மறை சொல்லும் மலைகள் வரலாறு

Vinkmag ad

மறை சொல்லும் மலைகள் வரலாறு
————————————-

மறை மதித்து சொல்லும்
மலைகள் வரலாறு தெரிந்து
மனம் மகிழ்ந்ததின் விளைவே
மலர்ந்தது மலைக் கவிதையே

ஸபா மர்வா மலைகள்
——————————————

இறைநேசர் இப்ராஹிம் நபி
இல்லாள் ஹாஜரா அன்னையை
இளவல் இஸ்மாயில் நபியை
இறைவன் சொன்னான் என
இருண்ட பாலையில் தனியே
இட்டுச் சென்றது தெரியாமல்
இளம்பிள்ளை பசித்து அழ
இன்னது செய்வது என அறியா
இதயம் துடித்த அன்னை
இரு ஸபா மர்வா மலைகள்
இடையே தண்ணீர் தேடி இளைப்பாறாது ஓடியது கண்டு
இரக்கம் கொண்ட இறைவன்
இனிய ஜம் ஜம் நீரை உலகில்
இறக்கி நிலைக்கச் செய்தான்
இஹ்ராம் கட்டிய ஹாஜிகள்
இரு மலைகளை வலம் வரும்
இனிய காட்சி அந்த நிகழ்வை
இன்று வரை நினைவு படுத்தினவே

ஹீரா மலைக் குகை
—————————————
நற்குணங்கள் நிறைந்த நபிகளார்
நாற்பது வயதின் எல்லையிலே
நான் ஏன் பிறந்தேன் என எண்ணி
நாளுக்குநாள் சிந்தித்து சிந்தித்து

ஹிக்மத் எனும் நுண்ணறிவு தேடி
ஹீரா குகையை நோக்கி
தனிமை பயணம் செய்தனரே
தன்னிலை விளக்கம் பெறவே
தனித்து தவநிலை ஏற்றனரே

வானவர் தலைவர் ஜிப்ரீல்(அலை)
வந்து நபிமுன் தோன்றி
வல்லோன் அல்லாஹ்
வகுத்துத் தந்த வஹியை
வரிசையாய் சொல்லச் சொல்ல

வாஞ்சையாய் கேட்ட நபி
வல்லோன் அருளை எண்ணி
வந்த நோக்கம் நிறைவேறியதாய்
வான் மறையைப் பெற்று
வந்து பரிசாய் தந்தனரே
வான்புகழ் பெற்று நிலைத்தனரே

தவ்ர் மலைக் குகை
————————————–
அன்சாரிகள் அழைப்பை ஏற்று
அருமை நண்பர் அபூபக்கரோடு
அகால இரவு வேளை ஒன்றில்
அமைதி நாடி மதீனா நோக்கி
அண்ணல் நபி புறப்படவே

தனித்து நின்ற தவ்ர் குகையில்
தஞ்சம் என புகுந்த போது
சிலந்தி வலை பின்னி
சிரம் மறைத்து நிற்கவே
சில புறாக்கள் கூடுகட்டின

எட்டிப் பார்த்தால் தெரிந்து விடும்
எதிரிகளின் கண் மறைத்து
ஏந்தல் நபியை காத்த வரலாறு
எல்லோர் நெஞ்சிலும் நிலைத்ததுவே

கவின் முகில் மு முகமது யூசுப் உடன்குடி

News

Read Previous

உலகத் திருக்குறள் மூன்றாவது மாநாடு – 2021

Read Next

இளையான்குடி கல்லூரி நிர்வாகக் குழு பதவியேற்பு விழா

Leave a Reply

Your email address will not be published.