முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

Vinkmag ad

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

உலக சரித்திரத்தின்
தலையாய தலைவர்கள் என்ற
ஆளுமை வளாகத்தில்
ஸ்டால்-இன் என்று
ஸ்டால் திறந்துவிட்டார்
ஸ்டாலின்

செவ்வாய்க்கோள் செல்ல
ஏழுமாதம் பிடிக்குமாம்
ஸ்டாலின் வேகத்தில் விரைந்தால்
ஏழுநாளே போதுமென்று
நாசா தன் விண்வெளிக் குறிப்புகளை
மாற்றிக்கொண்டிருக்கிறது

ஸ்டாலின் என்றாலே
ரஷ்யா என்றெண்ணும் உலகு
இன்று
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
என்று திருத்திக்கொண்டது

சுதந்திர இந்தியா
இதுநாள்வரை கண்டிராத
தங்கத் தலைவராய்த் தகதகக்கிறார்
தளபதி ஸ்டாலின்


புதுமையோ எழுச்சியோ
மாற்றுத் தத்துவமோ அல்ல
நேர்மையான நேர்த்தியான
நிர்வாகமே இன்றைய புரட்சி

கவன நீரூற்றி பொறுப்பு உரமிட்டு
நிர்வாகப் பெருமரத்தில்
தங்கப் பூக்களைப்
பூத்துக் குலுங்க வைக்கிறார்
ஸ்டாலின்

கோட்டைச் சுவற்றின் பொந்துகளில்
சிற்றெலிகளாய் நுழைந்த
பெருச்சாளிகளை
பொறிவைத்துப் பிடித்து
கோடையைக் கைப்பற்றிய கணம்முதல்
நெருப்பாய்ப் பற்றிப் படர்ந்து
வெற்றிகள் குவிக்கிறார்
ஸ்டாலின்


அண்ணாவை
அல்வாத் துண்டாய்
ஆட்டிக் காட்டுகிறார்கள்
அதிமுகவில்

உயிர்பெற்று சமாதி விட்டெழுந்து
கடற்காற்றில் முகமும்
கடமை கண்ணியம்
கட்டுப்பாட்டில் அகமும்
பூரித்து மலர அண்ணா
ஆட்சியே செய்கிறார் இன்று
திமுகவில்

பெரியார் அண்ணா கலைஞர் மட்டுமல்ல
அம்பேத்கரும் பிரகாசிக்கிறார்
ஸ்டாலின் முகத்தில்


குனிந்து குனிந்து
உடைந்துபோன முதுகுகளை
குப்பையில் அள்ளிக்கொட்டி
தமிழனின் மானமும் வீரமும் காத்த
கற்பு மீட்புத் தொண்டு
அப்பப்பா அது
அனையாக் கற்பூரத் தொண்டு


யாதும் ஊரானோம்
யாவரும் கேளிரானோம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று
மெய்ப்பித்தோம் நாங்கள் தமிழர்கள்

பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும் என்றோம்
நாங்கள் தமிழர்கள்

சமூகநீதியே
பண்பாடு என்றோம்
சகோதரத்துவமே
உடன்பாடு என்றோம்
நாங்கள் தமிழர்கள்

வேற்றுமைகளைக் கீழிறக்கி
மனிதநேயத்தை வெற்றிக் கோப்பை
ஏந்த வைத்தோம் நாங்கள் தமிழர்கள்

அர்ச்சகர் பணியென்றாலும்
அனைவருக்கும் பொது என்றோம்
நாங்கள் தமிழர்கள்

ஏற்றத் தாழ்வுகள் ஏதுமின்றி
மொத்தச் சமூகத்திற்குமான
சமூகநீதியை சுயமரியாதையை
பொருளாதார வளர்ச்சியை
சமமாகக் காண்கிறோம்
அந்த வானத்தைப் போல
நாங்கள் தமிழர்கள்


இது திராவிட மாடல் என்று
மார்தட்டுகிறோம்
உலகிற்கே பாடசாலையாகிறோம்
நாங்கள் தமிழர்கள்

இந்தியாவின் தலைநகரம்
சென்னை என்றாக்கினோம்
நாங்கள் தமிழர்கள்

தமிழர்களின் தலைவர்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

நடைபாதை மக்களின்
தோழனாய்த் தோள்தொடும்
நட்புக் கரங்களுக்குச் சொந்தக் காரர்
ஸ்டாலின்

சுனாமிப் பேரலையில் ஏறி
மக்கள் துயர் துடைக்கப்
பாய்ந்து வருபவர்
ஸ்டாலின்

மக்களின் முத்த விருதுகளை
வாங்கிக் குவிப்பதற்காகவே
அரசியல் களத்தில்
அயராமல் போரிடும் மாவீரர்
ஸ்டாலின்

கோவில் சொத்துக்களை மீட்டெடுத்து
கோவில்களுக்கே வழங்கிய
நடுநிலை வேந்தர்
ஸ்டாலின்

தமிழ்த்தாய் வாழ்த்தை
தமிழ் மாநிலப் பாடலாக்கி
தமிழை அவமதித்தவர்களையும்
எழுந்து நிற்க வைத்த அறிவுமதி
ஸ்டாலின்

தமிழ்வழிக் கல்வி பயின்ற
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
அரசாங்க வேலையில் முன்னுரிமை தந்து
தமிழை வயிற்றுமொழியாகவும்
ஆக்கிய தமிழ்ப்பற்றாளர்
ஸ்டாலின்

வாகனத்தை நிறுத்தி
வழியில் நிற்கும் கோரிக்கைகளுக்கும்
செவியாய்க்கும் தங்கச் செவிக்காரர்
ஸ்டாலின்

மாநிலங்களெல்லாம்
கண்விழித்ததும் காணும்
செய்திகளாய்
தமிழகச் செய்திகளையே
காண வைத்த கதாநாயகர்
ஸ்டாலின்

உங்களில் ஒருவன் என்று
தன்னை முன்னிலைப்படுத்தாது
மக்கள் நலனையே
முன்னிலைப்படுத்தும் எளியவர்
ஸ்டாலின்

அமெரிக்க ஐரோப்பிய
நாடுகளுடன்தான் போட்டி
இந்திய மாநிலங்களுக்கோ
முன்மாதிரி என்று காட்டும்
அமர்க்கள நிர்வாகி
ஸ்டாலின்

அடடா
இவருக்கு ஓட்டுப் போடாமல்
போனோமே என்று
மாற்றி ஓட்டுப்போட்டவர்களையும்
எண்ணவைப்பதே இலக்கு என்பவரை
எப்படித்தான் தோற்கடிப்பது?

இன்று…
ஸ்டாலின் பிறந்தநாளாம்
ஆட்சி மலர்ந்தபோதே
தமிழ்நாடு மீண்டும் பிறந்துவிட்டது

அன்று தொட்டு இன்றுவரை
ஒவ்வொரு நாளும்
மாற்றமும் மறுமலர்ச்சியும் பிறக்கும்
பிறந்த நாட்களாகவே ஆகிவிட்டன
இன்றைய நாட்கள்

ஆக…
இன்றுதானா
ஸ்டாலின் பிறந்தநாள்?

ஸ்டாலின் ஆட்சியின் எல்லா நாளும்
ஸ்டாலின் பிறந்தநாள்தான்
தமிழ்நாட்டின் பிறந்தநாள்தான்

வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
வானநடை போடும்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

அன்புடன் புகாரி
மார்ச் 1, 2022

News

Read Previous

பொறை ஒன்றும் குறை அன்று

Read Next

ஷரீஅத்தின் போர்வாள் டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி ஹழ்ரத் நினைவேந்தல்

Leave a Reply

Your email address will not be published.