குழந்தைகளுக்கு என்ன பெயர் சூட்டப்போகிறோம் !

Vinkmag ad

12.5.2015 அன்று தீக்கதிரில் பதிவேறிய கடவுளின் மாற்றுப்பாலினர் மசோதா
குறித்த எனது கட்டுரை …….

குழந்தைகளுக்கு  என்ன பெயர் சூட்டப்போகிறோம் !

–    மு.ஆனந்தன் –

முதல் முதலாக  திருநங்கைகள்  நலன்களுக்காக  ‘ மாற்றுப்பாலினர்
பாதுகாப்புச் சட்ட மசோதா 2014’ என்ற தனிநபர் தாக்கல் செய்த மசோதாவை
இந்திய பாரளுமன்றம் மேலவையில் நிறைவேற்றி கொஞ்சம் புண்ணியம் தேடி
கொண்டுள்ளது.  கட்சி அரசியல் கடந்து அனைவரும் இதை ஆதரித்து,
பாராளுமன்றத்தில் இன்னும் மனிதம் சற்றேனும் ஒட்டிக்கொண்டுள்ளதென ஆறுதல்
அளித்துள்ளனர். இச்சட்டத்தால் கார்ப்ரேட்டுகளுக்கு ஏதாவது பாதிப்பு
இருந்தால் அனைவரும் ஆதரித்திருப்பார்களா என்பது சந்தேகமே!  மேலும்
இம்மசோதா தாக்கல் செய்ததில் ஆதரித்ததில் அரசியல் இருந்தாலும், பெற்ற
தாயால், குடும்பத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்டு  ஒட்டு மொத்த சமூகத்தாலும்
கேலியும் கிண்டலுக்கும் சீண்டல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு பிச்சை
எடுப்பதற்கும் பாலியல் தொழிலுக்கும் மட்டுமே விதிக்கப்பட்ட திருநங்கைகள்
சமூகத்திற்காக நாடாளுமன்றத்தில் ஒலித்த முதல் சட்ட மசோதா என்பதற்காகவே
இதனை ஆரத்தழுவி வரவேற்க வேண்டும் !

திருநங்கைகளுக்கு சமூகம், கல்வி , வேலை,  மருத்துவம், பொது
வசதிகளை பயன்படுத்தும் உரிமை, வாக்குரிமை, சொத்துரிமை, திருமண உரிமை,
ஆவணங்கள், அடையாள அட்டைகள்  பெறும் உரிமை போன்றவை  மறுக்கப் படுகிறன.
இந்நிலையில் தேசிய சட்ட உதவி ஆணைக்குழு   –  எதிர் –  மத்திய அரசு  என்ற
வழக்கில், சமீபத்தில் உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினம்
என்று அறிவித்து இந்திய அரசியல் அமைப்பு சாசனம் வழங்கும் அனைத்து
பாதுகாப்பும் உரிமையும் மற்றவர்களை போல அவர்களுக்கும் பொருந்தும்’ என்று
தீர்ப்பளித்தது.  இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு !

இந்தத் தீர்ப்பின் அடுத்த கட்டமாக இந்த மசோதாவைக் கருதலாம். இந்த மசோதா
சட்ட வடிவம் பெற்றால்,  திருநங்கைகளுக்கு தேசிய, மாநில அளவில் ஆணையங்கள்
அமைக்கப்படும். நாட்டில் உள்ள சுமார் 25 இலட்சம் திருநங்கைகளுக்கு
கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்கும். இலவச பாலின மாற்று அறுவை
சிகிச்சை கிடைக்கும்.  மற்ற மனிதர்களைப்போல் சமூகத்தில்  கண்ணியமாக வாழ
வழி பிறக்கும்.

இத்துணை காலமாக  பல பட்டப்பெயர்களில் கேலியும் கிண்டலமாய் சீண்டப்பட்டு
வந்தவர்களுக்கு  இன்றைய காலம் திருநங்கை என்ற அழகான பெயர் சூட்டியுள்ளது
,  நீதிமன்றமும் அரசும் அவர்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்துள்ளது என
நாமே ஆகா ஓகோ என்று சொல்லிக் கொள்வது முக்கியமல்ல ! இதன் முழுச்சரடாக
நீளுகிற மாற்றுப்பாலினத்தார் என்ன சொல்கிறார்கள் என்பதே முக்கியம் !
அவர்களில் சிலரிடத்தில் பேசினேன் ! அப்போதுதான் சில உண்மைகள் என்
முகத்தில் அறைந்தது.

நாம் கெளரவமான நாகரிகமான அடையாளம், பெயர் என்று கருதுகிற திருநங்கை,
மூன்றாம் பாலினம் என்பதே முதலில் தவறானது என்கிறார்கள்.   அவர்களின்
கோரிக்கையில் முதலாவதாகவும் முதண்மையாகவும் இந்த அடையாளம், பெயர் என்பதே
உள்ளது.

திருநங்கை ரேவதி அம்மா அவர்களின் வெள்ளை மொழி என்ற நூல் அறிமுக நிகழ்வை
கோவையில் நடத்தினோம். அதில் அவர் பேசும் போது சொன்ன ஒரு தகவல் அனைவரையும்
அதிரச் செய்தது. திருநங்கைகள் தங்கள் உள்ளாடைகளில் சிவப்பு லிஃப்டிக்கைத்
தேய்த்துக் கொண்டு தனக்கு மாதவிலக்கு ஏற்பட்டது என்று சந்தோசப்
படுவார்களாம் என்ற தகவல்தான் அது. திருநங்கைகள் உணர்வளவில் முழுப்
பெண்ணாகவே வாழ்கிறார்கள் ! உடலளவிலும் அவ்வாறே வாழத் துடிக்கிறார்கள் !
பெண்களுக்கான மாத விலக்கு, மகப்பேறு, தாய்ப்பால் புகட்டுதல் போன்றவை
தங்களுக்கும் வாய்க்கவேண்டுமென ஏங்குகிறார்கள் ! என்பன சற்று புரிகிறது.

கருவில் சுமக்காமலேயே
தாயாக முடியுமா உங்களால் ?
மார்முட்டி பசியாராமலேயே
மகளாக முடியுமா உங்களால் ?

என்ற சகோதரி கல்கியின் கவிதை வரிகளைப் படியுங்கள். அவர்கள் வாழ்வும்
வலியும் புரியும்.  பெண்ணாகவே வாழ்கிற எங்களை பெண்ணென்றே
அடையாளப்படுத்துவது தானே சரியாக இருக்கும் என்பதுதான் அவர்கள் கோரும்
முதல் உரிமை.

அரவானி என்ற மத அடையாளமின்றி திருநங்கைகள்/திருநம்பிகள் எனவும்
பொதுவாக திருநர் எனவும்  அழைக்கப்பட வேண்டும்.  அதுவும் சமூகபுரிதலுக்காக
மட்டுமே !  மற்றபடி எங்களை பெண்/ஆண் என்றே அங்கீகரிக்க வேண்டுமென்று தனது
வலைப்பூவில் எழுதியுள்ளார் திருநங்கைகள் செயல்பாட்டாளர்  லிவிங் ஸ்மைல்
வித்யா.

சட்டரீதியாக எங்களை மூன்றாம் பாலினமாக குறிப்பது வேதனையளிக்கிறது.
எங்களுக்கு  பாலின மாற்று திறனாளிகள் (Genderly challenged ) என்ற
அடிப்படை  வழங்க வேண்டும்.  மற்றபடி எங்களது அன்றாட பயன்பாட்டில் வங்கி
கணக்கு, பாஸ்போர்ட் போன்றவற்றில் திருநங்கயரை பெண் என்றும் திருநம்பியரை
ஆண் என்றும் குறிக்க வேண்டும். மூன்றாம் பாலினம் என்னும் சொல்லாடல்
முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கோருகிறார்.   கல்வி /வேலைவாய்ப்பில்
இட ஒதுக்கீடு சாத்தியப்படும் வரை தொடர்ந்து போராடுவோம் என்கிறார்.

ஒரு பெண்ணாக வேண்டும் என்பதற்க்குத்தானே இவ்வளவு பலி, வேதனை, கிண்டல்,
எல்லாத்தையும் சகிச்சிக்கிறோம். குடும்பம், உறவு, கல்வி, வேலை, சொத்து,
சுகமான வாழ்க்கை எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்கிறோம். அதனாலத்தான்
பெண் என்ற அடையாளம்  கோக்குறோம். மாறிய பாலினம் என்பது அடையாளம். நான்
இயற்கையில ஆண். ஆனால் நான் என் பாலினத்தை மாத்தி கிட்டேன்னு
வெளிக்காட்டுற ஒரு அடையாளம். அவ்வளவு தான்.  எந்த வெளிநாட்டுலேயும்
Others ற கேட்டகிரி இல்ல. நாங்க விரும்புறது எங்களை பெண் (மாறிய பாலினம்)
Female (T.G) ன்னு அங்கீகரிக்கனும்னு கேக்குறோம். இது  திருநங்கை
செயல்பாட்டாளர்  பிரியாபாபு அவர்கள் கண்ட ஒரு நேர்கானலின் பகுதி.

குறி அறுத்து

குறுதியில் நனைந்து

மரணம் கடந்து

மங்கையானேன்

என்ற கல்கியின் கவிதை வரிகளும்

“மங்கையானவள் திருநங்கையானவள்
நிழலின் இருளில் சிரிப்பவள்
வலியின் வலியை தாங்கியவள்
ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்”

என்ற ஆயிஷா பாரூக் அவர்களின் வரிகளும் தான் மீண்டும் நினைவிற்கு வருகிறது.

பெண்ணாவதற்காகவே அனைத்தையும் இழந்துவிட்டு பெண்ணானவளை பெண்ணென்று
அழைப்பது தானே சரியானது.

இம்மசோதா குறித்து திருநங்கைகள் ரேவதி அம்மா, கல்கி ஆகியோரிடம் நேரில்
பேசினேன். இம்மசோதாவில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பிகள்
குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. திருநங்கைகள் ஆணாக இருந்து பெண்ணாக
மாறியதால் அவர்களை மட்டுமே கவனிக்கிறோம். இதிலும் ஆணாதிக்கமா ? என்கிறார்
ரேவதி அம்மா ! எங்களை மூன்றாம் பாலினம் என்று குறிப்பிடுவது சரியானது
அல்ல. திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இதுபோல் வேறு பாலின ஊனத்தினர்
அனைவரையும் பாலின சிறுபாண்மையினர் (Gender Minorities ) என்று
குறிப்பிடலாம் என்றனர்.  கர்நாடக அரசிற்கு தயாரித்துக் கொடுத்த சட்ட
மசோதாவில் பாலின சிறுபாண்மையினர் என்ற சொல்லடலே முன்மொழிந்துள்ளோம்
என்றனர். அனைத்து ஆவணங்களிலும் திருநங்கைகளை பெண் – அடைப்பிற்குள்      (
ஆணிலிருந்து பெண்ணாக மாறியவள் ) Female ( MTF)  திருநம்பிகளை ஆண்
( பெண்ணிலிருந்து ஆணாக மாறியவர் ) Male (FTM) என்று குறிப்பிட வேண்டும்
என்கிறார்கள்.

ஆக இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பொழுதோ அல்லது அரசு
புதிய மசோதாவை வடிவமைத்தாலோ அதில் முக்கியமாக மாற்றுப் பாலினத்தினருக்கு
சரியான அடையாளம், பெயரை தீர்மானிக்க வேண்டும். அது அவர்களே தேர்வு
செய்ததாக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் பெயர் வைக்க அவர்கள் நமது
குழந்தைகள் அல்ல. வட இந்தியர் நம்பிக்கைப்படி கடவுளின் குழந்தைகள்.
இன்னும் அவர்கள் உணர்வுகளை நாம் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. எனவே
சம்பந்தப்பட்ட அவர்களே தேர்வு செய்வதுதான் சரியானது.

சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்

என்ற  நா.காமராசர் கவிதை வரிகளின்படி கடவுள் திருத்துகிறாறோ இல்லையோ,
முதலில் அரசு திருத்தட்டும் அவர்கள் வாழ்வை.

–    மு.ஆனந்தன் – anandhan.adv@gmail.com

–    ‘தேசமே சிறைச்சாலையாகும்’ என்ற நூலின் ஆசிரியர்.

மு.ஆனந்தன் –  செல்; 94430 49987 –

மின்னஞ்சல்; anandhan.adv @gmail.com

மு.ஆனந்தன்

வழக்கறிஞர்

205, ஐஸ்வர்யா காம்ப்ளக்ஸ்
கோபாலபுரம் முதல் வீதி,
கோயமுத்தூர்

News

Read Previous

விடாமுயற்சியின் வெற்றி வெளிச்சத்தில் ……

Read Next

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு தீர்ப்பும்,அரசியல் கட்சிகளின் அதிர்வும்!

Leave a Reply

Your email address will not be published.