தன்னம்பிக்கை நாயகன்

Vinkmag ad

தன்னம்பிக்கை நாயகன், லலிதா ஜுவல்லரியின் நிர்வாக இயக்குநர் திரு.கிரண் குமார் அவர்களைத் தலை வணங்குகிறேன்…
“தன்னம்பிக்கை நாயகன்” லலிதா ஜுவல்லரியின் நிர்வாக இயக்குநர் திரு.கிரண் குமார் அவர்கள்…
“2020” இந்த வருடம் நம்ம மைண்ட்ல இருக்க வேண்டியது பணம் இல்லங்க உயிர். பணத்தை அப்புறமா சம்பாதிச்சுக்கலாம். ஏன்னா நம்ம ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒரு பெரிய முதலீடு இருக்கு. அதுக்கு பெயர் தான் தன்னம்பிக்கை. அத மட்டும் விட்டுறாதீங்க.
வியாபாரத்தை தாண்டி சமூக அக்கறையுடன் கூடிய என்ன ஒரு நம்பிக்கையான வார்த்தைகள். யாரு அதுன்னு பார்த்தா நம்ம லலிதா ஜுவல்லரியின் நிர்வாக இயக்குநர் திரு.கிரண் குமார் அவர்கள்.
சமீபத்தில் லலிதா ஜுவல்லரியில் நடந்த மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நமக்கெல்லாம் நன்றாக நினைவிருக்கும். அதற்கடுத்து குரோனா லாக் டவுன் இரண்டு மாதம் கடைகள் திறக்கப்படாமல் ஏகப்பட்ட நஷ்டம். இந்த சூழ்நிலையிலும் ஒரு மனிதரால் எப்படி இவ்வளவு தன்னம்பிக்கையான வார்த்தைகளை சொல்ல முடியும் என்பது ஆச்சரியமான ஒன்று தானே!!!
உடனே அவரைப் பற்றி இணையத்தில் தேடிய போது கிடைத்த சில தகவல்கள்…
# திரு.கிரண் குமார் அவர்களின் சொந்த ஊர் இராஜஸ்தான். வளர்ந்தது ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர்.
# இவர் தந்தை சிறிய நகை வியாபாரி. வறுமையான சூழலில் தான் வளர்ந்திருக்கிறார். உடுத்த நல்ல ஆடை கிடையாது. ஊரில் ஏதாவது விசேஷம் என்றால் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் இரவல் வாங்கி உடை அணிந்து செல்வாராம்.
# படிப்பில் ஆர்வம் இல்லை. ஆங்கிலம் படிக்க சிரமம். பணத்தையே தவறாகத்தான் எண்ணுவாராம்.
# படிப்பறிவு இல்லை எப்படி தொழில் செய்ய போகிறார்? என்று தந்தை கேட்டதற்கு, நான் எனது சொந்த முயற்சியில் வியாபாரம் செய்து ஜெயிப்பேன் என்றாராம்.
# தனது 12வது வயதில் தனது அன்னை அவரது வளையலை விற்று தந்த பணத்தை கொண்டு, நகைகளை நெல்லூரில் உள்ள பிரபல நகைக்கடைகளில் விற்கத் துவங்கினார்.
# முதலில் 10 கிராம் நகையோடு தொடங்கிய அவரது வியாபாரம் இன்று பல கிளைகளோடு விரிந்து உலகம் முழுதும் வியாபித்திருப்பது தான் அவரது உழைப்பின் சாதனை.
# சென்னையிலிருந்து நெல்லூருக்கு நடுஇரவில் அரசு போக்குவரத்தில் பயணம் செய்து பணத்தை மிச்சம் பிடிப்பாராம்.
# அவரது நண்பர்கள் 8 அல்லது 9 மணி நேரம் உழைத்தால், இவர் 20 மணி நேரம் உழைப்பாராம்.
# எப்பொழுதும் பேருந்து பயணத்தின் போது மட்டுமே உறங்குவாராம்.
# 6 வருடம் தொடர்ந்து சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் நகைகளை விற்று அவர்களின் நம்பிக்கையை பெற்றாராம் இவர்.
# 1992 ஆம் ஆண்டு லலிதா ஜுவல்லரி பண சிக்கலில் சிக்கி தவித்த பொழுது, தவிர்க்க இயலாத சூழ்நிலையில் இவரிடம் கை மாறியதாம்.
# 35 பணியாளர்களோடு சென்னை மற்றும் மதுரையில் துவங்கிய லலிதா ஜுவல்லரி இன்று பல கிளைகளோடு 1500 பணியாளர்களோடு இன்று பரந்து விரிந்திருக்கிறது இவரது நகை சாம்ராஜ்யம்.
#இவரிடம் பணி புரிபவர்கள் இவரை பேர் சொல்லி அழைப்பதையே விரும்புவாராம்.
# தினமும் காலை 7 மணிக்கெல்லாம் தனது பணியை துவங்கும் இவர், டீ.வி, சினிமா இவை எதையும் பார்ப்பதில்லையாம்.
# இவரது மனைவி பெயர் திருமதி.ஹேமா. இரண்டு பெண் குழந்தைகள் பவ்யா மற்றும் பாரதி. குடும்பத்திற்காக நேரம் செலவிடுவதை அதிகம் விரும்புவாராம்.
# இவரது சேவையை பாராட்டி வேல்ஸ் யூனிவர்சிட்டி இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
# திருச்சியில் உள்ள அவரது நகைக்கடையில் கொள்ளை நடந்த போது, பிடிபட்ட குற்றவாளியிடம் அரை மணி நேரம் பேச அனுமதி கேட்டிருந்தார் திரு.கிரண் குமார். ஆனால் குற்றவாளியிடம் தனியாக பேச அனுமதி மறுக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 15 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பு தரப்பட்டது.
பேசியது பதிவு செய்யப்பட்டது. அதில் அந்த குற்றவாளியிடம் கேட்டது ;
எனது கிளைகள் நிறைய இருக்கிறது. குறிப்பாக திருச்சியில் மட்டும் வந்து திருட என்ன காரணம், அதே நேரத்தில் எந்த சுவற்றில் ஓட்டை போட்டால் நகை உள்ள இடத்திற்கு வர முடியும் என்பது எப்படி தெரியும், என்று கேட்டார். குற்றவாளி சொன்ன பதில் நானும் எனது மனைவியும் பத்து முறைக்கு மேல் இங்கு நகை வாங்க வந்துள்ளோம். நகையை அவள் பார்த்து கொண்டு இருக்கும் போது நான் கடையை கவனித்து எப்படி வர முடியும் என்று பார்த்து பின் பிளான் போட்டு உள்ளே வந்தோம் என்றான். சரி குழப்பம் தீர்ந்தது நன்றி என்றார். குற்றவாளி ஏன் சார் எனக்கு நன்றி சொல்றீங்க? என்று கேட்ட போது, அவர் சொன்ன பதில் உண்மையிலே நெகிழ வைத்தது.
இல்லை! எனக்கு திருட்டு போன நகைகளைப் பற்றி கவலை இல்லை. இன்சூரன்ஸ் செய்துள்ளேன்.
அதைவிட அதிகமாக சம்பாதிக்க என்னிடம் தைரியம் உள்ளது.
எனது கவலை எல்லாம் இவ்வளவு பெரிய கடையில் காவலாளிகள் இருக்கும் இடத்தில் ஓட்டை போட்டு உள்ளே வர உனக்கு தைரியம் எப்படி வந்தது? நிச்சயமாக கடையில் இருக்கும் யாராவது உதவி இருக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை குழப்பியது. அதை விட எனது கவலை எல்லாம் எனது கடையில் வேலை பார்ப்பவன் திருடும் அளவிற்கு செல்கிறான் என்றால் என் மீது என்ன குறை இருக்கிறது அதை நான் உடனே சரி செய்ய வேண்டும். அந்த ஊழியனின் பணத் தேவை எனக்கு ஏன் தெரியவில்லை? அவர்களை நான் சரியாக கவனித்து கொள்ளவில்லை என்று தானே அர்த்தம். அதை நான் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று நினைத்து கவலையாக இருந்தேன். அதனால் தான் அதை தெளிவு படுத்த பல முயற்சிகள் செய்து உன்னை சந்தித்தேன் என்றாராம்.
வாழ்வில் வெற்றி பெற்ற அனைவரும் உழைப்பையும், தன்னம்பிக்கையையும் மிகச்சரியாக பயன்படுத்தி, பல கஷ்ட நஷ்டங்களை சந்தித்து, அவற்றையெல்லாம் தடைக்கற்கலாய் நினைக்காமல், படிக்கற்களாய் நினைத்து முன்னேறியுள்ளார்கள் என்பதற்கு நமது தன்னம்பிக்கை நாயகன், லலிதா ஜுவல்லரியின் நிர்வாக இயக்குநர் திரு.கிரண் குமார் அவர்கள் மிகச்சிறந்த உதாரணம்.
உழைப்போம்! உயர்வோம்!நன்றி! வணக்கம்.

News

Read Previous

கூனிங்கான்

Read Next

ஈகைத் திருநாள் வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published.