ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு தீர்ப்பும்,அரசியல் கட்சிகளின் அதிர்வும்!

Vinkmag ad
ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு தீர்ப்பும்,அரசியல் கட்சிகளின் அதிர்வும்!
                                 (கீழை ஜஹாங்கீர் அரூஸி)
அதிமுக பொதுசெயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான செல்வி.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அமைந்தது நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு.
தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே தமிழக அரசியல் கட்சிகள் 2016 சட்டமன்ற தேர்தலுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் முனைப்பு காட்டி வந்தன.
ஜெயலலிதாவுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டு விட்டால்…அதிமுகவை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற கணக்கே அனைத்து கட்சிகளிடமும் இருந்தது.
திமுக தனது கூட்டணிக்கான முதல் கட்ட நகர்வை தேமுதிகவிடமிருந்து துவங்கியது.பாமக அதிரடியாக அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது.
நாம் தமிழர் கட்சியின் சீமான் கூட 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று அறிவிப்பு செய்தார்.
பாஜகவும் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றும் என்று கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னது.
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஒருபடி மேலே போய் நாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று சொன்னார்.
மொத்தத்தில் 5 முறை ஆட்சி செய்த திமுகவும் அவ்வப்போது சில எண்ணிக்கையில் சீட் பெற்று சட்டசபை செல்லும் பிற உதிரி கட்சிகளும் தங்களின் வெற்றிக்கு துணையாக ஜெயலலிதாவின் தீர்ப்பையே முழுமையாக நம்பி இருந்தன.
அவைகளின் கனவில் இடி விழுந்ததை போல அமைந்து விட்டது நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு.
தீர்ப்பு வந்ததும் என்ன செய்வதென்று புரியாமல் அவசர கோலத்தில் ஒருசில கட்சிகள் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்களும் சொல்லி விட்டன.
தீர்ப்பின் முழு விபரமும் வெளியான பிறகு அந்த தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் தங்களுக்கு சாதமாகவும் ஏதாவது பாயிண்ட் கிடைக்காதா?என்று துருவி,துருவி ஆராய்ந்ததில் கிடைத்ததே குமாரசாமியின் அந்த கூட்டுத்தொகை குளறுபடி.
உடனே மீண்டும் தங்கள் கட்சிக்கு மறுவாழ்வு கிடைத்து விட்ட சந்தோஷத்தில் ஒவ்வொரு கட்சியும் மேல்முறையீடு செய்வோம் என்று அறைகூவல் விடுத்தது.
திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கர்நாடகா அரசிடம் மேல்முறையீடு செய்யுமாறு கோரிக்கை வைத்தன.இதிலும் ஒரு படி மெலே போய் பாமக குழு ஒன்று கர்நாடகாவுக்கு நேரில் சென்று முதல்வர் சீத்தாராமையாவிடம் மகஜர் கொடுத்தது.
கடந்த 6 மாத காலமாக காவேரி மற்றும் மேகதாது அணை தொடர்பான வழக்கு வாய்தா விவகாரம் இரு மாநில அரசின் அறிவிக்கப்படாத யுத்தமாக இருக்கும் போது,
இது தொடர்பான கோரிக்கையை கர்நாடகா முதல்வரிடம் நேரில் போய் வைக்க அக்கறையில்லாத பாமக இந்த வழக்கு விசயத்தில் மட்டும் முந்தியது தமிழக மக்களை முகம் சுளிக்க வைத்தது.
ஜெயலலிதாவுக்கு எதிராக களம் காணும் கட்சிகளிடம் ஒரே ஒரு கேள்விதான்?ஜெயலலிதாவின் ஊழலை பற்றி பேசும் யோக்கியதை உங்களுக்கு இருக்கிறதா?
அதற்காக நாம் ஜெயலலிதா ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லவில்லை.உங்களால் அரசியல் களத்தில் மோதி ஜெயலலிதாவை வீழ்த்த முடியாதா?
நீங்கள் எதை உங்களுக்கு சாதகம் என நினைக்கிறீர்களோ?அதுவே உங்களுக்கு பாதகமாக அமையப்போகிறது.
ஜெயலலிதாவை அரசியல் களத்திற்கு கொண்டு வந்து அவர் மீதான ஊழல் வழக்கையும் அதன் தொடர்பான தவறான தீர்ப்பையும் சுட்டி காட்டி பிரச்சாரம் செய்யுங்கள்.
அதிமுகவை தனிமைப்படுத்தும் வகையில் திமுக தலைமையில் பாஜக அல்லாத அனைத்து கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டியது தானே?
ஒரு தீர்ப்பில் அரசியல் கட்சிகளிடம் இத்தனை அதிர்வுகளா?

News

Read Previous

குழந்தைகளுக்கு என்ன பெயர் சூட்டப்போகிறோம் !

Read Next

அரிய மருத்துவக் குறிப்புகள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *