குழந்தைக் கவிதை – வித்யாசாகர்!

Vinkmag ad

பிஞ்சுப்பூ கண்ணழகே.. (குழந்தைக் கவிதை) வித்யாசாகர்!

1
கை
யில் அழுக்கென்கிறேன்
அப்படியே முத்தமிடுகிறாய்..

அச்சோ!!!!! வியர்வை என்கிறேன்
அப்படியேக் கட்டிப்பிடித்துக்கொள்கிறாய்..

அம்மம்மா போதும் போதும்
என்கிறேன்
பிரிகையில் நிறுத்தாமல் அழுகிறாய்

இயற்கை
உன்னைத் தாயாகவும்
என்னை மகனாகவும் பெற்றிருக்கலாம்..
——————————————————————–

2
ண்சிமிட்டி
கண்சிமிட்டி
அத்தனை அழகாகப் பேசுகிறாய்,
மொத்தத்தில் உயிரென்பதை
நீயேத் தாங்குகிறாய்,
நீ பேசும் சொற்களும்
சிரிப்பும் மட்டுமே
பொக்கிசம் ஆகிறதெனக்கு;

நீ பேசாத
சிரிக்காத
எனும் இரண்டே சொற்களுள்
தற்கொலைப் புரிகிறதென் நிகழ்காலம்!
——————————————————————–

3
பு
துத்துணி
உடுத்திக்கொண்டு
அப்பாவைத் தேடுகிறாய்,

சாப்பிட யாரேனும்
மிட்டாய் வாங்கித்தந்தால்
காட்ட அப்பாவைத் தேடுகிறாய்,

வீட்டுப்பாடதைத் திருத்தி
ஐந்து நட்சத்திரத்தை ஆசிரியை போட்டுவிட்டால்
சந்தோசத்தில் அப்பாவைத் தேடுகிறாய்,

அண்ணன் அடித்துவிட்டான்
அம்மா கடிந்துக்கொண்டால்
சொல்ல அப்பாவைத் தேடுகிறாய்..

நீ தேடுவாய் தேடுவாய்
என்றுதான்
நான் அதற்குள் மட்டுமே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்!
——————————————————————–

4
ம்மா திட்டினால்
அப்பாவிடம் சொல்லிவிடுவேன்
என்கிறாயாம்,

அண்ணன் வாலாட்டினால்
அப்பாவிடம் சொல்லிவிடுவேன்
என்கிறாயாம்,

பள்ளிக்கூடத்தில்கூட
சக மாணவிகள் சண்டையிட்டாலோ
திட்டிப் பேசினாலோ அப்பாவிடம் சொல்லிவிடுவேன்
என்கிறாயாம்..

எல்லோரும் கேட்கிறார்கள் உனை
உனக்கு அப்பா மட்டும்தான்
கண்ணுக்குத் தெரியுமா ?

நீ சொல்கிறாய்
ஆமாம், எனக்கு எங்கப்பா மட்டுமே எங்கும் தெரிவார்..
——————————————————————–

5
பொ
ம்மைன்னா
உனக்கு ரொம்பப் பிடிக்கும்

அதுக்கு நீ
பொட்டுவைத்து
சட்டைப்போட்டு
சோறு ஊட்டி
அலமாரியிலிருந்து பேம்பசைக் கூட
பொம்மைக்கென எடுத்துவைத்துக் கொள்கிறாய்

எங்களுக்கு சிரிப்பு ஒருபக்கம்
உனதறிவின் முதிர்ச்சி ஒருபக்கம்..

குழந்தை வளர்ந்தால்
சந்தோசப்படலாம் தான்;
பெண்குழந்தை வளர்ந்தால்
இந்தச் சமூகம் அப்பாக்களை
அதிக சந்தோசப்பட விடுவதில்லை..
——————————————————————–
வித்யாசாகர்

News

Read Previous

ஆரோக்கியமாய் வாழ அவரைக்காய் சாப்பிடுங்கள் !

Read Next

பனிப் பரல்கள்

Leave a Reply

Your email address will not be published.