திருக்குறள் கதைகள்

Vinkmag ad

திருக்குறள் கதைகள்…
 —  பார்த்தசாரதி ரங்கஸ்வாமி

source – https://thirukkuralkathaikkalam.blogspot.com/2020/07/347.html

வீட்டுக்கு வந்த நண்பர்…..

“வாடா! எவ்வளவு நாள் கழிச்சு என் வீட்டுக்கு வந்திருக்க! உக்காரு” என்று நண்பர் சாமிநாதனை உற்சாகத்துடன் வரவேற்றார் பழனிவேல்.

சாமிநாதன் உட்கார்ந்ததும் கண்களைச் சுழற்றி வரவேற்பறையில் பொருட்கள் தாறுமாறாகச் சிதறி இருப்பதைப் பார்ப்பதை கவனித்துப் பழனிவேல் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

“கம்பெனி எப்படி நடக்குது? 24 மணி நேரமும் கம்பெனியையே நினைச்சுக்கிட்டிருப்பியே! என் வீட்டுக்கு வர உனக்கு நேரம் கிடைச்சதே பெரிய விஷயம்தான்!” என்றார் பழனிவேல்.

“என்ன செய்யறது? உன்னை மாதிரி ரிடயர் ஆயிட்டு ஹாய்யா வீட்டில் உக்காந்திருக்க முடியலே என்னால. கம்பெனியில ஏகப்பட்டபிரச்னை. எனக்கும் 70 வயசு ஆகப் போகுது. சமாளிக்கிறது கஷ்டமாத்தான் இருக்கு. அதனாலதான் ஒரு ஆறுதலுக்கு உன்னைப் பாத்துப் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்.”  

“அதான் உன் பையன் இருக்கானே? அவன் பாத்துக்கறான். நீயும் என்னை மாதிரி ஹாய்யா வீட்டில இருக்கலாமே!”

இதற்குள் கையில் காப்பியுடன் வந்த பழனிவேலின் மனைவி கங்கா, “எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சு. சுமதியையும் அழைச்சுக்கிட்டு வந்திருக்கலாம் இல்ல?” என்றாள் காப்பியை டீபாயில் மீது வைத்தபடி. பழனிவேலிடம் திரும்பி, “உங்களுக்கு வேண்டாம். நீங்க ரெண்டு தடவை காப்பி குடிச்சாச்சு” என்று சொல்லிச் சிரித்தாள்.

“இன்னொரு நாளைக்கு அழைச்சுக்கிட்டு வரேம்மா! நீங்கள்ளாம் நல்லா இருக்கீங்க இல்ல?” என்று கங்காவிடம் சொல்லியபடியே காப்பி டம்ளரைக் கையில் எடுத்துக் கொண்டார் சாமிநாதன்.

“‘எல்லாரும் நல்லா இருக்கோம். பேசிக்கிட்டிருங்க! இதோ வரேன்!” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள் கங்கா.

“என் பையனைப் பத்திக் கேட்ட இல்ல?” என்று பழனிவேலின் கேள்விக்கு பதில் சொல்லி உரையாடலைத் தொடர்ந்தார் சாமிநாதன். “அவன் பாத்துப்பான்னு நினைச்சுத்தான் ரெண்டு வருஷம் முன்னால கம்பெனியை அவன் பொறுப்பிலே விட்டுட்டு கொஞ்ச நாள் வீட்டில இருந்தேன். ஆனா கம்பெனியில என்ன நடக்குதுன்னு கவனிச்சுக்கிட்டேதான் இருந்தேன். அவன் நிர்வாகம் சரியா இல்ல. அதனால நான் மறுபடியும் ஆஃபீசுக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். இப்பவும் அவன்தான் எம் டி. எனக்கு கம்பெனியில எந்தப் பதவியும் கிடையாது. ஆனா நான்தான் கம்பெனியை நடத்திக்கிட்டிருக்கேன். எல்லா பிரச்னையையும் நான்தான் சமாளிச்சுக்கிட்டிருக்கேன். அவன் டம்மியாத்தான் இருக்கான்.”

“அவனை டம்மியாக்கினது நீதானே?”

“பின்னே கம்பெனியை ஒழுங்கா நடத்தலேன்னு பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா? நான் வளர்த்த கம்பெனி இது!”என்றார் சாமிநாதன் உணர்ச்சிப் பெருக்குடன்.

“சாமிநாதா! உனக்கு யோசனை சொல்ற தகுதி எனக்குக் கிடையாது. நான் ஒரு சாதாரண வேலையில இருந்து ரிடயர் ஆனவன். நான் வேலையில இருந்தப்ப எனக்குக் கூட என் மேலதிகாரிகள் செய்யறது சரியில்லைன்னு, வேற மாதிரி செய்யணும்னு பல சமயம் தோணும். ஆனா எனக்கு அதிகாரம் இல்லையே! என்னைக் கேட்டாலே ஒழிய நானா யோசனை கூடச் சொல்ல முடியாது. அதனால என் வேலையை என்னால முடிஞ்ச அளவுக்கு செஞ்சுக்கிட்டு இருந்தேன். இப்ப ரிடயர் ஆகி பத்து வருஷம் ஆச்சு. இன்னும் என் கம்பெனி நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு. இப்ப கூட சில சமயம் ஆஃபிபீஸுக்குப் போனா சில விஷயங்கள் எல்லாம் சரியில்லைன்னு தோணும். இப்ப மானேஜரா இருக்கறவன் என்னோட ஜுனியர்தான். அவன் கிட்ட நான் ஏதாவது யோசனை சொன்னா காது கொடுத்துக் கேப்பான். ஆனா நான் எதுவும் சொல்றதில்ல. நாமதான் விலகி வந்தாச்சே, அப்புறம் எதுக்கு கம்பெனி விஷயங்கள்ல ஈடுபாடுன்னு நினைச்சுக்கிட்டு பொதுவா ஏதாவது பேசிட்டு வந்துடுவேன்.”

“அது உன் கம்பெனி இல்லையே அப்பா! என்னால அப்படி இருக்க முடியாதே!”

“இருக்கலாம், நீ மனசு வச்சா! உனக்கு அப்புறம் எப்படியும் உன்  பையன்தான் பாத்துக்கப் போறான். இப்பவே அவனைப் பாத்துக்க விடறதில என்ன தப்பு? உன்கிட்ட அவன் ஆலோசனை கேட்டா சொல்லு. இல்லாவிட்டா பேசாம இரு.”

“அவன் எங்கிட்ட யோசனை கேக்க மாட்டானே! தனக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சுக்கறான். அதானே பிரச்னை?” என்றார் சாமிநாதன் கோபத்துடன்.

“நீதான் அப்படி இருக்க. அதான் பிரச்னை!” என்கிறார் பழனிவேல் சிரித்தபடி.

“என்னடா சொல்ற?”

“நமக்கு எல்லாருக்கும் இருக்கற ஒரு பொதுவான மனப்பான்மை இது. நம்மளாலேதான் எதையும் சரியாச் செய்ய முடியுங்கற எண்ணம்! மத்தவங்க செய்யறது வேற மாதிரியா இருந்தா அது சரியா இருக்காதுன்னு நினைக்கிறோம். ஒவ்வொத்தருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கு. அவங்க அதன்படிதான் செயல்படுவாங்க. உதாரணமா தொழிலாளர்கள் பிரச்னையை நீ கையாண்ட விதம் ஒரு மாதிரியா இருந்திருக்கலாம். உன் பையன் வேற மாதிரி கையாள முயற்சி செய்யலாம்”

“அதேதாண்டா நடந்தது! எப்படி நேர்ல பாத்த மாதிரி சொல்ற?” என்றார் சாமிநாதன் வியப்புடன்.

“எல்லா நிறுவனங்களிலேயும் இருக்கக் கூடிய ஒரு பிரச்னையை உதாரணமா சொன்னேன். அவ்வளவுதான். மத்தபடி உன் நிறுவனத்தோட பிரச்னைகள் என்னன்னு எனக்குத் தெரியாது. ஆனா எந்த ஒரு விஷயமும்  நமக்குத்தான் தெரியும், நம்மளாலேதான் அதைச் செய்ய முடியும்னு நினைக்கறப்ப அது நம்முடையதுங்கற மாதிரி ஒரு பிடிப்பு ஏற்பட்டு அதிலேந்து விட முடியாம போயிடும். அதனால நமக்குத் பிரச்னைகள்தான் அதிகமாகும். எந்த விஷயமா இருந்தாலும் ஒரு கட்டத்திலே அதை நாம விட்டுத்தானே ஆகணும்?’ என்றார் பழனிவேல்.

“பெரிய ஆன்மீகவாதி மாதிரி பேசறியே! நிறைய ஆன்மீக விஷயங்கள் எல்லாம் படிப்பியோ?”

“அதெல்லாம் இல்ல.  எல்லாம் அனுபவத்தில் கத்துக்கிட்டதுதான்!”

“அனுபவமா?”

“அனுபவம்னா உன்னை மாதிரி ஒரு நிறுவனத்தை நடத்தின அனுபவம் இல்ல. என் வீட்டிலேயே நான் நிர்வாகம் பண்ணின அனுபவம்! முன்னெல்லாம் வீட்டு நிர்வாகத்தில நான் ரொம்பத் தலையிடுவேன். பொருட்களை எங்கெங்கே வைக்கறதுங்கறதிலேந்து குடும்பம் சம்பந்தப்பட்ட பெரிய பெரிய விஷயங்கள் வரை நான்தான் தீர்மானிக்கனும்னு நினைப்பேன். இங்கே பாரு பொருட்கள் தாறுமாறாக் கிடக்கறதை! முன்னேயெல்லாம் இப்படி இருக்கறதைப் பாத்தா எனக்கு ரத்தக் கொதிப்பே வந்துடும்.”

“ஆமாம். நான் கூட கவனிச்சேன். நீ எல்லா விஷயத்திலேயும் ஒரு ஒழுங்கு இருக்கணும்னு நினைக்கறவனாச்சே!”

“முன்னெல்லாம் ஏதாவது சரியில்லேன்னா நான்தான் அதை சரி பண்ணனும்னு நினைப்பேன். அப்புறம் புரிஞ்சது. நான் அவசரப்பட்டு எல்லாத்திலேயும் தலையிடாம இருந்தா, வீட்டில இருக்கற மத்தவங்களே அதையெல்லாம் சரி செய்வாங்கன்னு. என்ன, அவங்க வேற மாதிரி வைக்கலாம். வச்சுட்டுப் போகட்டுமே. நான் வைக்கிற விதம்தான் சரின்னு ஏன் நினைக்கணும்? எல்லாம் என்னுடையது, நான் செய்கிற விதம்தான் சரிங்கற எண்ணம்தான் இதுக்கு காரணம்னு புரிஞ்சதும் கொஞ்சம் கொஞ்சமா என்னை மாத்திக்கிட்டேன். இப்ப எனக்கு இதெல்லாம் ஒரு பிரச்னையா தெரியறதில்ல. பொருட்கள் எல்லாம் இப்படிக் கிடக்கேன்னு நான் கவலைப்படறதில்ல. கொஞ்ச நேரம் கழித்து யாராவது வந்து எல்லாத்தையும் எடுத்து வைப்பாங்க. எடுத்து வைக்காட்டாலும் சரிதான். அது ஒரு பிரச்னை இல்லையே! நடக்கறப்ப எதையும் மிதிக்காம கொஞ்சம் கவனமா நடக்கணும் அவ்வளவுதான்!”

சாமிநாதன் யோசனையுடன் நண்பரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கையில் இரண்டு தட்டுக்களுடன் வந்த கங்கா, “தோசை சாப்பிடுங்க!” என்று தட்டுக்களை டீபாயில் வைத்தாள்.

“இல்லை. எனக்கு வேண்டாம்” என்றார் சாமிநாதன்.

“ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்கீங்க. காப்பி மட்டும் குடிச்சுட்டுப்  போக உங்களை விட்டுடுவேனா? ரெண்டு தோசையாவது சாப்பிடுங்க. மெல்லிசாத்தான் இருக்கு. இருங்க. தண்ணி எடுத்துக்கிட்டு வரேன்!” என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் கங்கா.

“முன்னெல்லாம் வீட்டுக்கு யாராவது வந்தா, அவங்க உக்காரறதுக்குள்ளேயே, “கங்கா! காப்பி கொண்டு வா!”ன்னு இரைஞ்சு சொல்லுவேன். ஏன், நீங்க சொல்லாட்டா வந்தவங்களுக்கு நான் காப்பி கொடுக்க மாட்டேனா? நீங்க இப்படிச் சொன்னா, ஏதோ நீங்க சொன்னதுக்காகத்தான் நான் வந்தவங்களுக்கு காப்பி கொடுத்தேன், இல்லேன்னா கொடுத்திருக்க மாட்டேங்கற மாதிரி இருக்குன்னு கங்கா எங்கிட்ட நிறைய தடவை சொல்லிக் குறைப்பட்டுக்கிட்டிருக்கா. அப்பல்லாம் அதை நான் காதில போட்டுக்கவே இல்லை. இப்ப பாரு, நான் சொல்லாமலேயே முதல்ல காப்பி கொண்டு வந்து கொடுத்துட்டு, இப்ப டிஃபனும்  கொண்டு வந்து கொடுக்கறா! சாப்பிடு!” என்றார் பழனிவேல்.

“நீ என்னடா சொல்றது? அதான் உன் மனைவியே நான் சாப்பிட்டுட்டுத்தான் போகணும்னு சொல்லிட்டாங்களே! நீ சொல்ற மாதிரி சொல்லி உன் ஈகோவைக் காட்டிக்கறியா? உன்கிட்ட பேசினப்பறம் நானே என்னோட ஈகோவை விட்டுட்டு இருந்து பாக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீ என்னடான்னா?” என்று சிரித்தபடி கூறியபடியே தோசையை விண்டு வாயில் போட்டுக் கொண்டார் சாமிநாதன்.

தண்ணீர் தம்ளர்களுடன் வந்த கங்கா சாமிநாதன் சொன்னதைக் கேட்டு விட்டுத் தன கணவனைப் பார்த்துச் சிரித்தாள்.

அறத்துப்பால்….துறவறவியல்…அதிகாரம் 35   துறவு….குறள் 347

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

பொருள்:
தான், எனது என்ற இருவகைப் பற்றுக்களையம் பற்றிக்கொண்டு விடாத வரை துன்பங்களும் விடாமல் பற்றிக் கொண்டிருக்கும். ….

thirukural stories.jpg

News

Read Previous

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Read Next

பாபாசாகேப் அம்பேத்கரின் கால் தூசிக்கு மோடி சமமாக மாட்டார் – பேரா. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி

Leave a Reply

Your email address will not be published.