தெருவோர உணவுக் கடைகளுக்கு மினிஃப்ரிட்ஜ்

Vinkmag ad

தெருவோர உணவுக் கடைகளுக்கு மினிஃப்ரிட்ஜ்

சாப்பாட்டு ராமன்கள் என்று சிலரை நாம் கேலி பேசலாம். ஆனால் பெங்களூரு சஞ்ஜய்நகர் எனும் குடியிருப்புப் பகுதியின் அருகே சாட் தெரு என்று அழைப்படும் ஒரு தெரு அவர்களுக்காகவே உருவானது. மாநகரத்தில் உள்ள  உணவுப்பிரியர்களை அது ஈர்த்துக் குவித்துவிடுகிறது. சாட்-மோமோ அய்டெம்கள், இட்லி, பரோட்டாக்கள், விதவிதமான பெயர்களில் வலம்வரும் தோசைகள் போன்ற நாவை ஏங்கவைக்கும் உணவுப் பொருட்களை சாமானிய மனிதர்களுக்கு விற்று அவர்களை பரவசப்படுத்தும் 10,15 கடைகள் அங்கே டேரா போடுகின்றன.

தமிழகத்திலும் இப்படி சாலையோரக் கடைகளில் நின்று சமோசா, வடை, பஜ்ஜி போன்ற வகைகளை உள்ளே தள்ளி திருப்தியோடு விடைபெறும் ஏராளமான மனிதர்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம். இம்மாதிரி சாலையோரக் கடைகளில் உள்ள மிகப் பெரிய பிரச்சனை அங்கு கிடைக்கும் பொருட்கள் சுத்தமானவையா, அவை சற்றுமுன் தயாரிக்கப்பட்டவையா  அல்லது முந்தைய தின தயாரிப்பில் மீந்துபோனவையா என்பதுதான். இதற்கு ஆகார்ஷ் ஷாமனுர் என்ற கட்டடவியலாளர் கம்யூனிட்டி ரிஃப்ரெஜெரேஷன் என்ற ஒரு தீர்வை முன்வைக்கிறார். இந்திய அறிவியல் கழகமும் (ஐஐஎஸ்சி) விற்பனைப் பொருட்களை வடிவமைக்கும் மையம் என்ற லாபநோக்கில்லாத அறக்கட்டளையும் இணைந்து 2017-ம் ஆண்டு நடத்திய ஒரு கண்காட்சியில் ஷாமனுர் இந்த பரிந்துரையை முன்வைத்து 50,000 ரூபாய் பரிசைத் தட்டிச் சென்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிட்டிசன்ஸ் ஃபார் சஸ்டைனபிலிட்டி என்ற குடிமக்கள் குழுவுடன் இணைந்து சஞ்சய்நகரில் ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கினார். தோசை, இட்லி, வடை, பரோட்டா விற்கும் நான்கு சாலையோரக் கடைக்காரர்களுக்கு அவர்  மினிஃப்ரிட்ஜ் ஒன்றினைத் தயாரித்துக் கொடுத்தார். கெட்டுப் போகக் கூடிய சட்னி, இட்லி-தோசை மாவு போன்ற பொருட்களை அவர்கள் ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாத்து கெடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். கடைகளுக்கு அருகில் உள்ள தள்ளுவண்டியில் மினிஃப்ரிட்ஜ் வைக்கப்படுகிறது.

“திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, கடைக்காரர்களிடமும் வாடிக்கையாளர்களிடமும் பேசினோம். இட்லி, தோசை, பரோட்டாவுடன் தொட்டுக் கொள்ள உதவும் சட்னியும் சில உணவுப் பொருட்களும் விரைவில் கெட்டுப் போய்விடுகின்றன என்றார்கள். ஃப்ரிட்ஜ்ஜைப் பயன்படுத்தலாம் என்ற யோசனையை கடைக்காரர்கள் உடனே ஏற்றுக் கொண்டார்கள்” என்கிறார் ஷாமனுர்.

“ ஃப்ரிட்ஜ் வைக்கப்பட்டுள்ள வண்டி மாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே தரப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் உணவுப் பொருட்களைத் தரவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இந்த முன்னோடித் திட்டத்தை சில நாட்களுக்கு பரிசோதிப்போம். வெற்றிகரமாக நிறைவேறினால், தற்போது மின்னாற்றலில் இயங்கும் ஃப்ரிட்ஜ்ஜினை சூரிய சக்தியில் இயங்கக் கூடியதாக மாற்றியமைப்போம். சாலையோர உணவுக் கடைகள் அதிகமாக உள்ள மற்றும் பல இடங்களுக்கும் இந்த முன்னோடித் திட்டத்தை விரிவுபடுத்துவதாக இருக்கிறோம்” என்று அவர் சொல்கிறார் கண்களில் மின்னும் நம்பிக்கையுடன்.

News

Read Previous

மிரள வைக்கும் கிருமிகள், அவைகளின் தாக்கம்!

Read Next

சிரித்து மகிழ..

Leave a Reply

Your email address will not be published.