குட்டைக் கால்களின் பனைமரக் கதை..

Vinkmag ad

குட்டைக் கால்களின் பனைமரக் கதை..

நான் குட்டையானவன்
குட்டையான கால்கள் எனது கால்கள்
நடந்து நடந்தே –
பாதி குட்டையாகிப் போனேன் நான்,

அந்தத் தெருவிற்குத் தான்
தெரியும் – எனது
நடந்துத் தேய்ந்தக் கால்களுக்கும்
ஒரு வரலாறு இருக்கிறதென்று;

அப்போதெல்லாம் அங்கே
பனைமரம் அதிகம்
வேலமுள் காடுதான் எங்கும்..

நாங்கள் மாடு ஓட்டி
பனைமரப் பக்கம் கட்டிவிட்டு
நொங்கறுத்துத் தின்போம்

ஆடுஓட்டி
வேலங்காய் உலுக்கிப்போட்டு
கொடுக்காப்புளி பறிக்கப்போவோம்

உச்சிவெயில்
மண்டையில் இறங்கி
வயிற்றைக் கிள்ளினாலும்
கண்களுக்கு மாடு தின்னும் பச்சைப்பசேல்
புற்கள்தான் பெரிதாகத் தெரியும்; சோறு தெரியாது

நடந்துபோன தூரத்தை
வந்துத் தீர்க்கையில் – சூரியன்
பாதி இறங்கிவிடுமென்று –
சோறு மறந்தப் பொழுதுகளை
மாடு பார்த்து
கடந்துவிடுவோம் நாங்கள்

மாடு நறுக் நறுக்கென்று
புற்களை மடக்கி மடக்கி
தின்னத் தின்ன
வந்த தூரமெல்லாம்
மனதுள்
அப்பட்டமாய் ஓய்ந்துப்போகும் – அடிக்கால் வலி
மனதுள் அறுந்தேப் போகும்..

ஆடோ மாடோ
அது நாலு
வயித்துக்கு மென்றால்தான்
எங்களுக்கு பெருமூச்சு வரும்
கதை பேச மனசு
நிழலைத் தேடும்

நிழலில் அமர்ந்தால்
வேறேன்னப் பேச்சிவரும் (?)
பேச்செல்லாம் கதையாகும்
கதையெங்கும் சினிமாப் படமோடும்
பாட்டில் மனசாடும்..

இரண்டுப் படத்தின் கதையைப் பற்றியும்
நான்குப் படத்தின் –
கதாநாயக நாயகி பற்றியும் பேசி
இரண்டுப் பாடல்களுள் சிலாகித்து முடியுமுன்
மாடு மடிகனக்கக் கத்தும்
ஆடு குட்டி தேடி ஓடும்
வெளிச்சத்தை இரவு தேடி வரும்
நாள்பொழுது எங்களுக்கு மாடோடோ
ஆடுகளோடோ முடியவரும்

நாங்களும் சேத்துல நடந்தோ
முட்களை மிதித்தோ
ரத்தமூறிய ஈரமண்ணில் நடந்து
வலிகள் சொட்டச் சொட்ட
பிய்ந்துப்போக
செருப்பில்லாமலே
வீட்டுக்கு வருவோம்

வீட்டில் வைக்கோலிட்டு
மாடு கழுவி
நீரூறியப் புண்ணாக்கு கொடுத்து
பால் கறந்து
ஊர்கோடிக்கும் நடந்துத் திரிந்தக்
கதையெல்லாம்
இன்றைக்கு யாருக்குத் தெரியும்?

பாலளந்து
மோர் குத்தி
வெண்ணெய் ஆட்டி
நெய் சுட்டு
வாழ்க்கை மணத்த வீட்டின்
கூரைகளெல்லாம்தான் –
எங்களின் தேய்ந்தக் கால்களோடு
நிறையப் போச்சே.. (?)

இருந்தாலும் நான்
குட்டையானவன் தான்
எனது கால்கள் –
நடந்து தேய்ந்து குட்டையானதுதான்
என்றாலும் –
நான் குட்டையானக் கதைகளை
எனது தெருக்கள் நினைவில் வைத்திருக்கும்
மாடுகள் சாகாதிருக்குமேயானால்
நினைவில் வைத்திருக்கும்
புற்களறுத்தத் தரையில் எங்களின்
வறுமை வலித்த தடம் பதிந்திருக்கும்

நாங்கள் வாழ்ந்தக் கதையை
நினைத்து நினைத்து
பெருமூச்சி விட்டிருப்போம்..

வாழ்க்கை நீளமானது
முட்கள் மீது நடந்துப்போவது போல்
போகட்டும்
நினைத்து நினைத்துப் போகட்டும்..

——————————————————————————–

வித்யாசாகர்

News

Read Previous

விஷம் குடித்து பெண் சாவு

Read Next

இறைவனை வெல்ல முடியுமா ?

Leave a Reply

Your email address will not be published.