தனிஒழுங்கும், பொதுஒழுங்கும்

Vinkmag ad
கட்டுரை பகிர்வு –  தனிஒழுங்கும், பொதுஒழுங்கும்
தொல் திருமாவளவன்
கீழ்ப்படிதல் என்பது பயன்கருதுதல், மதிப்பளித்தல், அச்சப்படுதல் என்னும் அடிப்படையில் நிகழ்வதாகும். பயன்கருதிக் கீழ்ப்படிதல் தன்னலமாகும். அச்சப்பட்டுக் கீழ்ப்படிதல் தற்காப்பாகும். மதிப்பளித்தும் கீழ்ப்படிதல் நல்லியல்பு ஆகும்.
பயன்கருதிக் கீழ்ப்படிதலும் அச்சப்பட்டுக் கீழ்ப்படிதலும் ஏதேனும் ஒரு பொழுதில் மீறப்படும். தன்னுடைய எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது, உரிய பயனேதும் கிட்டாதபோது, பயன்கருதிக் கீழ்ப்படியும் ஒருவருக்கு அதை மீறவேண்டிய தேவை எழும்! தன்னுடைய நலனை, தனக்கான பயனை முன்னிறுத்தும் ஒருவர் தான்சார்ந்த அமைப்புக்கோ, தான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கோ கீழ்ப்படிதல் அல்லது கட்டுப்படுதல் என்பது ஓர் இடைக்கால நடவடிக்கையே ஆகும். பெரும்பாலும் அது நீடிப்பதில்லை. பயன்கிட்டும் வரையில் கீழ்ப்படிவதைப் போன்ற ஒரு தோற்றமே வெளிப்படும். பயன்கிட்டிய பின்னரோ, அல்லது பயன்கிட்டாத நிலையிலோ கீழ்ப்படிதல் தொடராது. அதற்கு நேர்மாறாகச் செயற்படுதல் நிகழும். அவமதிப்பது, அவதூறு பரப்புவது போன்றவை மேலோங்கும். அமைப்பாக்க நடவடிக்கையில், பயன்கருதிக் கீழ்ப்படியும் போக்கானது இத்தகு எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும். அச்சப்பட்டுக் கீழ்ப்படிதல் என்பதும் இடைக்கால நடவடிக்கையே ஆகும். அச்சம் விலகும்போது கீழ்ப்படிதல் மீறப்படும். அச்சத்திலிருந்து விடுபடும் நிலையில் நிகழும் மீறலானது, மிக வேகமான எதிர் விளைவுகளை உருவாக்கும். அச்சத்தால் உருவான அழுத்தம், அச்சப்பட்டோரை ஆவேசமாய் வெடித்தெழ வைக்கும்.
அச்சத்தின் பிடியில் வெளிப்படும் கீழ்ப்படிதல், தவிர்க்க முடியாத நெருக்கடியால் விளைவதேயன்றி மனமொப்பி நிகழ்வதல்ல. மனமொவ்வாக் கீழ்ப்படிதல் ஏதேனும் ஒரு நொடியில் கட்டறுத்துத் தாறுமாறாய் எகிறும்! அச்சுறுத்துவோருக்கு எதிராகப் பாயும்! அச்சுறுத்துவதோ அச்சுறுத்தலின் மூலம் கீழ்ப்படிவதோ நீடித்திருக்கவும் நிலைத்திருக்கவும் இயலாது. எனினும், ஒழுங்கு செய்வதற்கான கீழ்ப்படிதல் என்னும் நடைமுறைக்கு, அச்சுறுத்தல் என்பது மிகக் குறைந்த அளவிலேனும் இன்றியமையாத தேவையாகும். அதுவும் தனிநபரை முன்னிறுத்தி அமைதல் கூடாது. அமைப்பை முன்னிறுத்தி ஒழுங்கு நடவடிக்கை என்னும் வகையில் அது அமைதல் வேண்டும். ஒருவர் இன்னொருவரை தனது ஆள்வலிமை, அதிகார வலிமை ஆகியவற்றின் மூலம் அச்சுறுத்திக் கீழ்ப்படிய வைப்பது பகைமைக்கும் பழிவாங்குதலுக்கும் இடம் கொடுக்கும். ஆனால், அமைப்பை முன்னிறுத்தும்போது, அமைப்பின் சட்டம் மற்றும் விதிமுறைகளும் மரபுசார்ந்த நடைமுறைகளும் ‘கீழ்ப்படிதலுக்கான’ வழிமுறைகளை உருவாக்கும். அது தனிநபர் பகைமைக்கு இடம் கொடுக்காது. ஏனெனில், அமைப்புக்கான சட்டமும் விதிமுறைகளும் தனியொருவருக்கு எதிரானவையல்ல. அமைப்பைச் சார்ந்துள்ள அனைவருக்கும் பொதுவானவை. எனவே, அமைப்பை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையின்போது, சட்டமே முதன்மையான பங்கு வகிக்கிறது. அத்தகைய சட்டத்தையும் அதற்கான விதிமுறைகளையும் முன்னிறுத்தும்போது, அவை அமைப்பின் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதாக அமையும். சட்டத்தின் வழியிலான அச்சுறுத்தல், பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இன்றியமையாத தேவையாக அமையும்.
பொதுவாக, சட்டம் பாதுகாப்புக்கானது என்றும் அச்சுறுத்துவதற்கானது என்றும் அறியப்படுகிறது. ஒரு புறம் அச்சுறுத்துவதிலிருந்தே இன்னொருபுறம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. அதாவது, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இன்றியமையாத ஒன்றாகிறது. சட்டம், யாருக்காக யாரால் உருவாக்கப் படுகிறதோ அவர்களுக்குப் பாதுகாப்பானதாகவும், பிற யாவருக்கும் அச்சுறுத்தலாகவும் விளங்கும். இத்தகைய அச்சுறுத்தலின் மூலம் உருவாகும் கீழ்ப்படிதலிலிருந்து ஒழுங்கு கட்டமைக்கப்படுகிறது. அரசமைப்புக்கான சட்டம் தேசத்திற்கான ‘பொது ஒழுங்கையும்’, சாதி-மத அமைப்புகளுக்கான சட்டங்கள் தொடர்புடைய ‘சமூக ஒழுங்கை’யும், வணிக நிறுவனங்கள்-தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுக்கான சட்டங்கள், தொடர்புடைய ‘நிறுவன ஒழுங்கை’யும், அரசியல் இயக்கங்கள்-இலக்கிய அமைப்புகள் போன்றவற்றுக்கான சட்டங்கள் தொடர்புடைய ‘அமைப்பு ஒழுங்கை’யும் கட்டமைக்கின்றன. இவ்வாறு சட்டங்கள் பெரும்பாலும் அவற்றை உருவாக்கியோர் விரும்பும் ஒழுங்கைக் கட்டமைப்பதற்கான ஆற்றல்களாக விளங்குகின்றன. அதாவது, சட்டம் என்பது பாதுகாப்பு மற்றும் தண்டனைக் கானது எனப் புரிந்துகொள்வதைவிட, ஒழுங்கமைவுக்கானது என்பதே சரியாகும். ஒழுங்குபடுத்துவதே சட்டத்தின் அடிப்படையாகும். ஓர் அமைப்பு தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக்கொள்ளவும், தன்னைச் சார்ந்த சமூகத்தை ஒழுங்குபடுத்தவும் மேற்கொள்கிற நடவடிக்கைகளிலிருந்தே பாதுகாப்பும் தண்டனையும் விளைகின்றன. சட்டம் பாதுகாக்கும்! சட்டம் தண்டிக்கும்! அவற்றைவிட, சட்டம் ஒழுங்கு செய்யும்! அத்தகைய ஒழுங்குமுறைக்கு முதன்மையானது கீழ்ப்படிதலாகும். தண்டனை என்னும் அச்சுறுத்தலின் மூலம் சட்டம் இத்தகைய கீழ்ப்படிதலை உருவாக்குகிறது.
அமைப்பாக்க நடவடிக்கையில், அமைப்பு தன்னைத் தானே ஒழுங்குபடுத்திக்கொள்ளுதல் நிகழும். அமைப்புக்கான சட்டம் மற்றும் விதிகள், அத்தகைய ஒழுங்குபடுத்துதலை மேற்கொள்ளும். அமைப்பை ஒழுங்குபடுத்துவதற்கென வரையறுக்கப்படும் சட்டம் மற்றும் விதிகள், பாதுகாப்பையும் அச்சுறுத்தலையும் உறுதிப்படுத்தக்கூடிய வகையில் நடைமுறையில் இருத்தல் வேண்டும். அமைப்பின் சட்டத்தை ஏற்று, மதித்து, பின்பற்றுவோருக்குப் பாதுகாப்பும், சட்டத்தை ஏற்கவோ, மதிக்கவோ, பின்பற்றவோ மறுக்கும், எதிர்க்கும், மீறும் அமைப்பு சார்ந்தோருக்குத் தண்டனையும் வழங்குவதாக சட்டம் கையாளப்படுதல் வேண்டும். அமைப்பாக்கப் பணியில் ஈடுபடுவோர், அத்தகைய சட்ட விழிப்புணர்வும், சட்டத்துக்குக் கட்டுப்படும் பொறுப்புணர்வும், சட்டத்தை நடைமுறைப் படுத்தும் கடமையுணர்வும் பெற்றிருத்தல் வேண்டும். சட்டத்தை உருவாக்குவோர், சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர் அச்சட்டத்தை மதிக்கவும் பின்பற்றவும் வேண்டும். அதாவது, சட்டத்திற்குக் கட்டுப்பட்டு கீழ்ப்படிதல் வேண்டும். அதிகாரம் வாய்ந்த பொறுப்பாளர்கள் மட்டுமின்றி அமைப்பைச் சார்ந்த அனைத்துக் களப்பணியாளர்களுமே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கடமைக்குரியவர்களே ஆவர். அவ்வாறு சட்டத்தை நடைமுறைப்படுத்துதலும் சட்டத்துக்குக் கீழ்ப்படிதலேயாகும்.
இவ்வாறு, சட்டத்திற்கோ, தனிநபருக்கோ கீழ்ப்படிதலானது, பயன் கருதியோ அல்லது அச்சுறுத்தலினாலோ நிகழ்கிறது. இத்தகைய கீழ்ப்படிதல், அமைப்பாக்கப் பணிக்களத்தில், அடிப்படை நோக்கமான ஒழுங்குபடுத்து தலுக்குப் பெரும்பாலும் ஏதுவாக அமையாது. மாறாக, சட்டத்திற்கும் தனிநபருக்கும் ‘மதிப்பளித்தல்’ என்னும் அடிப்படையில் நிகழும் கீழ்ப்படிதல்தான் அமைப்பை ஒழுங்குபடுத்துவதற்கு ஏதுவாக அமையும். அமைப்பை, அமைப்புக்கான சட்டத்தை, அமைப்புக்கான கொள்கை-கோட்பாடுகளை, அமைப்பின் தலைமையை, அமைப்புக்குரிய களப்பணியாளர்களை மதிப்பதன் மூலம் கீழ்ப்படிவது ஒழுங்குசெய்தலை மிக எளிதாக்கும். பயன்கருதாத மதிப்பு! அச்சுறுத்தல் இல்லாத மதிப்பு! நம்பிக்கை மற்றும் நன்றியுணர்வுடன் கூடிய மதிப்பு! மனமுவந்த மதிப்பு! நல்லுறவுக்கான மதிப்பு! ஒத்துழைப்புக்கான மதிப்பு! கொள்கை – கோட்பாட்டுப் புரிதலுடன் கூடிய மதிப்பு! இவ்வாறான மதிப்பை அளிப்பதன் மூலம் நிகழும் கீழ்ப்படிதல்தான் ஒழுங்கமைவுக்கான இன்றியமையாத தேவையாகும்.
அதாவது, மதிப்பளித்தல் என்பது புரிந்துகொள்ளுதல், உடன்படுதல் மற்றும் ஒத்துழைத்தல் என்னும் வழிமுறையில் நிகழ்தல் வேண்டும். புரிந்துகொள்ளுதலின்றி உடன்படுதல் இல்லை; உடன்படுதலின்றி ஒத்துழைத்தல் இல்லை; ஒத்துழைத்தலின்றி மதிப்பளித்தல் இல்லை; மதிப்பளித்தலின்றி கீழ்ப்படிதல் இல்லை; கீழ்ப்படிதலின்றி ஒழுங்கமைதல் இல்லை; ஒழுங்கமைதலின்றி ஒருபோதும் அமைப்பாதல் இல்லை; அமைப்பாதலின்றி திரள்வலிமை இல்லை; திரள்வலிமையின்றி தொடர்ச்சி யான எதிர்ப்பாற்றல் இல்லை; தொடர்ச்சியான எதிர்ப்பாற்றலின்றி ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் போன்றவற்றிலிருந்து மீட்சி இல்லை; மீட்சி பெறுதலின்றி ஒடுக்கப்பட்டோரின் அல்லது விளிம்புநிலை மக்களின் அடுத்த தலைமுறையினருக்குப் பாதுகாப்பில்லை. இந்நிலை உருவானால், பாதுகாப்பற்ற ஒரு வாழ்க்கையினையே அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் பெரும் கேடு தொடரும். எனவே, அடுத்தடுத்த தலைமுறையினரின் பாதுகாப்புக்கு அமைப்பாதல் இன்றியமையாத தேவையாகும்.
அதாவது, அமைப்பாதலின் நோக்கமானது, அடுத்த நாட்களின் பயன்களுக்காக அல்ல; அடுத்த தலைமுறையின் பாதுகாப்புக்காக! பொருளை, புகழைத் தேடுவதற்காக அல்ல; போராடிப் பகையை வெல்வதற்காக! தலைக்கனத்தைப் பெருக்குவதற்காக அல்ல; தலைநிமிர்வைப் பெறுவதற்காக! ஆதிக்க வெறியை வளர்ப்பதற்காக அல்ல; அடிமைநிலையைப் போக்குவதற்காக! எளியோரை ஏய்ப்பதற்காக அல்ல; ஏய்ப்போரைச் சாய்ப்பதற்காக! சர்வாதிகாரம் நிலைப்பதற்காக அல்ல; சனநாயகம் தழைப்பதற்காக! ஒரு சிலர் ஆள்வதற்காக அல்ல; ஒடுக்கப் பட்டோர் மீள்வதற்காக! இவ்வாறு அமைப்பாதலின் அடிப்படையைப் புரிந்துகொள்ளுதலும், புரிதலுக்கேற்ப உடன்படுதலும், உடன்படுவதோடு ஒதுங்கிவிடாமல் ஒத்துழைத்தலும் அமைப்புக்கு மதிப்பளிக்கும் செயல் முறையாகும். அமைப்புக்கு மட்டுமின்றி அமைப்பைக் கட்டமைக்கும், வழிநடத்தும் யாவருக்கும் இவ்வாறே மதிப்பளித்தல் வேண்டும்.
அமைப்பைப் புரிந்துகொள்ளுதல் என்பது, அமைப்பின் கட்டமைப்பு, களம், சட்டம், கொள்கை-கோட்பாடுகள் போன்றவற்றைப் பற்றியும், அமைப்பை வழிநடத்தும் முன்னோடிகள், களப்பணியாளர்கள், அமைப்பைச் சார்ந்த மக்கள் போன்ற யாவற்றைப் பற்றியும் முழுமையாகவோ, பகுதியாகவோ தேவையின் அடிப்படையில் தெளிவு பெறுதலாகும். இவ்வாறு தெளிவுபெறுவதிலிருந்து உடன்படுதலும் முரண்படுதலும் நிகழும். தெளிவுபெறாமல் உடன்படுவதானாலும் முரண்படுவதானாலும் அது எதிர்மறை விளைவுகளை உருவாக்கும். ஒழுங்கமைவுக்கு இடம் தராது. போதிய தெளிவுடன் முரண்படுவதும் நன்மை பயப்பதாகவே அமையும். ஒழுங்கு செய்வதற்கு வழிவகுக்கும். அமைப்பையும், மக்களையும், அமைப்பு சார்ந்த அனைத்தையும் முழுமையான ஈடுபாட்டுடன் நேசிப்பதன் மூலமே அவற்றைப் புரிந்துகொள்ளவும் உடன்படவும் ஒத்துழைக்கவும் இயலும்; ஒழுங்குசெய்யவும் ஒழுங்கைப் பின்பற்றவும் இயலும்!
ஒழுங்கமைவுக்கு உடன்படுதல் மட்டுமின்றி முரண்படுதலும் தவிர்க்க இயலாத தேவையாகும். முரண்படுதல், ஒழுங்கமைவுக்கு எதிரானதாக, ஒழுங்கமைவைச் சீர்குலைப்பதாக அமையாமல், உடன்படுவதற்கான திசைவழி செல்வதாக அமைதல் வேண்டும். அதாவது, அமைப்பை முறைப்படுத்துவதற்குரியதாக முரண்படுதல் அமைவது, உடன்படுவதற்கான திசைவழியே ஆகும். பொதுவாக, முரண்படுதலானது, எதிர்மறை அணுகுமுறையாகவே அறியப்படுகிறது. ஏற்கவியலாத, பயனில்லாத, தீங்கான எதனோடும் உடன்பட்டுவிட இயலாது. முரண்பட நேரும். அவ்வாறு முரண்படுகிறபோதும் அதனை நேர்மறையாக அணுக முடியும். முரண்பாடுகளையும் உடன்பாட்டுத் திசைநோக்கி அணுகுவது நேர்மறை யான அணுகுமுறையாகும். நேசம், தோழமை, நம்பிக்கை போன்றவற்றி லிருந்துதான் நேர்மறை அணுகுமுறை உருவாக்கம் பெறும். முரண்பாடு களையும் நேர்மறையாக அணுகுவது ஒருங்கமைவுக்கு அடிப்படைத் தேவையாகும்.
ஒழுங்கு என்பது நெறிமுறையாகும். வரையறுக்கப்பட்ட சட்டங் களையோ, ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகளையோ தேவையின் அடிப்படையில் பின்பற்றுவதற்கான ஒரு வழிமுறையாகும். தனிநபர், குடும்பம், சாதி, மதம், இனம், தேசம், உலகம் போன்ற அனைத்திலும், ஒழுங்கு என்பது தவிர்க்க இயலாத தேவையாகும். ஒழுங்கு இல்லாத தனிநபராயினும் வேறு எதுவாயினும் வலுப்பெறவோ வளர்ச்சி பெறவோ வாய்ப்பில்லை. வலிமைக்கும் வளர்ச்சிக்கும் ஒழுங்கு மிகமிக இன்றியமையாததாகும். தனிநபராகவோ, குழுவாகவோ, அமைப்பாகவோ, நிறுவனமாகவோ இன்னும் இவை போன்று எதுவாகவோ இருப்பினும் அவை யாவற்றுக்கும் இது பொருந்தும்.
ஆக்கமாயினும் அழிவாயினும், நன்மையாயினும் தீமையாயினும் அவற்றுக்கும் ஒழுங்கு அடிப்படைத் தேவையாகும். ஒழுங்குமுறையின்றி எந்தவொன்றையும் விரும்பியவாறு ஆக்கவோ அழிக்கவோ இயலாது; எதிர்பார்க்கும் நன்மையோ தீமையோ விளையாது! ஒழுங்கானது, ஆக்கத்திற்கும் நன்மைக்கும் மட்டுமில்லை; அழிவுக்கும் தீமைக்கும் உரியதாகும்! நன்மைக்குரியது நல்லொழுக்கம்! தீமைக்குரியது தீயொழுக்கம்! அதாவது, ஆக்கமோ, அழிவோ; நன்மையோ; தீமையோ ஒவ்வோர் இயங்குதலிலும் அல்லது செயலிலும் ஓர் ஒழுங்கு தன்னியல்பாகவோ அல்லது வரையறுக்கப்பட்டதாகவோ அமையும். ஏதேனும் ஓர் ஒழுங்கின் அடிப்படையில்தான் உலகில் ஒவ்வொன்றின் இயக்கமும் நிகழ்கின்றன. அதாவது, ஒழுங்கிலிருந்தே இயங்குதல் தொடங்குகிறது. ஒழுங்கே இயங்கியலின் அடிப்படையாகும்.
இயங்குதல் என்பது, அசைதலை மட்டுமே குறிக்காது. அசையாதலையும் குறிக்கும். அசைதலும் அசையாதலும் இயங்குதலேயாகும். அசையாதல் என்று எதுவுமே இல்லை. யாவும் அசைந்து கொண்டேயிருக்கின்றன. கூடுதல் காலமும் குறைந்த வேகமும் கொண்டவை அசையாத் தோற்றத்தையும், கூடுதல் வேகமும் குறைந்த காலமும் கொண்டவை அசையும் தோற்றத்தையும் அளிக்கின்றன. அதாவது, வேகத்தின் அளவையும் காலத்தின் அளவையும் பொறுத்தே அசையும் மற்றும் அசையா நிலைகள் வெளிப்படு கின்றன. எனவே, அசைதலும் அசையாதலும் இயங்குதலே ஆகும். ஒன்றின் அசையா நிலையிலிருந்தே இன்னொன்றின் அசையும் நிலை தோன்றுகிறது. ஒன்று அசையாமலிருந்துகொண்டே இன்னொன்றை அசையவைக்கிறது. அசையா நிலையிலிருந்து இன்னொன்றின் அசையும் நிலைக்குரிய ஆற்றலைப் பெறுவது ஓர் ஒழுங்குமுறையாகும். ஒன்றின் திசைக்கு எதிர்த்திசையும் ஒன்றின் விசைக்கு எதிர்விசையும் ஒன்றுக்கொன்று ஈர்த்தும் விலக்கியும் இயங்குதலுக்குரிய ஆற்றலைப் பெறுகின்றன. இவ்வாறு ஆற்றலைப் பெறும் முறை ஓர் ஒழுங்குமுறையாகும்.
அசையா நிலைக்குரிய ஆற்றலும் அசையும் நிலைக்குரிய ஆற்றலும் ஒன்றுக்கொன்று இணைந்தோ விலகியோ சமநிலைப்படுத்திக்கொள்ளும் தன்னியல்பான போக்கே இயங்குதலாகும். இவ்வாறு இணைந்தும் விலகியும் சமநிலைப்படுத்திக்கொள்ளும் முறையும் ஓர் ஒழுங்குமுறையாகும். ஆற்றலைச் சமநிலைப்படுத்தும் இயங்குதலில் ஆக்கமும் நிகழலாம்! அழிவும் நிகழலாம்! ஆனாலும், ஆற்றல் சமநிலையாதல் நிகழ்ந்துகொண்டே யிருக்கும். இவை யாவும் ஓர் ஒழுங்கின் அடிப்படையிலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு ஒழுங்கிலிருந்து இயங்குதல் நிகழ்வதால் ஒழுங்கே இயங்கியல் என அறியலாம். இயற்கையில் தன்னியல்பாக அமைந்துள்ள ஒழுங்குமுறைகளை இயங்கியல் விதிகள் எனவும் அறியலாம்.
இயற்கையின் ஒழுங்குமுறைகள் என்னும் இயங்கியல் விதிகளின் அடிப்படையில்தான் மனிதனால் இயங்கிட இயலும். இயங்கியல் விதிகளை அவனால் மீறிட இயலாது. அவற்றையொட்டியே அவன் தனக்கான வாழ்க்கை முறையை, இயங்குமுறையை, ஒழுங்குமுறையை வரையறுத்துக் கொள்கிறான். அவை அவ்வப்போது வரையறுக்கப்படுவதாகவும் காலம் காலமாய்க் கடைப்பிடிக்கப்படும் மரபு முறைகளாகவும் இருக்கலாம். சட்டம் மற்றும் விதிகளாயினும் வழக்காறு மற்றும் மரபுகளாயினும் இயங்கியல் விதிகளோடு உடன்பட்டோ முரண்பட்டோ அமையும் வகையில் மனிதனால் அவை வரையறுக்கப்படுகின்றன. அவை, தனிமனித ஒழுங்கு, குடும்ப ஒழுங்கு, சாதி ஒழுங்கு, மத ஒழுங்கு, இன ஒழுங்கு, தேச ஒழுங்கு என சட்டங்களாலும் மரபுகளாலும் கட்டமைக்கப்படுகின்றன. அவற்றை மீறும் நிலையில் தண்டனைகளால் இத்தகைய ஒழுங்குமுறைகள் திணிக்கப்பெற்று நிலைப்படுத்தப்படுகின்றன. தாம் விரும்பும் ஒழுங்கை நிலைநாட்டுவதற் கேற்ப, அதற்குரிய ஆளுமையைக் கொண்டவன் மரபுகளையும் சட்டங் களையும் தண்டனைகளையும் திட்டமிட்டு வரையறுக்கவும் திணிக்கவும் செய்கிறான். இவற்றை ஏதேனும் ஓர் அமைப்பு வழியாகவே நடைமுறைப் படுத்துகிறான். பெரும்பாலும், மதம், அரசு ஆகிய அமைப்புகளின் வழியாகவே ஒழுங்கை நிலைநாட்டிவருகிறான். இவை இரண்டும் மனிதனால் நிறுவப்பட்டுள்ள மாபெரும் ‘ஒழுங்கு நடவடிக்கை’ அமைப்புகளே ஆகும். இவை, தனிமனித ஒழுங்கையும், சமூக ஒழுங்கையும், பொது ஒழுங்கையும் தொடர்ச்சியாகக் கற்பிக்கவும் நடைமுறைப்படுத்தவும் செய்கிற நிறுவனங்களாக இயங்குகின்றன. மத நிறுவனங்களின் கொள்கை – கோட்பாடுகளாக அவற்றின் வேதங்களும்; சட்டம்-விதிகளாக அவற்றின் சடங்கு உள்ளிட்ட பண்பாட்டு வழக்காறுகளும் விளங்குகின்றன. அரசு நிறுவனங்களின் கொள்கை – கோட்பாடுகளாக, முதலாளித்துவம் அல்லது சனநாயகம் போன்ற ஆட்சிமுறை தத்துவங்களும்; சட்டம் மற்றும் விதிகளாக, அரசியலமைப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டத் துறை, நீதித் துறை, நிர்வாகத் துறை போன்ற அனைத்துத் துறைகளுக்குமான சட்டங்களும் விளங்குகின்றன. இவ்வாறு மதமும் அரசும் தமக்கான ஒழுங்கை நிலைநாட்டுவதற்குரிய கொள்கை-கோட்பாடுகளின் அடிப்படையில், சட்டங்களையோ, மரபுகளையோ வரித்துக்கொள்கின்றன. தனிமனித ஒழுங்கையும் சமூக ஒழுங்கையும் கற்பிப்பதில் அரசைவிட மதமே பெரும்பங்கு வகிக்கிறது. மதங்கள் கற்பிக்கும் ஒழுங்கு ஏற்புக்குரியதாகவோ எதிர்ப்புக்குரியதாகவோ இருக்கலாம்.
எனினும், ஏற்போர் யாவரையும் வரையறுக்கப்பட்ட கருத்தியல் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் ஒழுங்குபடுத்துவதே மதத்தின் முதன்மையான செயல்திட்டமாகும். மதம் தாம் கற்பிப்பதை தெளிவுடனோ தெளிவின்றியோ மக்கள் ஏற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் செய்கிறது. அவ்வாறு ஏற்றுக் கொள்ளாத, பின்பற்றாத யாவரையும் கடுமையான தண்டனைகளால், கொடூரமான வன்முறைகளால் அடக்கி ஒடுக்குவதில் மத நிறுவனங்களின் பங்களிப்பு மிகப் பெரியது! இத்தகு தண்டனைகளும் வன்முறைகளும் கீழ்ப்படிதலை நிலைநாட்டுவதற்கான நெறிமுறைகளாகும். அதாவது, கற்பித்தலும் தண்டித்தலும் மதம் சார்ந்தோரை ஒழுங்குபடுத்தும் நெறிமுறைகள் என அறியலாம்.
ஒவ்வொரு மதத்திலும், இன்று நிலவும் ஒழுங்கோ, கட்டுப்பாடோ, தலைமுறை தலைமுறையாய், தொடர்ச்சியாய், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் மேற்கொள்ளப்பட்டுவரும் கற்பித்தல் மற்றும் தண்டித்தல் போன்ற நெறிமுறைகளின் விளைவாகும். எனினும் இன்றும் மதம் சார்ந்த சமூக ஒழுங்கை அல்லது கட்டுப்பாட்டை மீறும் நிலை பரவலாக உள்ளது. அரசமைப்பிலும் இதே நிலை காலம் காலமாகத் தொடர்கிறது. கடுமையான அடக்குமுறைச் சட்டங்களால், இன்று நிலவும் பொது ஒழுங்கை அரசு நிலை நாட்டியுள்ளது. எனினும் பொது ஒழுங்கை மீறுவது இன்னும் இருக்கவே செய்கிறது. மதம், அரசு என்னும் இருபெரும் பூதங்களாலேயே இன்னும் முழுமையாக மானுடத்தை ஒழுங்குபடுத்துவதில் வெற்றிபெற இயலவில்லை எனலாம். சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், தேசத்தின் பெயரால் அரங்கேறிக்கொண்டேயிருக்கும் கொடூரமான வன்முறைகள், அதற்குச் சாட்சியங்களாக விளங்குகின்றன. இவை இன்றும் பொது ஒழுங்கைச் சீர்குலைக்கின்றன. பொது ஒழுங்கானது சமூக ஒழுங்கு மற்றும் தனிமனித ஒழுங்கு ஆகியவற்றைப் பொறுத்தே அமையும். அதாவது, தனிமனித ஒழுங்கு எவ்வாறு கட்டமைப்படுகிறதோ அவ்வாறே சமூக ஒழுங்கும் பொதுஒழுங்கும் கட்டமைக்கப்பெறும்.
அமைப்பாக்க நடவடிக்கையில், அமைப்புக்கான பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, அமைப்பைச் சார்ந்த ஒவ்வொருவரின் தனிமனித ஒழுங்கும் இன்றியமையாத கூறாக விளங்கும். நேர்மறையான தனிமனித ஒழுங்கு என்பது ஏற்றுக்கொண்ட அமைப்புக்கு, குறிப்பாக அமைப்பைச் சார்ந்தோருக்கு, உரிய மதிப்பை அளிப்பதாக விளங்கும். அதாவது, அமைப்புக்கு, அமைப்பின் கொள்கை – கோட்பாடுகளுக்கு, சட்டம் மற்றும் விதிகளுக்கு, அமைப்பை வழிநடத்தும் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உரிய அளவில், உரிய வகையில் மதிப்பளித்தலைக் குறிக்கும்.
தான் சார்ந்த அமைப்புக்கு ஒவ்வொரு தனிநபரும் வற்புறுத்தலின்றி அச்சுறுத்தலின்றி உடன்பட்டு, தானே உரிய மதிப்பளித்தல் வேண்டும். அமைப்பைச் சார்ந்த மற்றவர்கள் அவ்வாறு அமைப்புக்கு மதிப்பளிக் கிறார்களா இல்லையா எனப் பாராமல், தனக்கென்ன பயன் என்றும் கருதாமல், தன்னியல்பாகவும் உளப்பூர்வமாகவும் தனது கடமையென உணர்ந்து மதிப்பளித்தல் வேண்டும். அவ்வாறின்றி, தான் விரும்பினால் மட்டுமே அல்லது வற்புறுத்தினால் மட்டுமே அல்லது அச்சுறுத்தினால் மட்டுமே தவிர்க்க இயலாத நிலையில் மதிப்பளிப்பது, அமைப்பின் பொது ஒழுங்கைப் பாதிக்கச் செய்யும்.
தனக்கென ஒதுக்கப்பட்ட பணிகளை, ஒதுக்கப்பட்ட எல்லைக்குள் நின்று, உரிய காலத்தில், உரிய முறையில், உரியவர்களுடன் ஒருங்கிணைந்து, பொறுப்புணர்ந்து நிறைவேற்றுவது அமைப்புக்குரிய தனிநபர் ஒழுங்காகும்.
தான் ஏற்றுக்கொண்ட அல்லது தனக்கென ஒதுக்கப்பட்ட பணிகளைத் தாண்டி, தொடர்புடையவையாக இருப்பினும் பிறவற்றில் தலையிடுவது தனிநபர் ஒழுங்கு மற்றும் பொதுஒழுங்கை மீறுவதாகும். அதிகாரம் வாய்ந்த பொறுப்பிலே இருந்தாலும் அடிப்படைத் தொண்டாற்றும் நிலையிலே இருந்தாலும் தனக்கான பணிகளை மட்டுமே ஆற்றுதல் வேண்டும். அவ்வாறின்றி செய்ய வேண்டியவற்றைச் செய்யாமலிருத்தலும், செய்யக் கூடாதவற்றை செய்வதும் ஒழுங்கு மீறலாகும். அதேபோல, செயலாற்ற வேண்டிய களம் அல்லது துறை, பகுதி அல்லது பரப்பு, நேரம் அல்லது காலம், ஆற்றவேண்டிய பணிகளுக்குரிய தொடர்புகள் அல்லது உறவுகள் போன்ற வற்றின் எல்லைகளுக்குள் நின்று இயங்குதல் வேண்டும். அவ்வாறின்றி, எல்லைகளை மீறிச் செயல்படுவது ஒழுங்கு மீறலாகும். இவ்வாறு, தான் சார்ந்த அமைப்பு அல்லது நிறுவனங்களின் பொது ஒழுங்கையும் அடிப்படையாகக் கொண்டதாகவே தனிநபர் ஒழுங்கு அமையும். எனவே, பொது ஒழுங்கை மீறுவது, தனிநபர் ஒழுங்கை மீறும் செயலாகும்.
தனிநபர் ஒழுங்கு என்பது தனிநலன்களை மட்டுமின்றி பொது நலன்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும். தான் சார்ந்த குடும்பம், சாதி, மதம், இனம், தேசம் என பல்வேறு அமைப்புகளின் பொது நலன்களையும் அடிப்படையாகக்கொண்டு பொது ஒழுங்கும் தனிநபர் ஒழுங்கும் உள்வாங்கப்படுகின்றன. அதாவது, ஒருவரின் குடும்ப ஒழுங்கு, சாதி ஒழுங்கு, மத ஒழுங்கு, இன ஒழுங்கு மற்றும் தேச ஒழுங்கு போன்ற பொது ஒழுங்குகள் அவர் விரும்பியோ விரும்பாமலோ அவரது தனிஒழுங்கைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவை நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ ஒவ்வொரு தனிநபரின் தனி ஒழுங்கைக் கட்டமைப்பதில் தாக்கம் செலுத்துகின்றன. இவற்றில் உடன்பாட்டின் அடிப்படையில் அல்லது ஈடுபாட்டின் அடிப்படையில் உள்வாங்கப்படும் ஒழுங்குமுறைகளே தனிநபர் ஒழுங்காக வடிவம் பெறுகிறது. இவ்வாறு தனக்கு உடன்பாடான, தான் சார்ந்த அமைப்பின் பொதுஒழுங்குகளை மதிப்பதும் கட்டுப்படுவதும் பின்பற்றுவதும்தாம் சிறப்பான தனிநபர் ஒழுங்காக அமையும். இல்லையேல், பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும் தனிநபர் ஒழுங்கு மீறலாக விளங்கும்.
அமைப்பாக்க நடவடிக்கையில், அமைப்பின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட, அமைப்புக்கான பொது ஒழுங்கை மதிப்பது, கட்டுப்படுவது, பின்பற்றுவது மிகமிக இன்றியமையாதவையாகும். பயன்கருதுதல், அச்சுறுத்தலுக்காளாகுதல் போன்ற தன்னலன் சார்ந்ததாக இல்லாமல், அமைப்பு நலன்கள் மற்றும் அமைப்பு சார்ந்தோரின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு, அமைப்பின் பொது ஒழுங்கைத் தன்னியல்பாகவே மதிக்கவும் கட்டுப்படவும் பின்பற்றவும் வேண்டும்.
குடும்பம், சாதி, மதம் போன்ற சமூக அமைப்புகளின் பொது ஒழுங்கு களை மதிப்பதிலிருந்து தனிநபர் ஒழுங்கு கட்டமைக்கப்படுவதைப்போல ஏற்கனவே கட்டமைக்கப்பெற்றுள்ள தனிநபர் ஒழுங்கிலிருந்தே பொதுஒழுங்கும் உள்வாங்கப்படும். அதாவது, தான் சார்ந்த அமைப்பின் பொதுஒழுங்குகளுக்கு மதிப்பளிப்பதற்கும் தனிநபர் ஒழுங்கு அத்தகைய பக்குவத்தைப் பெற்றதாகப் பண்பட்டிருத்தல் வேண்டும். உடன்பாடான பொது ஒழுங்குகளையும் உள்வாங்கக்கூடிய வகையில், தனிநபர் ஒழுங்கு ஆளுமை பெற்றதாக இருத்தல் வேண்டும். அடிப்படையில், பொது நலன்களில் ஈடுபாடும் உடன்பாடும் இருந்தால் மட்டுமே பொது ஒழுங்குகளை உள்வாங்க இயலும். தனிநலன்களில் சற்றுத் தளர்வு செய்வதும் விட்டுக்கொடுப்பதும் இழப்பதும் போன்ற அணுகுமுறைகளிலிருந்துதான் பொது நலன்களில் ஈடுபாடு காட்டவும் உடன்படவும் இயலும். தான் சார்ந்த குடும்ப ஒழுங்குகளைப் பின்பற்றுவதற்கும் குடும்ப நலன்களில் ஈடுபாடு கொள்ளுதல் வேண்டும். குடும்ப நலன்களில் ஈடுபாடுகொள்வதற்கும் தனி நலன்களில் ஏதேனும் விட்டுக்கொடுப்பதற்கும் இழப்பதற்கும் உடன்படுதல் வேண்டும். அவ்வாறே, அமைப்பாக்க நடவடிக்கையில், அமைப்பின் ஒழுங்குகளைப் பின்பற்றுவதற்கு அமைப்பின் நலன்களில் ஈடுபாடும் உடன்பாடும் தேவையாகும். அமைப்பு நலன்களில் ஈடுபாடுகொள்வதற்கு, தனிநலன்களை விட்டுக்கொடுக்கும் தனிநபர் ஒழுங்கு அல்லது பண்பு இன்றியமையாததாகும். இத்தகைய தனிநபர் ஒழுங்கிலிருந்தே பொது ஒழுங்குகளை மதிக்கவும் பின்பற்றவும் இயலும்.
பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தனிநபர் ஒழுங்கும், தனிநபர் ஒழுங்கை வலுப்படுத்துவதற்குப் பொது ஒழுங்கும் ஒன்றுக்கொன்று இன்றியமையாத் தேவைகளாகும்.
தனிநபர் ஒழுங்காயினும் பொது ஒழுங்காயினும் அடிப்படையில் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிதல், பின்பற்றுதல் என்னும் பொதுப்பண்பு மிகவும் இன்றியமையாததாகும். இது தனிநபர் ஒழுங்கைக் கட்டமைப்பதற்கு அடித்தளமாகவும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு வழிமுறையாகவும் அமையும். கீழ்ப்படிவதிலிருந்தே பின்பற்ற இயலும்; பின்பற்றுவதிலிருந்தே வழிகாட்ட இயலும்! இது ஓர் ஒழுங்குமுறையாகும். இத்தகைய ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதற்கென வரையறுக்கப்படுபவையே அரசியல் – பொருளியல் தளங்களில் சட்டங்களாகவும் விதிமுறைகளாகவும், சமூகம் – பண்பாடு போன்ற தளங்களில் வழக்காறுகளாகவும் மரபுகளாகவும் அறியப்படுகின்றன.
அமைப்பாக்க நடவடிக்கையில், வரையறுக்கப்படும் சட்டங்களையும், விதிமுறைகளையும், உள்வாங்கப்படும் வழக்காறுகளையும், இன்னபிற மரபுகளையும் மதிக்கவும், கட்டுப்படவும், பின்பற்றவும் வேண்டியது ஒவ்வொருவரின் தனிநபர் ஒழுங்காகவும் பொது ஒழுங்காகவும் அமையும்.
சட்டமாயினும் மரபாயினும், இவற்றுக்கான ஒழுங்குமுறையில் வரிசைமுறை என்பது இன்றியமையாதவொரு வழிமுறையாகும். ‘ஒன்றன் பின் ஒன்று’ என்னும் வரிசை முறையானது, ஒழுங்குமுறையில் தவிர்க்க இயலாததாகும். முன்னிருந்து பின்-பின்னிருந்து முன்; மேலிருந்து கீழ்- கீழிருந்து மேல்; இடமிருந்து வலம்-வலமிருந்து இடம்; உள்ளிருந்து வெளியே- வெளியிருந்து உள்ளே; எளிமையிலிருந்து வலிமை – வலிமையிலிருந்து எளிமை; இளமையிலிருந்து முதுமை – முதுமையிலிருந்து இளமை; ஆணிலிருந்து பெண் – பெண்ணிலிருந்து ஆண்; பெரும்பான்மையிலிருந்து சிறுபான்மை – சிறுபான்மையிலிருந்து பெரும்பான்மை; வெற்றியிலிருந்து தோல்வி – தோல்வியிலிருந்து வெற்றி; பழமையிலிருந்து புதுமை – புதுமையி லிருந்து பழமை; மையத்திலிருந்து விளிம்பு – விளிம்பிலிருந்து மையம்… இப்படி யாவற்றிலும் ‘ஒன்றன் பின் ஒன்று’ என்னும் வரிசை முறையானது ஓர் ஒழுங்குமுறையாக, தன்னியல்பாகவோ திட்டமிட்டதாகவோ நடைமுறையி லிருக்கிறது. இவற்றுக்குக் கட்டுப்படுவதும் பின்பற்றுவதும் பொதுஒழுங்கிற் கான தனிநபர் ஒழுங்காகும்.
அமைப்பாக்கத்திற்கான களப்பணிகளில் இத்தகைய வரிசைமுறை என்னும் ஒழுங்குமுறைகள், ‘ஒன்றன் பின் ஒன்றாக’, ‘படிப்படியாக’, ‘அடுத்தடுத்து’ என்னும் வகையில், உரிய முறைப்படி, உரிய காலத்தில், உரிய வேகத்தில், பின்பற்றப்படவேண்டியது தவிர்க்க இயலாத தேவையாகும். அவ்வாறின்றி, வரிசைமுறைகளைப் பின்பற்றாமல், ஒழுங்குமுறைகளை மீறி, தன் விருப்பம்போல தான்தோன்றித் தனமாகச் செயல்படும் தனிநபர் ஒழுங்கு, அமைப்புக்கான பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும். எனவே, பொது ஒழுங்கைப் பாதிக்காத வகையிலான தனிநபர் ஒழுங்கின் மூலமே அமைப்பாக்கப் பணிகளை இடையூறுகளின்றி விரைவாகவும், சீராகவும், வெற்றிகரமாகவும் நிறைவேற்ற இயலும்.
தனிஒழுங்கு துணையின்றி பொதுஒழுங்கு அமையாது! – உரிய
பொதுஒழுங்கு அமைவின்றி அமைப்பாதல் நிகழாது!

 

News

Read Previous

அண்ணி

Read Next

சிறுவர்கள் ரசனை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடல்

Leave a Reply

Your email address will not be published.