வறட்சியால் அடிமேல் அடி இழப்பீட்டுத்தொகை எங்கே? போராட்டத்தில் இறங்குவோம் என எச்சரிக்கை

Vinkmag ad

முதுகுளத்தூர், :  முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் வறட்சியால் விவசாயிகள் அடிமேல் அடிவாங்கி வருகின்றனர். பயிர் காப்பீட்டு திட்டத்தில் வழங்க வேண்டிய கடந்த ஆண்டுக்கான இழப்பீட்டுத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இழப்பீட்டுத்தொகை எங்கே என்று விவசாயிகள் கோபத்துடன் கேட்க ஆரம்பித்துவிட்டனர். இழப்பீடு வழங்கவில்லை என்றால் போராட்டத்தில் இறங்குவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் கீழச்சாக்குளம், காஞ்சிரங்குளம், காக்கூர், ஏனாதி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு நெல், மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் பிரதானமாக ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனது. இதனால் பெரும்பகுதி வானம்பார்த்த பூமியாகவே காணப்படுகிறது.

சமீபத்தில் கூட தமிழகம் முழுவதும் பருவமழை கொட்டித்தீர்த்த நிலையில், ராமநாதபுரத்தில் சில இடங்கள் மட்டுமே இதனால் பலனடைந்தன. பெரும்பகுதிகளில் மழை ஏதோ பெயரளவிற்கு எட்டிப்பார்த்துவிட்டு சென்றதால், அவை எப்போதும்போலவே வறட்சியுடன் காணப்படுகின்றன. இந்த வறட்சிக்கு முதுகுளத்தூர், கடலாடியில் உள்ள கிராமங்களும் தப்பவில்லை.
தமிழகம் முழுவதும் பருவமழை சுழன்று அடித்துக்கொண்டிருந்ததால், தங்கள் பகுதியிலும் வருண பகவான் கருணை காட்டுவார் என்ற எண்ணத்தில், இப்பகுதி விவசாயிகள் நகைகளை அடகு வைத்தும்,  கடன் வாங்கியும் நெல் போன்றவற்றை விதைக்கும் பணியை மேற்கொண்டனர். மற்ற பகுதிகளில் எல்லாம் கண்மாய், குளங்கள் நிரம்பி கொண்டிருக்க, இங்குள்ள கிராமங்களில் மட்டும் நீர் தேக்கங்கள் தண்ணீருக்காக ஏங்கிக்கொண்டிருந்தன. தண்ணீர் தேவையான அளவு நிரம்பவில்லை.
இதனால் விவசாயிகள் நஷ்டத்தையே சந்தித்துள்ளனர். கால்நடைகளுக்கு கூட தீவனம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளை வைத்து சமாளிக்க முடியாமல் அடிமாட்டு விலைக்கு விற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டும் இதேபோன்று பருவமழை பொய்த்துப்போனது. அதற்கே இன்னும் பயிர் காப்பீடு திட்டத்தில் இருந்து இழப்பீட்டுத்தொகை வழங்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டும் நஷ்டமே ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல், இழப்பீட்டு தொகையும் கிடைக்காமல் கவலையில் உள்ளனர். எனவே கடந்த ஆண்டுக்கான இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முதுகுளத்தூர் பகுதி விவசாய சங்க உறுப்பினர் முத்துப்பாண்டி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் பருவ மழையில்லாமல் கடும் வறட்சி தான் நிலவுகின்றது. பல கிராமபுரங்களில் குடிநீர் கூட கிடைக்காமல் திண்டாடி வருகிறோம்.
கடும் வறட்சி காரணமாக வீடுகளில் வளர்த்த ஆடு, மாடுகளை கூட விற்றுவிட்டோம். இந்த ஆண்டுகூட இப்பகுதியில் போதிய மழையில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக கடன் வாங்கி விவசாயத்தில் சூடுபட்டுக்கொண்ட நாங்கள், இந்த வருடமும் பெருத்த நஷ்டத்தையே சந்தித்துள்ளோம்.
நெல் கிலோ ரூ. 33க்கு வாங்கி விவசாயம் செய்தோம். எல்லாம் வீணாகிவிட்டது. போதிய மழையில்லாமல் கண்மாய், குளங்கள் வறண்ட நிலையில்தான் உள்ளன. வறட்சியால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு கடந்த ஆண்டு பயிர் காப்பீட்டு தொகை இன்னமும் வழங்கப்படவில்லை. என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இந்த தொகை கிடைத்தால் நாங்கள் வாங்கிய கடனை அடைத்துவிடுவோம். எனவே இழப்பீடை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் போராட்டத்தில் இறங்குவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.
பயிர் காப்பீட்டு தொகை வழங்குவது குறித்து கூட்டுறவு வங்கி அலுவலர் ஒருவர் கூறுகையில், விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகை ஆண்டுதோறும் பாதிப்புக்கு ஏற்றார் போல் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் தான் அறிவிக்க வேண்டும் என்றார்.

News

Read Previous

கவிதையும் கற்பனையும்

Read Next

2015 ஜனவரி 4 : சென்னையில் முதுகுளத்தூர் வர்த்தக நல அறக்கட்டளை விழா

Leave a Reply

Your email address will not be published.