பெருநாள் செய்தி

Vinkmag ad

பெருநாள் செய்தி

மவ்லவி M.அப்துன் நாஸிர் மன்பஈ

இமாம்,ஜைலானியா மஸ்ஜித்,திருச்சி

 

ரமலான் விடைப் பெற்று விட்டதா? நாம் அதை விட்டு விடை பெற்று விட்டோமா என கேட்டால் நிச்சயம் ரமலான் ஒவ்வொரு வருடமும் திரும்ப வரும்.நாம் எதிர்காலத்தில் நமக்கு அல்லாஹ் விதித்திருக்கும் ஆயுளை வைத்து நாம்தான் ரமலானை விட்டும் விடை பெறுவோம் என்பதுதான் பதிலாகும்.அல்லாஹ்விடம் நாம் மீண்டும் மீண்டும் அதிக ரமலான் மாதங்கள் அடைய துஆ செய்வோம்.

ரமலானில் பல வணக்கங்கள் புரிந்தோம். பல நற்செயல்கள் செய்தோம். பழக்க வழக்கங்கள் கூட நளினம் மற்றும் நன்மைக்குரியதாக இருந்தன.இவையெல்லாம் ரமளானின் அமல்களாக இருக்கலாம்.ஆனால் அவையெல்லாம் நம் வாழ்வு முழுவதும் பிரதிபலிக்க வேண்டியதாக இருக்க வேண்டும். பழங்களுக்கு சீசன் இருக்கலாம் ,ஆனால் நல்ல பழக்க வழக்கங்களுக்கு சீசன் இருக்க கூடாது .வாழ்வு முழுவதும் வர வேண்டும்.

ரமலான் மாத நோன்பு மற்றும் மற்ற அமல்கள் மூலம் ஈருலகிலும் மனிதனின் நன்மை பெற அல்லாஹ் நாடுகிறான்.அதைதான் அவன் தன் வேதம் மூலமும் தனது நபி மூலமும் கட்டளையிடுகிறான்.

ரமலான் மாத நோன்பிற்கு அல்லாஹ்வே கூலியாகிறான்.மனிதன் செய்யக் கூடிய ஒவ்வொரு நற்செயலுக்கும் எழுபது மடங்கு நன்மை தருகிறான்.ரமலான் நோன்பு நோற்பவர்களை “ரய்யான் என்னும் சுவனத்தின் வாயிலாக அனுமதிக்கிறான்..யார் அல்லாஹ்வை அஞ்சி கொள்வாரோ அவருக்கு அல்லாஹ் வழிகளை இலகுவாக்குவான்.என்று வந்துள்ள குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி மொழிகள்  ஆகியன  மறுஉலகில் ரமலான் மாதம் நற்செயல்கள் புரிந்தவர்களுக்கு அல்லாஹ் அளித்துள்ள நன்மைகளை நமக்கு தெரிவிக்கின்றன.

இவ்வுலகில் மனிதர்கள்  பயபக்தி  உடையவர்களாக ஆகவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்கிறது குர்ஆன். பயபக்தி என்பது அல்லாஹ்விற்கு அஞ்சி அவன் ஏவிய நல்ல விஷயங்கள் படி ஒழுகுவதும் பாவமான பொய்யான நடவடிக்கைகளை விட்டும் விலகுவதும் ஆகும். யார் பொய்யான நடவடிக்கைகளை விட்டும் விலக வில்லையோ அவர் பசித்திருப்பதாலும் தாகித்து இருப்பதாலும் அல்லாஹ்விற்கு எந்த பயனும் கிடையாது என்ற நபி மொழி இதற்க்கு விளக்கமாக அமைகிறது.

மனிதனால் சாப்பிடாமல் குடிக்காமல் கூட இருக்க முடியும்.ஆனால் பொய்யான விசயங்களை விட்டும் விலகுவது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கிறது.அல்லாஹ் மீது உள்ள பயபக்தி மட்டுமே பொய்யான விசயங்களை விட்டும் விலகி மனிதன் உண்மையாளனாக இருக்க வழிவகுக்கும்.

நோன்புக் காலங்களில் நோன்பாளி தன்னிடம் யாரும் சண்டையிட வந்தால் நான்  நோன்பாளி என்று சொல்லி விட வேண்டும் என்ற நபி மொழியும் இங்கு சிந்திக்கத் தக்கது.நோன்பு அல்லாத காலங்களிலும் வீண் சண்டைகள்,வாக்கு வாதங்கள் ஆகியன தவிர்க்கப் பட்டால், தம்மிடம் சண்டைக்கு வருபவர்களை பெருந்தன்மையுடன் மன்னித்து அவற்றை விட்டும் விலகிக் கொண்டால் பெரும்பாலும் அனைத்து குடும்பங்களும் ,சமூகங்களும் சுபிட்சமாக இருக்கும்.ஏன் உலகமே அமைதிப் பூங்காவாக இருக்கும். யாருடைய கரங்கள் மற்றும் நாவை விட்டும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுவார்களோ அவரே உண்மையான முஸ்லிம் என்ற நபி மொழி இங்கு குறிப் பிடத்தக்கது.

ரமலான் மாதம் தான தருமங்கள் செய்தோம்.சதக்கா,ஜகாத்,அதன் முடிவாக சதக்கதுல் பித்ர் என நமது செல்வத்தில் இருந்து ஏழை எளியவர்களுக்கு நாம் வழங்கினோம்.இந்த தருமம் என்பது குறிப்பாக சதக்கதுல் பித்ர் தவிர மற்றவைகள்  எல்லாம் இந்தக் காலம் மட்டும் செய்யும் சீசன் அமல் அல்ல.மற்றக் காலங்களிலும் அவை பின் தொடர வேண்டியது.மனிதன் இரவு முழுவதும் நின்று வணக்கங்கள் புரிய  தயாராக இருக்கக் கூடும்.ஆனால் அவன் செல்வத்தில் இருந்து சிறு பகுதி சில்லறைகளை கூட அவன் இழக்க தயாராக இல்லை.தான் தருமங்கள் எல்லா நாட்களும் மனிதன் செய்யுமாறு குர்ஆன் மற்றும் நபி மொழிகளில் வலியுறித்தி சொல்லப் பட்டுள்ளது.சமூகத்தில் ஒரு பகுதி வறுமையில் வாடுவது மற்றொருக் கூட்டம் நான் சம்பாதித்தது எனக்கு ,நான் ஏன் அடுத்தவனுக்கு தர வேண்டும் என்ற இழிவான எண்ணம்தான் பணம் ஒரே இடத்தில் தேவைக்கு அதிகமாக குவிந்து மறுப் பக்கம் தேவைப் படக் கூடியவர்கள் அவை கிடைக்கப் படாமல் வறுமையில் அல்லாடி கொண்டிருக்கவும் காராணமாக அமைந்து விடுகிறது.பணம் என்னிடம் வந்துள்ளது ,அவை அல்லாஹ் எனக்கு தந்தது எனது தேவைப் போக தேவைப் படகூடியவர்களுக்கு அதை கொடுக்க வேண்டியது என் கடமையாகும் அவற்றுக்கு நன்மை அல்லாஹ்விடம் நான் எதிர்ப் பார்க்கிறேன் என்ற எண்ணம் மனிதனிடம் வர வேண்டும்.ரமலானில் இந்த சிந்தனை தருமத்தோடு சேர்ந்து  துளிர் விடுகிறது.ரமலான் அல்லாத காலங்களிலும் தருமம் தொடர வேண்டும்.

குர்ஆன் இறங்கிய மாதம்.நபி அவர்களுக்கு குர்ஆன் ஓதிக் காண்பிக்கப் பட்ட மாதம்.குர்ஆனின் செய்தியான இஸ்லாம் உலகிற்கு உரைக்கப் பட்ட மாதம் பத்ரு வெற்றிக்குப் பின் .மதீனாவிலும் மக்க வெற்றிக்குப் பின் மக்காவிலும் இஸ்லாம் வேருன்றிய மாதம்.

நமது கடமை இதுதான் உலகம் முழுவதும் இஸ்லாம் போய் சேர வேண்டும்.அது நமது விருப்பம் மட்டுமல்ல அது இவ்வுலகின் தாகமும் கூட.

சாதி மற்றும் நிற வெறியால் பாதிக்கப் பட்ட மக்கள் தங்களை சமமாக நடத்தும் ஒரு சமூகத்தில் இணைய ஆசைப் படுகின்றனர்.நீங்கள் ஒரே சமுதாயம் மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப் போன்று சமமானவர்கள் என்ற அறிவுரை மட்டுமல்ல செயல் முறையும் கொண்ட இஸ்லாத்தால் மட்டும்தான் அவர்களுக்கு சமத்துவ வாழ்க்கைத் தர முடியும்.

மக்களில் இன்னும் பெரும்பாலோர் இன்னும் வாழ்க்கைக்குரிய வினாக்களை தேடிக் கொண்டிருக்கிறனர்.எங்கிருந்து வந்தோம் ? எங்கே போகிறோம் ? ஏன் படைக்கப் பட்டோம்? படைத்தவன் யார் என்ற வினாக்கள் பலரின் இரவுகளை தூக்கமின்றி ஆக்கி விட்டது.அவர்களுக்கு இஸ்லாத்தால் மட்டும்தாம் பதில் தர முடியும்.சுவனத்தில் இருந்து வந்தோம்.இவ்வுலகம் ஒரு சோதனைக் கூடம்.அல்லாஹ் நம்மைப்  படைத்தான்.அவனை நாம் வணங்கிட வேண்டும்.மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இருக்கிறது .அல்லாஹ்வின் முன் நாம் நிறுத்தப் பட இருக்கிறோம்.நமது செயல்களுக்கு நாம் பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம்..நமது செயல்களுக்கு ஏற்ப நாம் செல்ல வேண்டிய இடம் நரகமா ?அல்லது நமது தாயகமான சுவர்க்கமா அங்கு தீர்மானிக்கப் படும்.

அனைத்திற்கும் மேலாக  இஸ்லாம் இது மனிதர்களின் இயற்க்கை மார்க்கம். உலகம் தொடங்கியது முதல் இந்த ஒரே மார்க்கம்தான் இருந்தது .மனிதர்கள் பின்னர் தங்களுக்குள் வெறுப் பட்டு பிரிந்து விட்டனர். மீண்டும் இந்த இயற்கை மார்கத்தின் பக்கம் மக்கள் திரும்ப வேண்டும். ஏனென்றால் அல்லாஹ்வால் ஏற்கப் பட்ட மார்க்கம் இஸ்லாம் ஆகும்.இஸ்லாம் அரபு நாட்டு மார்க்கமல்ல இது உலகின் மார்க்கம் உலகம் முழுவது ஒரே இறைவனை வணங்கி வழிப் பட மற்றும் நற்செயல்கள் புரிய மக்களை இறைவன் பல தூதர்களை அவர்களுக்கு அனுப்பினான் .அந்த செய்தியை கடைசியாக எடுத்து வந்தவர்கள் நபி முஹம்மது (ஸல் ) அவர்கள்.எனவே இன்னும் அன்னியமாக இஸ்லாத்தை நினைக்கும் மக்களிடம் அல்ல இது உலகின் மார்க்கம்.அனைத்துப் பகுதிகளின் மார்க்கம்,இயற்கை மார்க்கம் என்ற உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

இந்தப் பெருநாள்  -ஈதுல் பித்ர்  ரமலான் முடிந்து கொண்டாடப் படும் பெருநாள் . அது ரமலானில் நாம் செயல் படுத்திய நல்ல காரியங்களை எதிர் காலத்தில் தொடர்ந்து செயல் படுத்திட நாம் உறுதி பூணும் தருணமே தவிர இவை அந்த  நல்ல காரியங்கள் நம்மை விட்டு செல்லும் இறுதி தருணமல்ல .என்பதை கவனத்தில் கொண்டு செயல் படுவோமாக.

 

இவ்வுலகில் தூய்மையான வாழ்க்கை அதன் பயனாய் மறுவுலகில் நிரந்தர வெற்றியான வாழ்க்கை என ரமளானின் இலக்குகளை நோக்கி நம் வாழ்க்கை பயணத்தை தொடர அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.அதற்காக நம்மை நாமும் தயார் செய்வோம்.அல்லாஹ் அருள் புரிவானாக ! ஆமீன்

 

News

Read Previous

ஒரு கண்ணாடி இரவில் ……………

Read Next

சமூக நல்லிணக்கக் கொடியை உயர்த்துவோம்!

Leave a Reply

Your email address will not be published.