சரணாலயத்தை பாதுகாக்க வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்

Vinkmag ad

மதுரை : ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தை பாதுகாக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. முதுகுளத்தூர் இளஞ்செம்பூர் செல்லத்தாய் தாக்கல் செய்த மனு:

தமிழக வனத்துறை இணையதளத்தில், சித்திரங்குடி பறவைகள் சரணாலய சிறப்புகள் இடம் பெற்றுள்ளன. இங்கு குண்டாறு நீர் பாய்கிறது. பல்வேறு நாடுகளிலிருந்து குளிர்காலத்தில் பறவைகள் இங்கு வருகின்றன. அக்., முதல் பிப்., வரை தங்குகின்றன. கண்மாயில் ஐந்து மாதங்கள் தண்ணீர் தேங்குகிறது. தற்போது நான் பார்த்தபோது அங்கு தண்ணீர், பறவைகள் இல்லை. வறட்சியாக உள்ளது. பறவைகள் அருகிலுள்ள கண்மாய்களுக்கு சென்று விட்டன.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனத்துறையின் ஒருங்கிணைந்த வன உயிரினங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதி வழங்கி மேம்படுத்த வேண்டும். தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ஆர்.வெங்கடேசன் ஆஜரானார். மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர்கள், தமிழக அரசின் தலைமை வனப்பாதுகாவலர், ராமநாதபுரம் கலெக்டர், சிவகங்கை மாவட்ட வன அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

News

Read Previous

கலாம் !

Read Next

மதிக்கப்பட வேண்டியவன்

Leave a Reply

Your email address will not be published.