மருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க தனி இணையதளம்

Vinkmag ad

மருந்துகள் குறித்து புகார் தெரிவிப்பதற்கு புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது என மத்திய மருந்துகள் துறைச் செயலர் வி.கே.சுப்புராஜ் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு இந்தியா முழுவதிலும் உள்ள 7 லட்சம் மருந்துக் கடைகளிலும் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் உள்நாட்டுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
தரம் குறைவு: இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தியாளர்கள் உள்ளனர். ஆனால், அவற்றில் 15 சதவீதம் பேர் மட்டுமே உலக சுகாதார நிறுவனத்தின் தர நிர்ணய நெறிமுறைகளுக்கு உள்பட்டு மருந்துகளைத் தயாரிக்கின்றனர். இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் தரத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
பெரும்பாலான உற்பத்தியாளர்கள் குறைவான காலத்தில் அதிகமான மருந்துகளைத் தயாரிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். தரத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இதனால், முன்னணி நிறுவனங்களின் மருந்துகளைக்கூட சில நாடுகள் நிராகரித்துவிடுகின்றன.
புகார்: இந்தியாவைப் பொருத்தவரை போலி மருந்துகள் உற்பத்தி மிக மிகக் குறைவாகக் காணப்படுகிறது. இந்தியாவில் 0.003 சதவீதம் மட்டுமே போலி மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் போலி மருந்து உற்பத்தியைத் தடுப்பதற்கான கண்காணிப்பு அதிகமாக உள்ளது.
அதன்படி, மத்திய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் இணையதளமான www.nppaindia.nic.in -இல் “பார்மா ஜன் சமாதன்’ என்ற இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இணையதள இணைப்பில் சென்று மருந்துகள் தொடர்பான புகாரை நேரடியாகத் தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்தியாவில் 7 லட்சம் மருந்துக் கடைகள் உள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் புதிய இணையதளம் தொடர்பான அறிவிப்புகள் ஒட்டப்பட உள்ளன.
அத்தியாவசிய மருந்துகள் விலை குறைவு: கடந்த ஓராண்டில் சர்க்கரை நோய், இருதய நோய், ஜீரணம் தொடர்பான நோய்கள், உயிர் காக்கும் மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள் உள்ளிட்ட 150 அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளன. காப்புரிமை பெறப்பட்ட வெளிநாட்டு மருந்துகளின் விலைதான் அதிகரித்துக் காணப்படுகிறது தெரிவித்தார்.

News

Read Previous

சமூக நல்லிணக்கக் கொடியை உயர்த்துவோம்!

Read Next

நிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டடங்கள்

Leave a Reply

Your email address will not be published.