மீனு கறி

Vinkmag ad
மீனு கறி
************
வாடக் காத்துலயும்,
வழுஞ்சு போற தேத்துலயும்,
வழுவலை வள்ளந்தள்ளி
பொழுதுதுச்ச வந்தாரு
பொன்னான மவராசன்!
பொல்லார்மின் என் புருசன்!!
தண்ணிக் கன்னாச
தரையில போட்டாரு,
பின்னால சொருவிவச்ச
பிஞ்சுபோன ‘மடப்பெட்டிய’
சன்னலு கம்பியில மாட்டிவச்சு,
கஞ்சி கொண்டுபோன
நெளுஞ்சுபோன பாத்திரத்தை
கையிலதான் தந்தாரு!!
‘காக்கட்டைய ‘ தூக்கிக்கிட்டு
பாக்கு வெத்தல போட்டுக்கிட்டு
மேக்கத்த கெணத்தத் தேடி
மேலு குளுச்ச போனாரு.!!
மளுவங் குஞ்சொண்ணு
மல்லாக்க படுத்திருக்கு!
செவுளு செவுத்திருக்கும்
கண்ணஞ்சாளை மூணிருக்கு!!
கொழுக்கட்ட கண்ணத்தள்ளி
கொழுவாளை மீனிருக்கு!!
அஞ்சாள கடிச்சு போட்ட
பல்லஞ்சூர ஒண்ணும்
பாத்திரத்தில் படுத்திருக்கு!!!
ஆஞ்சு, அரப்பெடுத்து
போஞ்சு போன அடுப்புலதான்
காஞ்ச மட்ட சொருவிவச்சு,
அயந்து வந்த மாப்பிள்ளைக்கு
ஆக்கிப்போட ஆசவச்சேன்!
ஆயிரங் கை இரவு வாங்கி
அடுக்களையில் வேலை செஞ்சேன்!!
மளுவங்குஞ்சு கழுவயில
வழுவி நழுவி போகுதப்பா!
கருச்சட்டிக்கு வந்த பின்னும்
கடலுண்ணு நெனச்சுதப்பா!!
கொழுவாள கொடலெடுத்து
வயித்தடியும் வாலடியும்,
பொருச்செடுக்க எடுத்து வச்சேன்,
பல்லஞ்சூர தலக்கறிய
அவுச்சுதின்ன ஆசவச்சு
தனியாக கழுவி வச்சேன்!
இடுச்சு வச்ச கரும்புளிய
எலுமிச்சங்கா அளவெடுத்து,
கோப்பையில ஊற வச்சேன்!!!
குண்டு மொழவு காம்ப கிள்ளி
எண்ணி எண்ணி எட்டெடுத்தேன்,
கொஞ்சம் போல நல்ல மொழவும்
கூடவே சேத்தெடுத்தேன்!
பஞ்சு போல தேங்காய
சில்லில்லாம துருவி வச்சு,
எள்ளுபோல நச்சீரவமும்,
இருவிரலால் எடுத்து வச்சேன்!
கொத்தமல்லி வெதயெடுத்து,
கொஞ்சமாக எண்ணெய் விட்டு,
பொன்னிறமா வறுத்தெடுத்தேன்.
பொக ஏறும் முன்னால
இறக்கி வச்சு ஆற வச்சேன்!!
அம்மிக்கல்லு முன்னாடி
சம்மணங்கால் நான் போட்டு,
மஞ்சத் துண்டு ஒண்ணெடுத்து
மையைப்போல அரச்செடுத்தேன்!
ஈரோளி தோலுருச்சு,
ஈரஞ்சொட்ட அரச்செடுத்தேன்.
ஊறவச்ச கரும்புளிய
கோரெடுத்து சதச்சு வச்சேன்..
ஆறவச்ச அரப்பத் தட்டி,
மூணுதரம் அரச்செடுத்து,
ஆளுகாட்டி வெரல
அர அளவில் மடக்கி வச்சு,
அம்மியத்தான் வழுச்செடுத்தேன்!
கொழவிக் கொழந்தைக்கு
கொஞ்சம் போல விட்டு வச்சேன்!!
உலக உருண்டை ஒண்ணு
நான் படச்சு,
உருட்டி உருப்படியா
உள்ளங்கையில் வச்சுகிட்டேன்!!!
அம்மியில நான்அரச்ச
அரப்பு வாசம்
அஞ்சுத் தெரு வரைக்கும்
நிண்ணு பேசும்!
கொழம்பு கொதிக்கும் முன்னே
கொதி போட்டு கூட்டம் கூடும்!!
சூட்டடுப்பு ஒண்ணெடுத்து
செரட்டை தீயில் “காற” வச்சு,
தென்னம்பாள வெறகெடுத்து
இளந்தீயை எரிய விட்டேன்!
மஞ்சட்டி தேச்செடுத்து,
மணமணக்க எண்ணெய் விட்டு,
மசாலையும் கலந்து வச்சேன்!
‘கறிகூட்டு ‘ வெள்ளத்தையும்
மறக்காம கலந்து விட்டேன்!!
கறிவேப்பிலை கொழுந்தெடுத்து
மேலாப்பா தூவி விட்டு,
கொழந்தைக்கு புடிக்குமுண்ணு
புளுச்ச மாங்கா அருஞ்சு இட்டேன்!
கீறி வச்ச பச்ச மொழவும்,
பாதி பழுத்த தக்காளியும்
கூடவே சேத்து போட்டேன்!
அடுச்சும் காத்துக்கு
அடுப்பு அணையாம இருக்கத்தான்,
இடுப்புச்சேல பிடுச்சு நிண்ணேன்!
இடையிடையே கருச்சட்டிக்கு
கரண்டியால இடைஞ்சல் தந்தேன்.!!
எரிமலை பெழம்பு போல
மீங்கொழம்பு கொதுச்சுதப்பா!!
எடந்தடந் தெரியாம
மீனு துண்டு அலையுதப்பா!!
விருஞ்ச பூவப்போல
மீனெல்லாம் பூக்குதப்பா!
கருச்சட்டி கறிக்குள்ள
நீச்சல் போட்டி நடத்துதப்பா!!
மண்சட்டி ஓரத்துல
‘மசாலா ‘ படியுதப்பா!
கறி வேகும் முன்னால
மீன் துண்ட களவாண்டு
தின்ன கதை
நெனவுக்கு வருகுதப்பா!
கொழம்பு கொதிக்கும் வாசம்,
கொல்லாம்பழ வெளயத்தாண்டி
வீசும்!
கொஞ்ச நேரம் கூட வெந்தா
கொழம்பு மேல
கொழுப்பு பூசும்!!
கடப்புறத்து காரர்களின்
நரம்புல ஓடும் இரத்தம்
மீன் கறிதான்!
ஒருநாள் இல்லாம போனாலும்
வயித்துக்கு பட்டினிதான்!!
ஆறு சொவையும்
அடக்கி வச்ச அமுதமிது!
ஊற வச்ச பழங் கஞ்சிக்கு
தோதாக வேற ஏது!!
அவுச்ச நெல்லுச் சோத்த
ஆற போட்டு வச்சிருக்கேன்!
அவுங்களுக்கு பிடிக்குமுண்ணு
அவியல் கூட்டும் வச்சிருக்கேன்!!
மேக்கத்த கெணத்துலதான்
மேல் குளிக்க போனவரு
வீட்டுக்கு வரும்வரைக்கும்
வாசல்பாத்து காத்திருக்கேன்!
பசியோட வாற மனுசனுக்கு
ருசி பாத்து விருந்து வச்ச,
நானும், மீன் கறியும்
நடுவீட்டில் காத்திருக்கோம்!!
– தொபியாஸ் ஹெல்ஜின்
thopiyas helgin.JPG
இளைய நெய்தலவர் இலக்கியம்

News

Read Previous

இனியவை பேசு

Read Next

தமிழகத்தில் எந்த ஊரில் என்ன உணவு சிறப்பு?

Leave a Reply

Your email address will not be published.