அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

Vinkmag ad

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (19.11.2018)

ஆகவே, குழல் (ஸூர்) ஒரு முறை ஊதப்பட்டால்_(69:13)

பூமியும், மலைகளும் உயர்த்தப்பட்டு, அவ்விரண்டும் ஒரே தூளாக தூளாக்கப்பட்டுவிட்டால்(69:14)

அந்நாளில் நிகழ வேண்டியது நிகழ்ந்து விடும்.(69:15)

வானமும் பிளந்து, அது அந்நாளில் பலமற்றதாகிவிடும்.(69:16)

இன்னும், (நபியே!) மலக்குகள் அதன் கடைக்கோடிகளில் இருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உமது இரட்சகனின் அர்ஷை, (மலக்குகளில்) எட்டுப்பேர் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டிருப்பார்கள்.(69:17)

@மறுமை என்னும் இறுதி நாள் நிச்சயம் வந்தே தீரும் என்று அல்லாஹ் தனது திருமறையில் பல்வேறு இடங்களில் உறுதியாகவும், எச்சரிக்கையாகவும் சொல்லியுள்ளான்.

அப்படியொரு நாள் வந்து விட்டால், மண்ணிற்குள் புதையுண்ட அனைத்து ஆன்மாக்களும் அல்லாஹ்வின் பக்கம் எழுப்பட்டு அங்கே மிகப்பெரியதொரு பிரளயமே ஏற்படும் அளவுக்கு ஒவ்வொரு ஆன்மாவும் தங்களின் இறுதி தீர்ப்பின் முடிவுகளை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அலைமோதிக் கொண்டிருக்குமாம்.

அப்போது ஒவ்வொருவரின் பதிவுப் புத்தகங்களை மலக்குகள் கொண்டு வந்து ஒவ்வொருவரிடமும் கொடுப்பார்களாம்; அந்த பதிவுப் புத்தகங்களை எவரது வலது கையில் கொடுக்கப்படுகிறதோ, அவர் மற்றவர்களைப் பார்த்து வாருங்கள் என்னுடைய பதிவுப் புத்தகத்தை நீங்களும் படித்துப் பாருங்கள் என்று மகிழ்ச்சியாக கூறுவார்களாம்.

நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கை சந்திப்பேன் என்று உறுதியாக எண்ணியிருந்தேன் என்றும் வலது கையில் ஓலை கொடுக்கப்பட்ட ஆன்மாக்கள் மனமகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருக்குமாம்.

இத்தகைய நல்லோர்கள் திருப்தியான வாழ்வில் இருப்பார்களாம்; இவர்களை உயர்வான சுவனத்திற்கு மலக்குகள் அழைத்துச்செல்வார்களாம்; அங்கே கைக்கெட்டும் தூரத்தில் பறிப்பதைப் போன்று ருசிமிக்க பழங்கள் நிறைந்த மரங்கள் வரவேற்குமாம்.

அப்போது மலக்குகள், இவர்களைப் பார்த்து சென்று போன நாட்களில் மறுமைக்கான எதிர்பார்ப்பில் உலகில் வாழும் போது பல்வேறு சோதனைகளையும் அல்லாஹ்விற்காக பொறுத்துக் கொண்டு உங்களின் ஆசைகளை தியாகம் செய்த காரணத்திற்காக உங்களுக்கு இந்த சுவை மிகுந்த பழங்களை அல்லாஹ் தந்துள்ளான்; இவைகளை உங்கள் ஆசை தீரும் வரை உண்ணுங்கள் என்று மலக்குகள் சொல்வார்களாம்.

அன்றைய நாளில் நல்லோர்களான அந்த ஆன்மாக்கள் சுவனத்தின் நாலாப்பக்கமும் சுற்றி ஓடி மகிழ்ந்து கொண்டிருக்குமாம்; இத்தகைய நற்பேற்றினை நாமும் ஆசைப்படுவோம்; எஞ்சியுள்ள நமது வாழ்நாட்களிலாவது அல்லாஹ்விற்காக நமது இவ்வுலக ஆசைகளை அடக்கி அல்லாஹ்வின் அருளைப் பெறும் வகையில் நமது வணக்கங்களையும்,அமல்களையும்,நன்மைகளையும் முன்னெடுப்போம்.

எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் நாளை மறுமையின் சுவனத்தில் ஓடி மகிழும் பாக்கியத்தை தந்தருள்வானாக.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

அப்பா என்றால்…

Read Next

கஜாவுக்கு நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published.