அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

Vinkmag ad

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (22.11.2018)

உங்களை ஸகர் என்னும் நரகத்தில் புகுத்தியது எது?(74:42)

அ(தற்க)வர்கள், தொழக்கூடியவர்களில் (உள்ளவர்களாக) நாங்கள் இருக்கவில்லை என்று கூறுவார்கள்.(74:43)

இன்னும் நாங்கள் ஏழைக்கு உணவளிப்பவர்களாகவும் இருக்கவில்லை.(74:44)

(வீணானவற்றில்) மூழ்கி இருந்தோருடன் நாங்களும் மூழ்கி இருந்தோம்.(74:45)

@மறுமையில் நரகவாசிகளைப் பார்த்து சுவனவாசிகள் கேட்கும் கேள்விகளையும் அதற்கு நரகவாசிகள் கூறும் பதிலகளைப் பற்றியும் தான் மேலே உள்ள இறைவசனங்களில் அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்.

நரகவாசிகள் கூறும் காரணங்களில் தொழுகையை விட்டதும்,ஏழைகளுக்கு உணவு கொடுக்காததும்,வீணான செயல்களில் இருந்தவர்களோடு சேர்ந்து தங்களின் நேரத்தையும் காலத்தையும் வீணாக்கியதும் என்பது மிக முக்கியமானதாகும்.

நேரத்திற்கு அல்லாஹ்வை தொழுபவர்களும், உணவின்றி வாடும் ஏழைகளைப் பார்த்ததும் அவர்களுக்கு தம்மால் இயன்ற உணவளிப்பவர்களும், நல்ல விசயங்களில் தமது நேரத்தை செலவழிப்பவர்களும் நிச்சயமாக சுவனம் செல்வார்கள் என்பதையும் நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

தற்போதைய கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் நீக்கும் வகையில் பல ஊர்களில் இருந்தும் நமது சகோதரர்கள் நாகை,தஞ்சை போன்ற மாவட்டங்களுக்கு சென்று அம்மக்களுக்கு உணவளிப்பதும்,குடிநீர் வழங்குவதும்,தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதும்,அவர்களின் இல்லங்களை சீர்படுத்திக் கொடுப்பதெல்லாம் நன்மையான காரியங்கள் என்பதை மேலே அல்லாஹ் கூறிய இறைவசனங்கள் நமக்கு ஆறுதலாக உள்ளன.

இத்தகைய பொதுநல சிந்தனை உள்ளவர்கள் நேரத்திற்கு அல்லாஹ்வை தொழுதும் விடுவார்களானால், இவர்களே சுவனவாசிகள் என்பதாக அல்லாஹ்வின் இறைவசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

வீணான இவ்வுலக வாழ்வின் காரியங்களை விட்டும் நாம் விலகி இருப்பதற்கும், நன்மையான காரியங்களில் அதிகம் ஈடுபடுவதற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ், நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

தேனிலும் மகத்துவம், தேனிலும் மருத்துவம்-இறைவன் படைப்பு!

Read Next

அப்பா என்றால்…

Leave a Reply

Your email address will not be published.