விடாமுயற்சியின் வெற்றி வெளிச்சத்தில் ……

Vinkmag ad

விடாமுயற்சியின்

வெற்றி வெளிச்சத்தில் …

-கவிஞர் சீர்காழி இறையன்பனார்

 

நாம் விரும்பும் நல்ல விதைகளைப் புவியில் குழிதோண்டி விதைக்கிறோம். விதைத்த விதை நாம் ஊற்றும் தண்ணீரைச் சுவைக்கிறது. அதன்பின் இருட்டில் வாழ்கிறோமே வெளிச்சத்தை (சூரியனை)க் காண வேண்டுமே என முயன்று பூமியைப் பிளந்து விதையின் முளை வெளியே வருகிறது. வெளியே வந்து வெளிச்சத்தையும் உலகத்தையும் பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் தன்னுள் அடங்கியிருக்கும் இலைகளை விரியச் செய்து தழைக்கச் செய்கிறது. விதையின் விவேகத்தை மனிதன் அறிந்து தெளிந்து செயல்படத் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என நமக்கு விதை சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறது.

இறைவன் நம்மைச் செயல்படுத்துகிறான் என்பதை நாம் நன்கு அறிந்துணர்ந்து அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு முயற்சியுடன் செயல்பட வேண்டும். நமக்கு எந்தத் தொல்லையும் தோல்வியும் ஏற்படாது. வீழ்ச்சியை வீழ்த்தி விஸ்வரூபம் எடுக்க, சறுக்கும் தோல்விப் பள்ளத்தாக்குகளைக் கடந்து காட்டாற்றில் எதிர் நீச்சலில் போராடிக் கரையேறிச் சாதனையின் உச்சக்கட்டத்தைத் தொட்டு மகிழ முன்னேற்றத்தின் முழு மதிதான் தன்னம்பிக்கை.

ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களோடு ஒரு நீரோடையின் கரையோரமாகச் சென்றிருந்தபோது ஒரு தேள் கரையை விட்டுத் தவறி புரண்டு தண்ணீரில் விழுந்துவிட்டது. இதைக் கண்ணுற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீரில் மரணத்தோடு போராடிய தேளை எடுத்துக் கரையில் விட்டபோது அந்த விஷத்தேள் தன் விஷமத்தை விடாமல் அவர்களின் விரலில் கொட்டிவிட்டது. சற்று நேரத்திற்குள் மீண்டும் அந்தத் தேள் தடம்புரண்டு தண்ணீரில் விழுந்துவிட்டது. அதை அவர்கள் காப்பாற்ற, மீண்டும் இருமுறை கொட்டிவிட்டது. இதை அசையாமல் பார்த்துக்கொண்டிருந்த தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே, தாங்கள் அத்தேளை முதலில் காப்பாற்றியபோது தங்களை அது கொட்டிவிட்டது. அவ்வாறிருக்க மேலும் இரண்டுமுறை காப்பாற்றினீர்களே ஏன்? என்று கேட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், தேள் தனது சுய செயல்பாட்டை விட்டுக்கொடுக்காமல் செய்தது. அதுபோன்றுதான் நீங்கள் நலமான காரியங்களைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றுரைத்தார்கள். இச்சம்பவம் 1400 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதாகும். சென்ற நூற்றாண்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு பொதுக்கூட்டத்தில் கூறியது நினைவுக்கு வருகிறது. வீட்டில் ஒரு நாள் முகம் கழுவ பேஷனில் தண்ணீர் திறந்துவிட்டேன். அந்தத் தண்ணீரில் ஒரு பூச்சி தவறி விழுந்துவிட்டது. அதை எடுத்துக் காப்பாற்றி வெளியே விட்டேன். அப்போது சுவரில் இருந்த பல்லி அப்பூச்சியை விழுங்கி விட்டது. தண்ணீரில் இருந்து காப்பாற்றிய பூச்சியைப் பல்லி விழுங்கி விட்டது. விதி யாரை விட்டது என்று கூறினார். என்றுமே தம் வாழ்வில் இரக்க குணம் படைத்தவராக விளங்கியதாலேயே தமிழகத்தின் முதல்வராக வர முடிந்தது. சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டால் எந்தச் சுமையும் தெரியாது எனத் தலாய்லாமா கூறினார்.

இமயமலை அடிவாரத்தில் கும்ஜிங் என்ற கிராமத்தில் பதினோராவது குழந்தையாக 1914 ஆம் ஆண்டு பிறந்தான். நாம்கியால் அவனது இயற்பெயர். தலாய்லாமா அவன் பெயரை டென்சிங் நார்கே என்று மாற்றி வைத்தார். இளம் பருவத்திலிருந்தே மலை ஏறத் தீராத ஆவல் கொண்டான். அவன் விடாமுயற்சி செய்தான். ஆறுமுறை ஏறித் தோல்வியுற்றான். நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹில்லாரியுடன் ஏழாவது முறையாக இருவரும் சேர்ந்து மலையேறப் புறப்பட்டார்கள். கடும் முயற்சி, உழைப்பு தன்னம்பிக்கையும் சேர்ந்திட இருவரும் 1953 ஆம் ஆண்டு இரண்டாம் நாள் பகல் 11.30 மணிக்கு இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்தனர். சிகரத்தில் டென்சிங் தம் சகோதரி கொடுத்த பென்சிலை நட்டுவைத்தார். இருவரையும் உலகமே போற்றியது.

A Single man can make a difference தனியொரு மனிதனால் கண்டிப்பாக மாபெரும் சாதனையை நிகழ்த்த முடியும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

வில்வித்தையில் புகழ்பெற்ற ஒரு குருவிடம் கலைகளைக் கற்றுக்கொள்ளச் சேர்ந்தான் ஓர் இளைஞன். மூன்றாண்டுகளில் முழுக் கவனம் செலுத்தி, கற்றுத்தேறி, சிறந்த வில்வித்தைக்காரனாகத் திகழ்ந்தான். ஒரு நாள் குருவையே மிஞ்சிட வேண்டும் என எண்ணினான். ஒரு நாள் சிஷ்யனின் மனநிலை அறிந்த குரு அதற்கு ஒத்துக்கொள்கிறார். இருவருக்கும் விற்போர் நடைபெற்றது. (வெற்றி குருவுக்கா சிஷ்யனுக்கா என்பது மதில் மேல் பூனையாக இருந்தது) எப்படியும் குருவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முழு முயற்சியோடு அம்புகளை எய்தான் இளைஞன். குரு தம் அம்புகளைக் கொண்டு இளைஞனின் அம்பைத் தடுத்து வீழ்த்தினார். இறுதியில் குருவிடம் இருந்த அம்புகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. குருவோ கலங்கவில்லை கைசேதப்படவில்லை. இதுதான் நல்ல சமயம் குருவை எளிதாக வீழ்த்திவிடலாம் என மனக்கோட்டை கட்டினான். அம்பை எடுத்து குருவின் நெஞ்சுக்கு நேராகக் குறி வைத்தான். குரு பக்கத்தில் இருந்த மரத்திலிருந்து ஒரு கூர்மையான குச்சியை ஒடித்து அந்த இளைஞன் வீசிய அம்பைத் தடுத்து கீழே விழச் செய்துவிட்டார். இளைஞன் ஆச்சரியத்தால் திகைத்துப் போனான். இளைஞனே, புதிதாய்ச் சிந்திக்கும் மனமே தோல்வியைச் சந்திக்கும், சோதனைகளைக் கூடச் சாதகமாகவும் சாதனையாகவும் மாற்றிவிடும் என்று கூறினார். இதுவே தன்னம்பிக்கை.

வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில். ஆழ்கடலில் தோணிபோல வாழ்நாளெல்லாம் நீந்தலாம் என ஒரு கவிஞன் சொன்னது மனிதன் வாழ்வதற்கு உலகில் எத்தனையோ வழிகள் உள்ளன என்பதைச் சுட்டுகிறது. எனவே பாடலின் பொருளறிந்து செயல்படுவதே புத்திசாலித்தனமாகும். குட்டக் குட்டக் குனிந்து கொண்டிருக்காதே. மண்ணோடு மண்ணாய் மக்கிப் போவாய். வெட்ட வெட்ட முளைக்கும் நகமெனக் கூராய் வெளிப்படு. தடைகள் பொடிபடும் என்று முழங்கினார் கவிஞர் இஷாக்.

எனவே தொடர்ந்து முயல்வோம். வெற்றியைப் பரிசாக வெல்வோம்.

 

( இனிய திசைகள் – ஏப்ரல் 2015 )

News

Read Previous

மதுரையில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை!

Read Next

குழந்தைகளுக்கு என்ன பெயர் சூட்டப்போகிறோம் !

Leave a Reply

Your email address will not be published.