நான்கு வழிச் சாலைப் பணிகள் தடைப்படுவதற்குப் பாரதிய ஜனதா அரசின் மெத்தனப் போக்கே காரணம் விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை

Vinkmag ad

நான்கு வழிச் சாலைப் பணிகள் தடைப்படுவதற்குப் பாரதிய ஜனதா அரசின் மெத்தனப் போக்கே காரணம் விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை

மத்திய காங்கிரஸ் அரசால் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட காரோடு – காவல்கிணறு  இடையான நான்கு வழிச்சாலை பணிகள் பல்வேறு தடைகளையும் தாண்டி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது.  2019-ம் ஆண்டு நீதிமன்றம் குமரி மாவட்டத்திலிருந்து கல், மண் ஆகியவற்றை எடுப்பதை தடை செய்ததால் இந்த நான்கு வழிச்சாலையில் பணிகள் இப்போது மத்திய அரசால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.  நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எனது தந்தையுமான அமரர் திரு.வசந்தகுமார் அவர்கள் இந்தப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை    மேற்கொண்டார். அப்போது  கோவிட் சூழ்நிலை காரணமாக பணிகள் நடைபெறாமல் தடைப்பட்டு வந்தது. மேலும் இந்த திட்டத்திற்காக நிலத்தை அளித்த நில உரிமையாளர்களுக்கு போதிய  நிவாரணம் மத்திய அரசால் அளிக்கப்படவில்லை. அதன் காரணமாகவும் பணிகள் தடைப்பட்டு  வந்தன. தந்தையின் மறைவுக்குப் பின் நான் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்த நான்கு வழிச்சாலையை விரைவில் முடிப்பதற்காக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத்  துறை அதிகாரிகளைப் பலமுறை சந்தித்து வேண்டுகோள் விடுத்து வருகிறேன்.  மேலும் நில உரிமையாளர்களுக்கு போதிய நிவாரணம் கிடைக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு அதில் பெரிய அளவில் வெற்றியும் பெற்றுள்ளோம். இந்தத் திட்டத்தைக் குறித்தும் அதை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும் பாராளுமன்றத்திலும் குரல் கொடுத்தேன். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை செப்பனிடுவதற்காக அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்து 14.99 கோடி ரூபாய் தொகுதி மக்களுக்காக பெற்று தந்ததையும் இத்தருணத்தில் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில் பக்கத்து மாவட்டத்திலிருந்து மண் எடுத்து வருவதற்கு உகந்த வகையில் புது ஒப்பந்தம் போட்டு ஒப்பந்தக்காரரை முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளேன்.  ஆனால் இதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் மத்திய பாரதிய ஜனதா அரசு மெத்தனப் போக்கைக் கடைபிடித்து வருகிறது.

இந்நிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த சூழ்நிலையைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் லாபம் அடைவதற்கு முயற்சிப்பது  துரதிர்ஷ்டம்.  பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் நெருங்கி வரும் போது மட்டும் மக்கள் ஞாபகம் வருவது வியப்பளிக்கிறது. குமரி மாவட்ட மக்கள் பாரதிய ஜனதா கட்சியைத் தேர்தலில் தோற்கடித்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் திட்டம் வேண்டுமென்றே கிடப்பில் போடப்பட்டது.

நடைபெற்று வருகின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் இந்த விஷயத்தைக் குறித்து பேசுவதற்காக நான் நேரம் ஒதுக்கி கேட்டுள்ளேன். வரும் வாரத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்திக்க உள்ளேன். ஆகவே மக்கள் சம்பந்தமான இந்த முக்கியமான விஷயத்தில் அரசியலை புகுத்தாமல் இருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது மக்கள் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில்  திட்டமிட்டு விஷயத்தை திசை திருப்பி மக்களை பொய் கூறி ஏமாற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

நான்கு வழிச்சாலை பணிகளை மத்திய அரசு விரைவாக முடிக்காத பட்சத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

News

Read Previous

பரமக்குடி மக்கள் நூலகம் நூல் திறனாய்வு மற்றும் பாராட்டு விழா

Read Next

உலக பெற்றோர் தினம்

Leave a Reply

Your email address will not be published.