எழுத்தாளர் அகிலனுக்கு புதுக்கோட்டையில் நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும்

Vinkmag ad

                           

எழுத்தாளர் அகிலனுக்கு புதுக்கோட்டையில்

                           நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும்
         நூற்றாண்டு விழாவில் எழுத்தாளர் மு.முருகேஷ் கோரிக்கை

புதுக்கோட்டை.செப்.28.
    மறைந்த எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவில், அகிலனுக்கு
புதுக்கோட்டையில் நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும், பெருங்களூரில்
அவர் பிறந்த தெருவுக்கு அகிலன் வீதி என்று பெயர்ச்சூட்ட வேண்டுமென்று
எழுத்தாளர் மு.முருகேஷ், தமிழக அரசுக்கு கோரிக்கைகளை வைத்தார்.
  எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை கடந்த திங்களன்று (செப்.26)
புதுக்கோட்டையில் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும்,
புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து நடத்தின.
   இவ்விழாவிற்கு கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர்
முனைவர் கவிதா சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர்
முனைவர் கு.தயாநிதி வரவேற்புரையாற்றினார். மருத்துவர் ச.ராம்தாஸ்,
அகிலனின் மகள் அ.அங்கையர்கண்ணி, கவிஞர் தங்கம் மூர்த்தி, ராமுக்கண்ணு,
அ.லெ.சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   வாசகர் பேரவை செயலாளர் பேராசிரியர் சா.விஸ்வநாதன் அறிமுகவுரையாற்ற,
வாசகர் பேரவை தலைவர் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி கருத்துரையாற்றினார்.
   விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பால சாகித்திய அகாதெமி
விருது பெற்ற கவிஞரும் எழுத்தாளருமான மு.முருகேஷ், அகிலன் நூற்றாண்டியொட்டி
நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப்
பரிசுகளை வழங்கி, விழாப்பேருரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
   “சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், பயண
நூலாசிரியர், சிறுவர் இலக்கிய எழுத்தாளர் என பன்முக திறமை படைத்த எழுத்தாளர்
அகிலன், 1975-ஆம் ஆண்டு தனது ‘சித்திரப்பாவை’ எனும் நாவலுக்காக தமிழில் முதன்
முதலாக ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் எனும் பெருமைக்குரியவர். அவர் பிறந்த
புதுக்கோட்டையில் நானும் பிறந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன். சில
எழுத்தாளர்கள் அவர்களின் வாசகர்களால் கொண்டாடப்படுவார்கள். மிகச் சிறந்த
எழுத்தாளர்கள் அவர்களின் உயரிய சமூக சிந்தனைகளுக்காகப் போற்றப்படுவார்கள்.
அகிலன் அவரது சமூக அக்கறைமிக்க எழுத்துக்காகவே போற்றப்படுகிறார். உண்மையும்
நேர்மையும் தன் எழுத்தின் தாரக மந்திரமாகக் கொண்டவர் அகிலன்.
   ‘மக்களுக்கு எது பிடிக்கிறதோ அதை எழுதாமல், எது பிடிக்க வேண்டுமோ அதை
எழுதுவது தான் எழுத்து எழுத்து’ எனும் கொள்கை உறுதியுடன் எழுதியவர் அகிலன். காந்தியச்
சிந்தனை மீது மிகுந்த பற்றுக்கொண்ட அகிலன், போலி காந்தியவாதிகளைச் சாடுவதையும் 
தன் எழுத்தில் தவிர்க்கவில்லை. இன்றைக்கு வெளிவரும் மாத நாவல் என்பதற்கு அடித்தளமிட்டதோடு,
முதல் நாவலையும் எழுதிக்கொடுத்த பெருமையும் அவருக்குண்டு. விமர்சனங்களைக் கண்டு அஞ்சியதில்லை.
திரு.வி.க., பாரதி, கி.வா.ஜகந்நாதன் போன்றோர்களைக்  கொண்டாடியவர் அகிலன். ஞானபீட விருதைப்போல் 
1963-இல் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றவர். இப்படி பல்வேறு பெருமைகளைக் கொண்ட அகிலனுக்கு
புதுக்கோட்டையில் தமிழக அரசு மணி மண்டபம் கட்ட வேண்டும்; அதேபோல் அவர் பிறந்த பெருங்களூரிலுள்ள 
தெருவுக்கு அவர் பெயரைச் சூட்ட வேண்டும்” என்று  கேட்டுக்கொண்டார்.
   நிறைவாக, உதவிப் பேராசிரியர் லெ.அஞ்சலை நன்றி கூறினார்.

News

Read Previous

புதுடெல்லியில் நடந் த விழாவில் தமிழக இளைஞருக்கு ‘சிறந்த மென்பொருள் கட்டுமான பொறியாளர்’ விருது

Read Next

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா

Leave a Reply

Your email address will not be published.