ஒரு கோயில் குளத்தின் புகைப்படம் கிளர்த்தும் நினைவலைகள்…………….

Vinkmag ad
IMG-20150725-WA0007ஐந்தாறு ஆண்டுகளுக்குமுன் எழுதிய கட்டுரை, 2016ல் நவீன விருட்சம் இலக்கிய சிற்றிதழின் நூறாவது இதழில் வெளியானது. உங்கள் வாசிப்புக்கு..
எஸ் வி வி
 
ஒரு கோயில் குளத்தின் புகைப்படம் கிளர்த்தும் நினைவலைகள்…………….
எஸ் வி வேணுகோபாலன் 
மஸ்கிருதத்தில் புஷ்கரணி என்பது குளத்தைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்…என் பாட்டிக்கு உகந்த சொல்லது. தள்ளாத வயதிலும் என் அம்மாவின் அம்மாவான பத்தாணி பாட்டி (பத்தாணி என்பது வைணவக் கோயில் ஒன்றில் தாயார் பெயர்), காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் குளமான, அனந்த சரஸில் இறங்கி ஆனந்தமாகக் குளித்து ஈரப்புடவையுடன் தெற்கு மாட வீதியிலிருக்கும் அவளது  வீட்டுக்குத் திரும்புவாள்.  முடியாத நாட்களில், தெருக்கோடி நகராட்சி குழாயில் விடியற்காலை நாலு நாலரை மணிக்கு அவள் தீர்த்தம் ஆடுவதுண்டு. அதற்குப் பிறகு குளிப்பது ஒரு குளியலே அல்ல என்பது அவளது ஐதீகம்.
அனந்த சரச தீர்த்தே
புண்ணிய கோடி விமானச் சாயே
பெருந்தேவி நாயகா சமேத……
என்று சொல்லி வரதராஜரை வழிபடுவாள்…
ஒவ்வொரு வைணவக் கோயில் குளத்திற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.  தீர்த்தங்களின் பெயர், கோபுரம் எனப்படும் விமானங்களின் பெயர், பெருமாளின் பெயர், நாயகியின் பெயர் எல்லாம் மனப்பாடமாகச் சொல்வாள் பாட்டி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு எப்படி சொல்ல வேண்டும், திருப்பதி பாலாஜிக்கு அது எப்படி மாறும் என்றும் சொல்லிக் கொள்வாள். அம்மாவை இளவயதில் பறிகொடுத்த எனக்கு அவளே நான் அறிந்த அம்மா.
காஞ்சிபுரத்துக் கோயில் குளத்தின் நிறம் வெறும் நீலமல்ல. கொஞ்சம் கருநீலம். பாட்டியின் நிறமது. இந்தக் குளத்தை விட்டுப் பிரிய முடியாமல்தான் அவள் சென்னைக்கும், காஞ்சிக்குமிடையே அல்லாடிக் கொண்டிருந்தாள். மிகவும் முதுமை மேலிட்ட காலங்களில் கேஸ் ஸ்டவ்வைப் பற்றவைத்துவிட்டு மேலாகக் கையைக் காட்டிச் சூடு தெரிவதை வைத்து அது எரிவதை உறுதி செய்து கொண்டிருந்த அளவு பார்வை போனபின்னும் அவளது கண்களுக்குள் தளும்பிக் கொண்டிருந்தது இந்த அனந்த சரஸ் தீர்த்தத்தின் திரட்சியன்றி வேறென்ன….
எனக்கு, குளம் மனத்துக்குள் எப்போதும் நிரம்பி இருக்கும் இனிய தீர்த்தம். என் வகுப்புத் தோழன் அது. எட்டாம் வகுப்பு படிக்கையில் நான் மேற்கொண்டு படிப்புக்காக காஞ்சிபுரத்திற்குச் செல்ல நேர்ந்தது, அந்தக் கோயில் வளாகத்திலேயே வாழ்வதற்குத் தான் என்று பொருள் செய்து கொண்டிருந்தேன்….
பிரும்மோற்சவ காலங்களில் குளத்து நீர், மேலாப்பில் நடனம் புரியும்….விரிந்து கொண்டே செல்லும் நீர் வட்டங்கள் நமது எண்ணங்களை அடுத்த கோடிக்குக் கொண்டு சேர்த்துவிட்டு திரும்பும் போல….
இளவட்டங்கள் சலீர் பளீர் என்று குதிப்பான்கள்…..பேயாட்டம் நீச்சல் போட்டு நீராழி மண்டபத்தில் அவர்கள் சென்றடையும் காட்சியை இமை கொட்டாமல் மணிக்கணக்கில் காதலுற அமர்ந்து பார்த்திருப்பேன்…அதில் ஒவ்வொருவராக கம்பத்தைப் பிடித்தபடி மேலேறி மண்டபத்தின் மேல் தளத்தில் கம்பீரம் குலுங்கல் உலவுவார்கள்…அவர்களது காதலியர் கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனரா என்பது குறித்த விவரங்கள் அப்போது சேகரிக்கும் வயது இல்லாமல் போய்விட்டது எனக்கு. அவர்கள் ஒவ்வொருவராக கரணங்கள் போட்டுக் கீழே நீரில் தொபுகடீர் என்று குதிக்கும்போது என் இதயம் அப்படித் துடிக்கும். யார் யார் எப்படி குட்டிக் கரணங்கள் அடிப்பார்கள் என்பது எனக்கு ஒரு கட்டத்தில் அத்துப்படி. இன்னார் இன்னார் இப்படி இப்படி தண்ணீரை வந்தடைவார்கள் என்று தெரியும். அவர்கள் வராத நாளில் பித்துப் பிடித்த மாதிரி ஆகிப் போகும்…கரையிலிருந்து கொம்பை வைத்துக் கொண்டு வீணாய்ப் போன ஒரு காவலாளி கண்டமேனிக்குக் கத்திக் கொண்டிருப்பான்…அவர்கள் அடுத்த ஜென்மத்தில் கூட அதற்குப் பதில் தர மாட்டார்கள்.
மற்றபடி, குளத்து நீரைக் கடனே என்று பட்டும் படாமல் பாசி வழுக்குமோ என்று பயந்து பயந்து மிகப் பல யாத்திரிகர்கள் தலையில் தெளித்துக் கொண்டு கரையேறிப் போவார்கள். மீன்களோ யார் தமக்குப் பொரி போடுவார்கள் என்று மீனைப் போன்றே உள்ள வாய்கள் விரித்தபடி உலவிக் கொண்டிருக்கும்.
(இந்த இடத்தில் கோவளம் கடற்கரை குறித்த கவிஞர் வாலியின் தொடக்க வரிகள் நினைவுக்கு வந்து முட்டுகிறது:
………………………………………………………….
நுணல் கூட்டம் மணல் மேட்டில் நின்றுலாத்தும்
இரைவேண்டிப் பறவையினம் இரைச்சல் போடும்
ஏய்ப்பது போல் மீன்குழாம் தான் பாய்ச்சல் காட்டும்….)
இந்த மீன்குழாம்களை பிடித்து மீன் குழம்பு வைக்க முடியாது. ஆனால் அப்படியே கொத்திப் போகப் பறவை துடித்து வரும். அதைத்தான் வாலி எழுதி இருக்கிறார் மேலே…
நீராழி மண்டபத்திற்கு தெப்போற்சவத்தின் போதுதான் மரியாதை கூடும். நிரந்தரத் தெப்பமாக அது இப்போது காட்சி அளிக்கிறது. தெப்பத்தில் செல்லும் உற்சவமூர்த்திகள் அந்த நீராழி மண்டபத்திற்கு எழுந்தருளி மீள்வது கொண்டாட்டமான சேவையாக கோயில் கொள்ளாத கூட்டமாக நடந்தேறும்.
நூற்றுக்கால் மண்டபத்திற்குப்  பின்புற படிக்கட்டுகளில் உட்கார்ந்துதான் குளத்தைப் பார்ப்பேன் நான். நெருங்கிய உறவினர் எடுத்து அனுப்பி இருக்கும் இந்தப் புகைப்படம் அதற்கு நேர் எதிர்ப்புறத்தில் இருந்து எடுக்கப் பட்டதற்கு நன்றி. கோயிலின் மிகப் பெரிய கோபுரம் உள்வாயில், நூற்றுக்கால் மண்டபம், அனைத்தம் படத்தில் வந்துவிட்டது….
தண்ணீர் ஓர் அருமையான வேதிப் பொருள். ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் இரண்டுக்கு ஒன்று விகிதத்தில் கலந்த இந்தப் பொருள் அடிப்படையில் வாயுவாகவே இருந்திருக்கும். ஆனால், அதன் ஒரு மூலக்கூறில் இருக்கும் ஹைட்ரஜனும், அடுத்த மூலக் கூறில் இருக்கும் ஹைட்ரஜனும் தமக்குள்ள நட்பை உருவாக்கிக் கொண்டு நெருக்கமான அணுக்கள் திரள் உருவாக நேர்வதால், அது சுருங்கி திரவ நிலை எட்டிவிட்டது. உயிர்களின் ஆதி அந்தமே நீர்த் துளி தானே…ஒற்றுமை, அன்பு, நேயம், பரஸ்பரம் கட்டித் தழுவுதல் (கிரேசி மோகனின் கட்டிப்புடி வைத்தியம்), இதுதானே உயிரின் இயற்கை…ஆனால், நாம் எவ்வளவு சிரமப்பட்டு காரணங்களைத் தேடி மனத்தைப் போட்டு வறுத்தெடுத்து பிரிந்து கிடக்கிறோம். பிரித்துக் கொண்டே நடக்கிறோம். உயிர்களிடத்து அன்பு வேண்டும். தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும் என்றான் மகாகவி. அவனது பரிபாஷையில் சொல்லப்படும் தெய்வம் சாதாரண பொருளில் சுட்டப்படும் தெய்வமல்ல. அன்பு கொண்டாடிகளே மனிதர்கள் என்பதுதான் இந்த வரியின் அடிநாதம்.
ஸ்படிகம் என்று சொல்வது வழக்கு. அத்தனை தெள்ளியதாகக் காட்சியளிக்கும் நீர்ப்பரப்பு, நமது உள்ளத்தின் கண்ணாடி பிரதிபலிப்பு. மனத்துக் கண் மாசிலன் ஆதல் என்று வள்ளுவர் இப்படியான நீர்ப்பரப்பாக உள்ளத்தை வைத்துக் கொள்ளச் சொல்கிறார். அத்தனை வக்கிரங்களையும், அழிப்பு தத்துவங்களையும், பகைமை உணர்ச்சியையும், வெறுப்பையும் போட்டுக் கலக்கிக் கலக்கி நீர்ப்பரப்பை தூய்மையற்ற குட்டையாகக் குழப்பி விடுகிறோம் நடைமுறையில்….தெளிவான தண்ணீரில் குளித்தெழ ஞாயிறும், திங்களும் துள்ளிக் குதித்து வருகின்றன. நமது முகம் அடுத்தது காட்டும் பளிங்கு போல், குளத்து நீர் நமக்கு  ஒரு செல்ஃபி எடுத்துக் கொடுக்கிறது. கற்பிக்கிறது. நாமோ அற்பியாக வாழவே போட்டி போடுகிறோம்…
வெவ்வேறு கட்டுமானங்களின் நீள அகல உயரங்களின் ஜியோமிதி பிரமிக்க வைக்கும்வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. பெயர் தெரியாத அந்த சிற்பிகளுக்கு, அர்ப்பணிப்போடு உழைத்த உழைப்பாளிகளுக்கு நமது வணக்கங்கள் போய்ச் சேரட்டும்.
புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கும் கோணத்தில் இடதுபுறம் சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கிறது. நான் ஆத்திகனாக இருந்த காலத்தில் – பத்தாம் வகுப்பு படிக்கையில் அவர்மீது நூற்றந்தாதி எழுதி இருந்தேன்.
வரதன்தன் சன்னதிவாழ் சக்கரமே அங்கு
வர தன்தன் பாவமும் போம்
என்ற வரிகளைத் தவிர மற்றது நெஞ்சில் நிற்கவில்லை. இது மடக்கணி எனப்படும் விதத்தில் ஒரே வரிசை சொற்களை வெவ்வேறு விதமாகப் பிரிக்கையில் வெவ்வேறு பொருள் தரும் வண்ணம் அமைவது. வரதன்  தன் என்றது, பிறகு வர தன்தன் என்று பிரிந்துவிட்டது. தலைவிதிவசம் என்ற சொற்றொடர், தலைவி திவசம் என்றும் பிரியும்.  ஒரு குயர் நோட்டுப் புத்தகம் முழுக்கக் கவிதைகளோடு நான் ஊடாடிக் கொண்டிருந்த காலமது.
சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு அருகேதான் வெடிக் கிடங்கு இருந்தது. மிக வலுவான கழியின் ஒரு முனையில் இரும்புப் பூண் போட்டு வைத்திருப்பார் வெடி வைப்பவர். அதில் கிடுக்கி வைக்கக்கப்பட்ட மருந்தை, அந்த இரும்புப் பூண் மூங்கிலோடு சேருமிடத்தில் வைத்திருக்கும் சிறு துளையில் தீப் பற்றவைத்துக் கழியினைக் கையில் தாங்கியபடி தலையை மட்டும் குனிந்து கொள்வார் வெடி வைப்பவர். இதயம் அறுந்து விழும் மிகப் பெரும் சத்தத்தோடு அந்த வெடி வெடிக்கும். முதன்முறை பார்த்தபோது ஆடிப்போய்விட்டேன். அப்புறம் அதைத் தள்ளிநின்று பார்ப்பதற்கே உற்சவங்கள் எப்போது வரும் என்று கோயில் பஞ்சாங்கத்தில் தேடிப்பார்த்துக் குறித்துக் கொண்டு காத்திருப்பேன். வெடிச்சத்தம் கேட்டவுடன் பறவைக் கூட்டங்கள் கோபுரத்தின் உச்சியிலிருந்து பெரும் சத்தம் எழுப்பி அதை நிராகரித்தபடி இறக்கைகள் படபடக்க மேலேறிச் சென்று பறந்து மீண்டும் வந்து உட்காரும், போலி நம்பிக்கையோடு.
குளத்தங்கரையின் இந்தக் கோணத்தில், வலப்பக்கம் உள்ள மண்டபங்கள் சிலவற்றினுள் என்ன இருக்கிறது என்றே தெரியாது. ஆனால் குதிரை  லாயம் ஒன்று. அடுத்தது யானை செருக்கோடு நிற்கும் ஷெட் ஒன்று. யானைப் பாகன் முகமும், குதிரைக்காரர் முகமும் 40 ஆண்டுகளுக்குமுன் பார்த்த மாதிரியே அவர்களது சிரிப்பு, சிடுசிடுப்பு, தவிப்பு அத்தனை ரசனைகளோடு மனத்தில் நிழலாடுகிறது.
இந்த அற்புதமான புகைப்படம் இயற்கைக் காட்சியாகக் கண்கொள்ளாக் காட்சியாக சிலிர்க்க வைக்கிறது. ரயில் நிலைய இடங்களை விற்று விட்டு எல்லாவற்றையும் தனியார்மயப் படுத்தத் துடிக்கும் சக்திகள்  அலையும் காலத்தில், இயற்கை என்பதை இனி செயற்கையாகவே பார்க்க நேரிடும் போலிருக்கிறது. 2100 என்ற தலைப்பிலான ஓர் ஓவியப் போட்டியில் ஒருவர் மரத்தை மியூசியத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து கீழே மரம் என்று எழுதி இருப்பதாகப் போட்டுக் கலக்கி இருந்த கண்காட்சியை சென்னை லலித் கலா அகாதமியில் 20 ஆண்டுகளுக்குமுன் பார்த்தேன். கண்ணீர் பெருகுகிறது.
நூற்றுக்கால் மண்டபத்தின் பின்புறம் வந்து குளத்தங்கரையில் அமர்ந்து பார்க்க எனக்கு யார் கற்றுத் தந்தது என்று நினைவில் இல்லை. ஆனால் அங்கே என்னோடு சுமார் இரண்டு ஆண்டுகள் அமர்ந்து சுழி விழ சிரித்தபடி கதைகள் பகிர்ந்து கொண்டிருந்த ஸ்ரீதர் என்னும் வகுப்புத் தோழனை, பத்தாம் வகுப்பை எட்டுமுன் இழந்தேன். இதயத்தில் இருந்த துளை காரணமாக அவன் மரித்துப் போன கதை, புகைப்படத்தில் இருக்கும் அனந்தசரஸ் குளத்திற்கு நிச்சயம் தெரியும்…..
நவீன விருட்சம்:100 (2016)
 

News

Read Previous

தமிழால் இணைவோம்…!

Read Next

மன்னித்துவிடு கண்ணே

Leave a Reply

Your email address will not be published.