ஊருக்கு வினியோகிக்க காவிரி குடிநீர்…இல்லை தாராளமாகப் பாயுது வயல்வெளிகளில்

Vinkmag ad

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் ஊர்களுக்கு வினியோகிக்க காவிரி குடிநீர் இல்லையாம். ரோட்டோர ‘ஏர்வால்வு’ தொட்டிகள் நிரம்பி வயல்வெளிகளில் தாராளமாக பாய்கிறது.

ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்கும் வகையில் 616 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டம் செயல்படுத்தப்பட்ட காலம் முதல் முதுகுளத்துார், கமுதி பகுதிகளில் பல கிராமங்களுக்கு இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால், தேங்கிய தண்ணீரை பருகி தொற்று நோயால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம், ஏனாதி, பூங்குளம், கண்டிலான், அஞ்சத்தம்பல் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 15 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லாததை கண்டித்து மக்கள் ரோடு மறியல் செய்தனர்.

கிராமங்களுக்கு காவிரி குடிநீர் சப்ளை இல்லாதபோதும், ரோட்டோர ‘ஏர்வால்வு’ தொட்டிகள் நிறைந்து விவசாய நிலங்கள், ரோட்டோரங்களில் தாராளமாகப் பாய்ந்து குடிநீர் வீணாகிறது. கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் தள்ளுவண்டிகள், சைக்கிள், ‘டூவீலர்களில்’ குடங்களில் குடிநீர் சேகரித்து வருகின்றனர்.

முதுகுளத்துார் கண்ணன் கூறுகையில், காவிரி குடிநீர் குழாய்களில் தண்ணீர் சப்ளை இல்லாதபோதும், ரோட்டோரங்களில் காவிரி குடிநீர் தொட்டிகளில் தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது.

முறையாக செயல்படுத்தப்படாத காவிரி குடிநீர் திட்டம், பராமரிப்பில்லாத நரிப்பையூர் நன்னீராக்கும் திட்டம் போல் முடங்கும் அபாயம் உள்ளது, என்றார்.

இதுகுறித்து காவிரி குடிநீர் திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சேதமடைந்த ‘ஏர்வால்வு’ தொட்டிகளை சீரமைக்க கான்ட்ராக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காவிரி குடிநீர் சப்ளை இல்லாத கிராமங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விரைவில் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது,’ என்றார்.

News

Read Previous

அரிசி உமியிலிருந்து ஆற்றல்

Read Next

மருத்துவ முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *