அப்துல் காதிர் ஜீலானி !

Vinkmag ad

 

அருட்கவி அதிரை தாஹா

 

அம்ரில்லா வெனும் கலீஃபாவின் அருமை ஆட்சி காலத்தே

இரம்லான் மாதம் இறையருளால் இப்புவி கண்டு பகல் நேரம்

சுரக்கும் பாலைக் குடியாமல் துய்யோனுக்காய் நோன்பிருந்தே

பெருமை செய்தே மெய்ஞானப் பேரமு துண்ட ஜீலானி !

 

ஜீலான் அருகில் நீப்புனிலே சிறந்த சாலிஹ் ஃபாத்திமாவின்

சீலம் மிகுந்த புதல்வரென ஞாலம்வந்து பெற்றோரும்

நாளும் காணும் நல்லோரும் நலமாய்வியந்து போற்றிடவே

ஆளும் இறையின் பேரருளை அழகாய் கொண்ட ஜீலானி !

 

பிறப்பை நபிகள் கனவினிலே பேணிக் கூறப் பொலிவுடனே

பிறந்து வந்தே இனத்தினிலே பெருமை சேர்த்தே இஸ்லாத்தின்

சிறப்பைப் பேசிச் சீர்செய்தே சிந்தை மகிழச் செய்திட்ட

நிறைவே எங்கள் குருவாக நிற்கும் பேறே ஜீலானி !

 

தந்தை இறக்க தாய் அணைப்பில் தங்கி வளர்ந்து தகை பெற்று

சிந்தை வளர்ந்து திருமறையைச் சீராய்க் கற்று, மெய்நெறியில்

பந்தம் கொண்டு பண்புடனே பாரில் வாழ்ந்தே இறைநெறியை

சொந்தம் கொண்ட மெய்ஞானிச் சுடரே ! காதிர் ஜீலானி !

 

அலியார் வீரம் உள்ளத்தில் அழகாய்க் கொண்டார் முஹ்யித்தீன்

வலியே என்று பேரறிஞர் வாழ்த்தினர் ! பத்தாம் வயதினிலே

வலியுல்லாஹ் எனும் பட்டம் வாகாய்ப் பெற்று செஞ்சொற்கள்

பலவும் முத்தாய்ப் பொழிந்திட்ட பண்பே ! காதிர் ஜீலானி !

 

கல்வி கற்றார் பதினெட்டுக் கடக்க வயதில், குறிக்கோளை

சொல்ல முடியா நின்றார்கள் சோதிமணி ! பின் உறுதியுடன்

அல்லாஹ் வுக்கே தன்வாழ்வை அர்ப்பணித்தல் எனவந்து

நில்லா வுலகில் நிலைத்தார்கள் நீதர் ! வேதர் ! ஜீலானி !

 

பாக்தாத் தேகி பெருங்கல்வி பண்பாய்க் கற்று மெய்வாழ்வை

ஆக்க முனைந்தார் முஹ்யித்தீன் ஆசி கேட்டனர் அன்னையிடம்,

நோக்கம் உயர்ந்த அன்னையவர் நுதலில் முத்தம் ஈந்திட்டார்

தேக்கி உண்மை வாழ் கென்றார் தேர்ந்தே சென்றார் ஜீலானி !

 

வல்லான் நெறியை நெஞ்சேற்றார், வற்றா மெய்யை மனமேற்றார்

கல்லும் கசியச் செய்கின்றகல்வி கற்கப் புறப்பட்டார்

செல்லும் வழியில் கள்வர்கள் சேர்ந்துப் பிடித்து நிறுத்திடவே

எல்லாம் வல்ல இறையோன்பால் ஏந்தி நின்றார் ஜீலானி !

 

கள்வர் கேட்ட கேள்விக்குக் கசடு நீக்கி உண்மைகளை

உள்ளம் ஒப்பிச் செப்பினரே உயர்ந்த அன்னைக் கூற்றன்றோ !

கள்வர் எல்லாம் சிறுவர்தம் கனிந்த உண்மைக் கேட்டதனால்

உள்ளம் திருந்தி நல்லாராய் உயரக் கண்டார் ஜீலானி !

 

சத்திய வழியைக் கண்டாரே சன்மார்க்கத்தில் நின்றாரே

நித்தம் நித்தம் இறைநாமம் நெஞ்சில் நிறைத்து வென்றாரே

முத்து முகம்ம தின்வழியை முழுதும் பற்றிச் சென்றாரே !

நத்தி நாளும் நன்மைகளை நாட்டும் நல்லார் ஜீலானி !

 

 

நன்றி :

 

இனிய திசைகள்

மார்ச் 2014

News

Read Previous

சக சகோதர இயக்கங்களை வசை பாடுவது நியாயமா?

Read Next

அனுமதியின்றி வாகனங்களில் கட்சிக்கொடி: வழக்குப் பதிவு

Leave a Reply

Your email address will not be published.