50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுகூடிய
அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்களின்
‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்…’
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான சந்திப்பு…

Vinkmag ad

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுகூடிய
அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்களின்
‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்…’
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான சந்திப்பு…

புதுக்கோட்டை.
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1972 முதல் படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு,  கடந்த 2023 பிப்ரவரி 4 அன்று ஒன்றாய் கூடி சந்தித்து, அன்பினைப் பகிர்ந்துகொண நிகழ்வு பார்ப்பவரை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைய வைத்தது.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இன்று அரசு அதிகாரிகளாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், தொழிலதிபர்களாகவும், சுயதொழில் செய்பவர்களாகவும் விளங்கி வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக 1987-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து ‘ திருக்கோகர்ணம் மாணவர்கள்’ எனும் வாட்ஸ்அப் குழுவை உருவாக்கினார்கள். இக்குழு தொடங்கப்பட்ட சில மாதங்களுக்குள்ளேயே சுமார் 1300-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இக்குழுவில் இணைந்தனர். பிறகு முன்னாள் மாணவர்கள் அனைவரும் தாங்கள் படித்த பள்ளியில் கூடிப் பேசவும், பள்ளிக்கு தேவைப்படும் சில அடிப்படையான உதவிகளைச் செய்வதெனவும் முடிவெடுத்தனர்.

அதனடிப்படையில், கடந்த சனிக்கிழமையன்று திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடினர். காலை 8.30 மணியிலிருந்தே முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு வரத்தொடங்கினர். 1972 தொடங்கி,  2022 வரை 50 ஆண்டுகளில் இப்பள்ளியில் படித்த சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பெருந்திரளாகக்கூடி, தங்களது பள்ளிக்கால மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். மாணவர்கள் மட்டுமல்லாது முன்னாள், இந்நாள் ஆசிரியர்களும் 20-க்கும் மேற்பட்டோர் இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில் கலந்துகொண்டது கூடுதல் சிறப்பு.

முன்னாள் மாணவர்கள் முன்னிலையில் நிகழ்வில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களும் கெளரவிக்கப்ப்ட்டனர். ஆர்வத்தோடு கலந்துகொண்ட முன்னாள் மாணவர்களிடையே தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி, மத்திய அரசின் பால சாகித்திய புரஸ்கார் விருதுபெற்ற இப்பள்ளியின் முன்னாள் மாணவர் மு.முருகேஷ் ஆகியோர் உரையாற்றினர். முன்னாள் ஆசிரியர்கள் சார்பில் உசேன், முத்துக்குமார், சின்னையா, நாகம்மை ஆகியோர் பேசினர்.

திருக்கோகர்ணம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் லதா, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி ஆகியோர் பள்ளிக்குத் தேவைப்படும் அடிப்படையான உதவிகளைப் பற்றி கூறினர். உடனே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தாமாகவே பல்வேறு உதவிகளைச் செய்ய முன்வந்தனர். முன்னாள் மாணவர்கள் ச.சீனிவாசன், மு.முருகேஷ் இருவரும் சேர்ந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நூல்களைப் பள்ளி நூலகத்திற்கு வழங்கினர். பள்ளிக்கு கழிவறை மற்றும் தண்ணீர்த்தொட்டியைக் கட்டித்தருவதாக முன்னாள் மாணவரும் தொழிலதிபருமான எஸ்.எஸ்.பி.காஜாமொய்தீன், குடிநீருக்குத் தேவையான ஆர்.ஓ. வாட்டர் சிஸ்டம் அமைத்து தருவதாக திருச்சியில் வசிக்கும் முன்னாள் மாணவர் சி.ராமச்சந்திரனும் முன்வந்தனர்.

சிறுவயதில் பள்ளி மாணவர்களாகப் பழகி, இன்றைக்கு 20, 30, 40, 50 ஆண்டுகள் கடந்து பார்க்கையில் கட்டித்தழுவியும், கண்ணீர் மல்கியும் என்றும் மறக்காத நண்பர்களாக நின்ற காட்சி நெகிழ்ச்சிக்குரியதாக அமைந்தது. இனி ஆண்டுக்கு ஒருமுறை இப்படியான ஒன்றுகூடும் சந்திப்பை நடத்துவதோடு, பள்ளிக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருவதென்றும் முன்னாள் மாணவர்கள் முடிவெடுத்தனர்.இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் லதா, செந்தில்குமார், கி.சரவணன், சி.கருணாநிதி, ஓம்ராஜ், கண்மணிசுப்பு, ராஜமகேந்திரன், ஈஸ்வரன் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

News

Read Previous

சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா ?

Read Next

அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்: கணக்கெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published.