தமிழ்நாடு

 தமிழ்க் கவிதையின் புதிய அலை ஹைக்கூ – நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பிருந்தா சாரதி பேச்சு –

 தமிழ்க் கவிதையின் புதிய அலை ஹைக்கூ – நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பிருந்தா சாரதி பேச்சு –

சென்னை. ‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் 15-ஆவது நிகழ்வில் நடைபெற்ற
நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநரும்
கவிஞருமான பிருந்தா சாரதி, “இன்றைக்குத் தமிழ்க் கவிதையில் புதிய அலையென
எழுந்துள்ள ஹைக்கூ கவிதைகள், பல இளைய கவிஞர்களுக்குத் தன்பால் ஈர்த்து
அவர்களை ஆர்வத்துடன் எழுத வைத்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வுக்கு கவிஞர் சாந்தி சரவணன் தலைமையேற்றார். கவிஞர் மு.முருகேஷ்
அனைவரையும் வரவேற்றார். கவிஞர் கெளரி சங்கர் எழுதிய ‘யானையின் சாயலில்
பனை’ ஹைக்கூ கவிதை நூலினைக் கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம்
வெளியிட, கவிஞர் பிருந்தா சாரதி பெற்றுக்கொண்டார். அப்போது அவர் பேசும்போது,
“தமிழ்க் கவிதை மிக நீண்ட வரலாற்றையுடையது. மகாகவி பாரதி மூலமாகத் தமிழில்
அறிமுகமான மூவரி ஜப்பானிய கவிதையான ஹைக்கூ, இன்றைக்குத் தமிழில் தனக்கான
வாசகப் பரப்பைப் பெற்றுள்ளது. தொடக்கத்தில் புதுக்கவிதைகளை எழுதிவந்த நான்,
கவிக்கோ அப்துல்ரகுமான், அறிவுமதி ஆகியோரின் கவிதைகளைப் படித்த தாக்கத்தில்
ஹைக்கூ கவிதைகளை எழுதி, ‘மீன்கள் உறங்கும் குளம்’ எனும் நூலாக வெளியிட்டேன்.
அந்த நூலுக்குப் பாராட்டும் பரிசுகளும் கிடைத்தன.
ஹைக்கூ கவிதைகளில் இயற்கை நேயம், சூழலியல் பாதுகாப்பு குறித்து பல கவிதைகளை
எழுதியுள்ளேன் அதனைப் பலரும் ஆய்வு செய்துள்ளனர். தமிழில் எழுதப்படுகிற எல்லா
மூவரிக் கவிதைகளும் ஹைக்கூ கிடையாது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
இன்றைக்குத் தமிழ்க் கவிதையில் புதிய அலையென எழுந்துள்ள ஹைக்கூ கவிதைகள்,
பல இளைய கவிஞர்களுக்குத் தன்பால் ஈர்த்து அவர்களை ஆர்வத்துடன் எழுத வைத்துள்ளது.
அப்படியான புதிய கவிஞர்களுக்கு எது ஹைக்கூ என்பதைக் கற்றுத்தரும் தளமாக
‘ஹைக்கூ முற்றம்’ செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

ஹைக்கூ நூலைத் திறனாய்வு செய்து, முனைவர் கவிஞர் சிவகாமசுந்தரி நாகமணி பேசினார்.
நூலாசிரியர் கவிஞர் கெளரி சங்கர் ஏற்புரையாற்றினார்.

‘ஹைக்கூ முற்றம்’ 12-ஆவது மின்னிதழைப் பேராசிரியர் இராம.குருநாதன் வெளியிட, ‘பொதிகை
மின்னல்’ ஆசிரியர், கவிஞர் வசீகரன் பெற்றுக்கொண்டார். பின்னர் நடைபெற்ற ஹைக்கூ
வாசிப்பரங்கில் கவிஞர்கள் வி.ஜெயசக்திவேல், மலையமான் திருமுடிக்காரி, கு.அசோகன்,
ந.வேலாயுதம், அனுராதா செளரிராஜன், பாக்கியராஜ் பரசுராம், க.குணசேகரன், குருசங்கர்
கனகராஜன், மேகலைவாணன், முனைவர் மு.சண்முகம் ஆகியோர் பங்கேற்று கவிதைகளை
வாசித்தனர்.

நிகழ்வில், அறிவியல் கவிஞர்கள் சி.ராமலிங்கம், பா.ஸ்ரீகுமார், முனைவர் பெ.கி.பிரபாகரன்,
கவிஞர்கள் வசந்தா, அன்புத்தோழி ஜெயஸ்ரீ, வ.ரகுநாத், அ.ரமணி தேவி உள்ளிட்ட ஏராளமானோர்
கலந்துகொண்டனர்.

இணைப்பு: படங்களும், படக்குறிப்புகளும்:
படம்: 1

  கவிஞர் கெளரி சங்கர் எழுதிய ‘யானையின் சாயலில் பனை’ ஹைக்கூ கவிதை நூலினைக்
கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் வெளியிட, கவிஞர் பிருந்தா சாரதி பெற்றுக்கொண்டபோது
எடுத்த படம். அருகில், பேராசிரியர் இராம.குருநாதன், கவிஞர்கள் மு.முருகேசஷ், சாந்தி சரவணன்,
முனைவர் சிவகாமசுந்தரி, நூலாசிரியர் கவிஞர் கெளரி சங்கர் ஆகியோர் உள்ளனர்.

படம்: 2

  ‘ஹைக்கூ முற்றம்’ 12-ஆவது மின்னிதழைப் பேராசிரியர் இராம.குருநாதன் வெளியிட, ‘பொதிகை
மின்னல்’ ஆசிரியர், கவிஞர் வசீகரன் பெற்றுக்கொண்டபோது எடுத்த படம். அருகில், கவிஞர்கள்
மு.முருகேஷ், ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம், சாந்தி சரவணன், முனைவர் சிவகாமசுந்தரி 
ஆகியோர் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button