வறுமையினால் வாடி உழன்ற பரமக்குடி பொன்னம்பலக் கவிராயர்

வறுமையினால் வாடி உழன்ற பரமக்குடி பொன்னம்பலக் கவிராயர்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த இவர் இலக்கண இலக்கியங்களை வழுவறப் பயின்று விழுமிய புலமைத் திறம் கொண்டவர்.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் ஒருபுறம் புலமைத் திறத்தில் சிறந்து விளங்கினாலும் மறுபுறம் வறுமையிலும் வாடினார். தனது தந்தையின் பெயரில் சிறு நிலம் இருந்தது. அதைக் கொண்டு சில ஆண்டுகள் தம் குடும்பத்தை நடத்தி வந்தார். காலங்கள் செல்லச் செல்ல போதிய வருவாயின்மையால் மற்றையப் புலவர்கள் போல பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டார். அருகே காணலாகும் செல்வந்தர்களிடம் சென்று பாடல்களைப் பாடிப் பரிசில் பெற நினைப்பார். இவரது பாடலைக் கண்டு கொள்ளாமல் அநேகர் புறக்கணித்தனர். இதனால் இவருடைய மனம் வருத்தமுற்றது. எனவே ஊரைவிட்டு மதுரைக்குச் சென்றார்.
மதுரையில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று பாடல்களைப்பாடி தனது துயரத்தை இறக்கி வைத்தார். அவ்வாறு பாடப்பெற்ற பாடல்கள் இரண்டு கிடைத்துள்ளன. அப்பாடல்களாவன,
“காசும் பொன்னும் கனத்திட்ட போர்க்கிரு
காதுங் கேட்கில கண்ணுந் தெரிகில
பேசும் பேச்சுமென் பேய்க்கோல முக்கண்டால்
பேயென் றாலும் இரங்கும் இரங்குமே
பூசும் பூச்சும் சந்தான விருட்சத்தின்
போதும் வையை கொழிக்குந் துரையெலாம்
வீசுங் கூந்தல் பிடியே சவுந்தர
மீனவன் பங்கன் மீனாட்சி யம்மையேa’’
எனும் பாடலடிகள் மூலம் அறியலாம். (தமிழ்ப்புலவர் வரிசை, 12, ப.116)
வறுமையின் விளிம்பு
தன் துயரத்தையெல்லாம் மனிதரிடம் சொன்னால் கேளமாட்டாரென இறைவனிடம் முறையிட்டார். இருப்பினும் இவருடைய வாழ்க்கையில் வறுமை குறையாமல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. இவர் அணிந்திருந்த ஆடையில் பல ஓட்டைகள் தென்பட்டன. திடீரென்று ஒருநாள் இவருக்குப் பணம் கிடைத்தது. அதை வைத்து அரிசி வாங்கிச் சமைத்து, உண்ணலாமென நினைத்து அரிசிக் கடைக்குச் சென்றார். அரிசி வாங்குவதற்கு பாத்திரமோ, கைப்பையோ எடுத்துச் செல்லவில்லை. தோளில் துண்டு மட்டும் போட்டிருந்தார். துண்டில் அரிசியை முடிய முடியாதென்பதை அறிந்து பாத்திரம் எடுத்து வரலாமென வீட்டிற்குச் சென்றார். சென்று வருவதற்குள் அரிசி விற்றுப் போயிற்று. கையில் காசுமிருந்தும் அரிசி வாங்க முடியவில்லையேயென மனவருந்தி, சொக்கநாதர் மீது பாடல் ஒன்றை எழுதினார். அப்பாடல்,
“சந்தியிலே மூத்தமகன் தன்னைவைத்துப்
பயத்தியங்கள் சாமியே வெள்
நந்தியிலே பவனிவரும் தென்பரம்பைச்
சொக்கேசா நவிலக் கேண்மோ
அந்தியிலே உந்திதனக் காதர வாம்
அங்காடி அரிசி வாங்க
முந்தியிலேன் சந்திரனோ இந்திரனாய்
இருந்ததனால் முடியொண்ணாதே’”
எனும் பாடல் பாடியுள்ளார். வறுமை கொடியது இப்பாடல் விளக்கி நிற்கும்.
பரமக்குடி பொன்னம்பலக் கவிராயர் கவிப்புலமையிருப்பின் ஆதரிக்க எவருமில்லாததினால் இறுதிவரை வறுமையினால் வாடி உழன்றார். இவர் தனிப்பாடல்கள் இயற்றியுள்ளார் என்பதைத் தவிர பிற நூல்கள் செய்திருக்கின்றாரா என்பது தெரியவில்லை. இருப்பினும் புலவர்களின் வாழ்வில் வறுமை குடிகொண்டிருப்பது கவலைக்குரியதே.
முனைவர் சே.முனியசாமி, ஆய்வாளர்,
உதவிப்பேராசிரியர்,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.
