சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

Vinkmag ad

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

சித்திரை வரும்போதெல்லாம்
உக்கிர வெயில் வருகிறதோ இல்லையோ
தமிழ்ப் புத்தாண்டு
தையிலா சித்திரையிலா என்ற
ஐயம் வந்துவிடுகிறது

சங்ககாலம்
தையைத்
தலைத்திங்கள் என்று
சொல்லிவைக்கவில்லை

அட
சித்திரையையாவது
சொல்லியதா என்றால்
அதுவும் இல்லை

முதல் மழைக்கால ஆவணியை
பருவத் துவக்கமென்றே
பறைசாற்றுகிறது தொல்காப்பியம்

ஆயினும் ஆவணியையும்
ஆண்டுப் பிறப்பென்றே
அது அறிவுறுத்தவில்லை

ஜோதிடத்தின்
முதல் ராசி மேஷ ராசியாம்
மேஷம் புகும் மாதமான சித்திரையே
வருடப் பிறப்பு என்கிறது
ஆரியரின் சமஸ்கிருதம்

தமிழர் வாழ்வியலில்
தைத்திங்களே
தமிழ்ப்புத்தாண்டு என்பது
உயர் தமிழ் அறிஞர்களின்
ஒன்றுபட்ட கருத்து

எப்படியோ
தமிழன் கொடுத்து வைத்தவன்.
அவனுக்கோ புத்தாண்டுகள்
பல

அலுவலகப் புத்தாண்டு
மார்கழியில் வரும் ஜனவரியில்

சேரநாட்டுப் புத்தாண்டு
சிங்கம் எனும் ஆவணியில்

இஸ்லாமியரின் புத்தாண்டு
முகர்ரத்தில்

சமஸ்கிருத ஜோதிடப் புத்தாண்டு
சித்திரையில்

தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு
தையில்

ஆயினும்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்ற தமிழ்ப்பண்பாடு போற்றி
சித்திரையை
ஜோதிட வருடப் பிறப்பாய்க்
கொண்டாடுவோர் அனைவருக்கும்
சித்திரைத் திருநாள்
வாழ்த்துச் சாரல் தூவுவோம்

O

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

சித்திரையும் சிறப்பான
தமிழ் மாதம்தான்

பொன்னேர் பூட்டி
ஏர்மங்கலக் கோடை உழவை
முத்தொளிரும் சித்திரையின்
முதல்நாளில் தொடங்கி வைத்தால்
மகசூல் மடி நிறைக்கும்
தென்மாவட்டங்களில்

விரித்து வைத்த
வெளிச்சக் குடையாய்
வானம் தெளிந்து கிடக்க
அதில்
வட்ட நிலா வாட்டமாய்க் காய
கடலலைகள்
கட்டுக்கடங்காக் காதலோடு
கரைமணலில் காவியங்கள் தீட்ட
அறுவடை முடித்த ஆனந்தத்தில்
அமர்க்களமாய்க் கொண்டாடி
அகம் மகிழ்வான் உழவன்
நித்திரை மறந்த சித்திரை இரவுகளில்

O

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

அத்தைமகள் விழி மார்கழியும்
அமுதளக்கும் நிலத் தைமகளும்
முத்தமிடும் பொற் கார்த்திகையும்
முகிலவனின் நல் ஐப்பசியும்

எத்தனையோ இம் மாதிரியாய்
முத்தமிழர் தம் மாதங்களும்
சித்திரமாய்ப் பண் பாடிவர
சித்திரையே நீ யாரடியோ

கத்தரியாய்த் துயர் துண்டாடி
கவிபாடும் தீப் பிழம்பரசி
எத்தனையோ இருள் எழுந்தாலும்
எரிப்பாயே அருள் நிறைப்பாயே

சித்திரையே தவப் பொற்கொடியே
சூரியனும் உன் சொற்படியே
முத்தெடுக்கும் நீள் மூச்சழகே
முறைதானே நீ பொன்மகளே

முத்துரதம் மண் ஊர்ந்துவர
மேற்தளத்தில் தமிழ் வீற்றிருக்க
எத்திசையும் வளர் தூயதமிழ்
எழுந்தோங்க வளம் விண்முட்ட

சித்தர்களும் தமிழ்ப் பித்தர்களும்
சித்தமெலாம் சுடர்க் கவியேந்த
சித்திரையே நீ வந்துவிட்டாய்
செந்தமிழின் தேன் தந்துவிட்டாய்

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி

News

Read Previous

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். !

Read Next

முதுகுளத்தூர் முஸ்லீம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாத் புதிய நிர்வாகிகள்

Leave a Reply

Your email address will not be published.