தமிழ்நாடு

 தமிழ்க் கவிதையின் செறிவுக்கு அடையாளம் ஹைக்கூ

தமிழ்க் கவிதையின் செறிவுக்கு அடையாளம் ஹைக்கூ

    ‘ஹைக்கூ முற்றம்’ நிகழ்வில் கவிஞர்கள் பெருமிதம்

    சென்னை. 29. ’ஹைக்கூ முற்றம்’ நிகழ்வு 3-இல் பங்கேற்ற
கவிஞர்கள், தமிழ்க் கவிதையின் செறிவுக்கு அடையாளமாக
விளங்குபவை ஹைக்கூ கவிதைகளே என்று பெருமிதத்துடன்
தெரிவித்தனர்.

    இந்நிகழ்வுக்கு கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்
தலைமையேற்றார். ஹைக்கூ முற்றம் நிகழ்வின் அமைப்பாளர்
கவிஞர் ஆழ்வார்குறிச்சி சொக்கலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.

    “ஜப்பானிய மூவரி கவிதையான ஹைக்கூ, சிறியதாகவும் செறிவாகவும்
இருப்பதால் இன்றைக்கு கவிஞர்கள் பலரும் ஆர்வத்துடன் ஹைக்கூ எழுதி
வருகிறார்கள். கவிதையென்பதே சுருக்கமாக இருக்க வேண்டும். படிப்பவர்
மனதைத் தைக்கும்படி இருக்க வேண்டும். அதைச் சரியாக ஹைக்கூ
செய்கிறது. சின்னதாக இருக்கும் எல்லாப் பொருள்களுமே நமக்கு மிகவும்
பிடித்துப்போகும். ஹைக்கூவும் அப்படித்தான்” என்று தலைமையுரையில்
ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

    கவிஞர் மகேந்திரன் நவமணி எழுதிய ‘சிறகில் அசையும் பெருங்காடு’
ஹைக்கூ கவிதை நூலைத் திறனாய்வு செய்து, கவிஞர் மு.முருகேஷ்
பேசினார்.

     நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மலேசியாவைச் சேர்ந்த கவிஞர்
மகேந்திரன் நவமணி, ‘ஹைக்கூவும்  நானும்…’ எனும் தலைப்பில் அனுபவப்
பகிர்வினை வழங்கினார். அவர் பேசும்கையில், “வாழ்வின் ஒவ்வொரு
கணத்திலும் சிறுசிறு நெகிழ்வான, மகிழ்வான சம்பவங்கள் நடைபெறுகின்றன.
அவற்றுள் ஹைக்கூ கவிதைகளும் உள்ளன. அதை உணர்ந்து, உள்வாங்கிக்
கண்டெடுத்தால் நீங்களும் ஹைக்கூ எழுதலாம். ஹைக்கூவில் மொழிச் செறிவும்
காட்சியழகும் மிகவும் அவசியம். நான் என் ஹைக்கூ கவிதைகளைப் பலமுறை
மீண்டும் மீண்டும் படித்து திருத்தி எழுதியிருக்கிறேன். மலேசிய மண்ணிலிருந்து
தமிழகம் வரும் ஒவ்வொரு முறையும் என்னைப் புதுப்பித்துக்கொள்வதாகவே
உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.

     ஹைக்கூ கவிஞர்களின் கவிதை வாசிப்பைத் தொடர்ந்து, நிகழ்வில்
வாசிக்கப்பட்ட ஹைக்கூ கவிதைகள் குறித்தும், தனது ஹைக்கூ
மொழியாக்க அனுபவம் குறித்தும் காவல் கண்காணிப்பாளர்
மணிசண்முகம், ஐபிஎஸ் உரையாற்றினார். சிறந்த கவிதைகளை வாசித்த
கவிஞர்களுக்குப் பரிசுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

      இந்நிகழ்வில் கவிஞர்கள் கோ.லீலா, குகை ம.புகழேந்தி, அன்புத்தோழி
ஜெயஸ்ரீ, அமுதா பாலகிருஷ்ணன், தாமரைப்பூவண்ணன், பாளை கோ.மாணிக்கம்,
அனுராதா செளரிராஜன், கு.அசோகன் உள்ளிட்ட ஏராளமான கவிஞர்கள்
கலந்துகொண்டனர்.

படக்குறிப்பு: 

    சென்னையில் நடைபெற்ற ‘ஹைக்கூ முற்றம்’ நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் 
பங்கேற்ற மலேசியக் கவிஞர் மகேந்திரன் நவமணிக்கு நினைவுப்பரிசினை
வழங்கினார் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன். அருகில் (இடமிருந்து) கவிஞர்
மு.முருகேஷ், காவல் கண்காணிப்பாளர் மணிசண்முகம், ஐபிஎஸ்., கவிஞர்
ஆழ்வார்குறிச்சி சொக்கலிங்கம் ஆகியோர் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button