சமூக நல்லிணக்கக் கொடியை உயர்த்துவோம்!

Vinkmag ad
பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் மாநில தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
சமூக நல்லிணக்கக் கொடியை உயர்த்துவோம்!
ரமளான் திங்கள் முழுவதிலும் நோன்பிருந்து, தினமும் வைகறைப் பொழுது முதல் அந்தி சாயும் வரையிலும், உண்ணாமலும், பருகாமலும், உடலிச்சைகளுக்குக் கட்டுப்படாமலும், ஐம்புலன்களையும் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் தீயதைப் பண்ணாமலும், தீங்கானதை எண்ணாமலும் இருந்து, இறைவனின் திருப்பொருத்தம் ஒன்றே குறியெனக் கொண்டு வாழ்ந்து ஈதுப் பெருநாள் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு இனிய வாழ்த்துக்கள்.
தமிழக முஸ்லிம்களுக்கெனத் தனியே ஒரு பாரம்பரியப் பண்பாடு உண்டு. எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்வதும், இல்லாத எளியோர்க்கு வழங்கி வாழ்வதும், எல்லா சமுதாய மக்களுடனும் இணங்கி வாழ்வதும் தமிழக முஸ்லிம்களின் தனிப் பண்பாகும்.
இந்தப் பாரம்பரியப் பண்பாடு கெட்டுப் போகாமலும், பட்டுப் போகாமலும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழகத்தில்உள்ள ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண்ணுக்கு இருக்கிறது.
இந்த பாரம்பரிய பண்பைக் கெடுக்கும் வகையில் அண்மையில் ஆம்பூர் நகரில் அசம்பாவிதங்கள் நடத்தப் பட்டிருக்கின்றன. உண்மையான முஸ்லிம் களிடமிருந்து இந்த அசம்பாவிதம் ஆரம்பித்திருக்க முடியாது.
வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வம்படி வேலைகள் மூலம், சாதிக்கலாம் என்று நினைப்போர், உண்மையில் சதிவலையில் சிக்குண்டு, தன்னையும் அழித்துக் கொண்டு, தனது சமுதாயத்தின் நற்பெயரையும் கெடுக்கிறார்கள் என்பதே உண்மையாகும். இப்படிப்பட்ட சம்பவங்களால் அநியாயமாக நிரபராதிகளும் பாதிக் கப்பட்டு காராகிரகத்தில் அடைக்கப்பட்டும், நீதிமன்ற அலைச்சல்களுக்கும் உள்ளாக்கப்பட்டும் பெரும் சிரமம் அனுபவிக்க நேரிடுகிறது. எனவே தமிழக அரசு ரமளான் பெருநாளை மனதிற் கொண்டு அப்படிப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள் மட்டுமல்ல சமுதாயத்தின் விருப்பமுமாகும்.
தமிழக முஸ்லிம் சமுதாயம், இந்திய முஸ்லிம்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் வகையில், நன்முறையை வளர்த்திடும்; என்றைக்கும் வன்முறையை விலக்கி வைக்கும் என்ற சரித்திரம் தொடர எல்லோரும் இணைந்து பாடுபடுவோம் – இதயங்களின் இணைப்பில் இன்பங்காண்போம்!
சமூக நல்லிணக்க கொடியை உயர்த்துவோம்!
அனைவருக்கும் ஈத் முபாரக்!
-பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் மாநில தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

News

Read Previous

பெருநாள் செய்தி

Read Next

மருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க தனி இணையதளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *