ஈகைத் திருநாள் வாழ்த்துகள்

Vinkmag ad

அனைவருக்கும் இதயங் கனிந்த ஈகைத் திருநாள் வாழ்த்துகள்.

இறைப்பற்றும் ஈகைக் குணமும் மனத்தை நிறைக்கின்ற நன்னாள்தான் இந்தப் பெருநாள்.

இறைவனே மிகப் பெரியவன். இறைவனே மிகப் பெரியவன் என்று இறைவனின் பெருமையை உரத்து முழங்கி இறைவனுக்கு நன்றி செலுத்துகின்ற நன்னாள்தான் இந்நாள்.

இந்த நன்னாளில் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த ரமளானும் ஈகைத்திருநாளும் மூன்று செய்திகளை நமக்கு தருகின்றன.

முதலாவதாக, இறைவனின் கட்டளைக்குக் கீழ்படிந்து நடக்கின்ற உணர்வுடன் பசி, தாகம் ஆகியவற்றைக் கடைப்பிடித்தோம். ஒரு நாள் அல்ல, இரண்டு நாள்கள் அல்ல ஒரு மாதக் காலம் இவ்வாறு புலன்களை அடக்கி குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடித்து நோன்பு இருந்தோம். இனி வரக்கூடிய நாள்களிலும், வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இறைக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்ற பக்குவமும் விழிப்பு உணர்வும் கடமையுணர்ச்சியும் நம் அனைவருக்கும் மீட்டெடுப்பதற்காகத்தான் இந்தப் பயிற்சி.

இரண்டாவதாக, கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகமே முடங்கிவிட்ட நிலையில், போக்குவரத்து முதல் தொழிற்சாலைகள் வரை, பள்ளிக்கூடங்கள் முதல் பள்ளிவாசல்கள் வரை அனைத்தும் மூடப்பட்ட நிலையில், தொடர்ந்து பல ஜும்ஆக்களை இழந்த நிலையிலும் இறைவனுடனான பந்தமும் தொடர்பும் அறுபடவில்லை. இறைமார்க்கம் தந்த வழிகாட்டுதலின் ஒளியில் ரமளானுக்கே உரிய சிறப்புத் தொழுகைகளான தராவீஹ் தொழுகைகளிலிருந்து எல்லாமே வீடுகளிலேயே நிறைவேற்றப்பட்டன. ரமளானின் மூலம் இறைநெருக்கமும், ஆன்மிக உணர்வும் மிக அதிகமாகக் கிடைத்தன என்பதுதான் பெரும்பாலோரின் அனுபவமாக இருக்கின்றது. குறிப்பாக குர்ஆனுடனான தொடர்பும் நெருக்கமும் அதிகரித்தன. குர்ஆனுடனான இந்த நெருக்கம் இனி வரும் நாள்களிலும் தொடர வேண்டும். வாழ்வின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் குர்ஆனில் தீர்வு காண்கின்ற தெளிவும் ஆர்வமும் பெருக வேண்டும். குர்ஆனிய தலைமுறையை வார்த்தெடுக்க வேண்டும். குர்ஆனை ஓதுகின்ற, குர்ஆனை நல்ல முறையில் விளங்கிக் கொள்கின்ற, குர்ஆனின் படி ஒட்டுமொத்த வாழ்வையும் அமைத்துக் கொள்கின்ற, குர்ஆனின் பக்கம் மக்களை அழைக்கின்ற அழகிய சமுதாயத்தைக் கட்டமைக்க வேண்டும்.

மூன்றாவதாக, கொரோனா தொற்றுநோயுடனான போராட்டத்தில் வைரசின் தாக்குதலிலிருந்து சமுதாயத்தைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற தற்காலிக உத்திதான் சோஷியல் டிஸ்டென்சிங் – சமூக இடைவெளி. ஆனால் இந்த இடைவெளி மனித இயல்புக்கே நேர் மாறானது. ஏனெனில் சோஷியல் பாண்டிங் Social Bonding- சமூகப் பற்றும் பிணைப்பும்தான் மனிதனின் இயல்பு.

அந்த இயல்பு தொலைந்து போய் விடாத வகையில், இடைவெளி அதிகமாகிவிடாத வகையில் இஸ்லாம் நமக்கு தடுப்பரணாய் இருந்தது. ரமளான் மாதத்திலும் நம் மக்கள் நோன்பு நோற்றுக் கொண்டே நாடு முழுவதும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதிலும் பசித்தவர்களுக்கு உணவளிப்பதிலும் முனைப்புடன் இயங்கினார்கள். சோஷியல் பாண்டிங் – சமூகப் பந்தமும் பற்றும் உறுதியாக இருப்பதைத்தான் இது உணர்த்துகின்றது. இந்தப் பந்தமும் பற்றும் இனி வரக் கூடிய நாள்களிலும் தொடர வேண்டும். மேலும் குர்ஆன் கூறுகின்ற இந்த சோஷியல் பாண்டிங் – சமூகப் பற்று பற்றிய செய்தியை நாட்டு மக்களுக்கும் உலக மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்.

இறுதியாக, கொரோனா ஒருபக்கம், பொருளாதார பின்னடைவு ஒருபக்கம், மக்களைப் பிளவுபடுத்துகின்ற மதவெறியும் வெறுப்பும் மறுபக்கம் என நாலாபுறமும் நாடும் சமுதாயமும் மக்களும் மிகப் பெரும் நெருக்கடிகளில் சிக்கியிருக்கின்ற இந்த கொந்தளிப்பான நாள்களில், இறைப்பற்றும் இறைநேசமும் தழைத்தோங்குவதற்கும், அன்பும் நேசமும் செழித்தோங்குவதற்கும், இணக்கமும் இனிமையும் நிறைவதற்கும் அருள் செய்வாய் அருளாளனே என்று கருணைமிக்க இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.

அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்.

– மௌலவி முஹம்மத் ஹனீஃபா மன்பயீ

மாநிலத் தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
தமிழகம் & புதுச்சேரி.

News

Read Previous

தன்னம்பிக்கை நாயகன்

Read Next

ராமானுஜன்

Leave a Reply

Your email address will not be published.