பரிந்துரைகள் சிலருக்குப் பயன்தரலாம். அவ்வாறு பயன்பெற்ற சிலர் அதனைத் தொடர்ந்து பரப்புவார்கள். அது பலருக்குப் பொருந்தாமல் போகலாம். ரசாயன மருந்துகளை பொதுத்தன்மையோடு பயன்படுத்தும் அலோபதி மருத்துவத்திலேயே ஒருவருக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்து, இன்னொருவருக்குப் பொருந்தாமல் போகலாம் எனும் போது, மரபு வழி மருத்துவங்களின் அடிப்படை தத்துவமே தனித்தன்மையைப் பின்பற்றுவதுதான். அதனை சராசரியாக்க முயல்வது ஆபத்தானது.
பொதுவான வாழ்வியல் முறைகளைப் பின்பற்றுவதில் பிரச்சினை இல்லை. குறிப்பிட்ட நோய்க்கான மருந்துப் பரிந்துரை என்பது எல்லா மருத்துவங்களிலும் ஆபத்தானது.
நமக்கு பசி வரும் போது நாம் சாப்பிடுபவை உணவு. ஏதாவது ஒரு நோய்க்காக பசியின்றி சாப்பிடுவது மருந்து. மருந்தும் – உணவும் ஒன்றல்ல. பசிக்கும் போது உணவாக நாம் சாப்பிடும் போது பெரிய பிரச்சினை இல்லை. அதனையே நோய்க்காக உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் சாப்பிடுவது சிக்கலை உருவாக்கிவிடும்.
மருந்தினை அது குறித்த ஆழ்ந்த அறிவுள்ள ஒருவர் பரிந்துரைப்பதே சரியானது. சமூக வலைத்தளங்கள் வழியாக அவற்றைப் பரப்புவது ஆபத்தானது. நோயினால் வரும் தொந்தரவுகளோடு, பரிந்துரைகளால் வருபவற்றையும் இணைத்துக்கொள்ள வேண்டாம். .   எச்சரிக்கையாக இருங்கள்.
அ.உமர் பாரூக்

News

Read Previous

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!

Read Next

யாதுமாகி நின்றாய் வாசிப்பே !

Leave a Reply

Your email address will not be published.