காதலர் தின கவிதைகள்

Vinkmag ad

காதலர் தின கவிதைகள்
====================
கண்ணில் மணியாய்க் கருவிழித் தன்னில் கடப்பதுபோல்
எண்ணம் நிறைய இயங்கும் நினைவும் படர்ந்துளது
மண்ணில் விழுந்த மழைநீர் உறைந்து மணம்தரும்போல்
கண்ணில் அவளுரு காலம் முழுதும் கலந்துளதே.
சித்திரம்போ லுன்றன் சிரித்த முகவெழில்
முத்திரையாய்ப் பதிந்து முழுவது முள்வாங்கி
நித்திரையைக் குலைத்தென்னை நித்தம் நினைவினிற்
பித்தனாக்கி யுள்ளத்தைப் பிழிகின்றா யுன்னெழிற்
கன்னத்தின் செழிப்பில் கவிழ்ந்தேனே யதன்குழியில்
இன்னமு முள்ள மிரும்பாகிப் போகாமற்
கடைக்கண் திறக்காதோ காதல் மவுனத்தில்
மடைத்தாள் திறக்காதோ மனம்
கண்ணுக்குள் புதைந்துள்ள காதலை நாமிருவர்
மண்ணுக்குள் புதைந்து மடிகின்ற வரைக்குமாய்ச்
சொல்லாமல் போவாயோ சொல்லடடிப் பைங்கிளியே
நில்லாமல் போவதெங்கே நித்திரையைப் பறித்தவளே
அள்ளு முனதழகை அள்ளாமல் விடுவேனா
உள்ளும் புறமும் உனதன்பே ஈர்த்திடுதே
காதலுக்குக் கண்ணில்லை கண்ணுக்குட் காதலுண்டு
ஆதலினால் காத லழகு.
உன்னையா ஐயுற்றேன், உன்னையா சோதித்தேன் உத்தமியே
என்னையேன் இன்னும்நீ சோதித்தாய் என்றுதான் ஏங்கினனே
என்னதான் சொன்னாலும் உன்னைத் துறப்பேனா ஏந்திழையே
கன்னத்தில் சூடேற்றக் கண்ணுக்குள் காதலைக் காட்டுவாயே
மன்றலில் உட்காரும் காலமும் என்காதல் மாறிடாதே
நன்றாய் மனைவியா யாகியும் காதலும் நீங்கிடாதே
தென்றலின் தீண்டுதல் பூக்களின் வாசனைக் கூறிடுமே
உன்றன் கடைக்கண் துடிப்புதான் காதலை ஊட்டிடுமே
நினைத்தேன் நீ வருவாயென
உனைத்தான் கேட்டேன் என் ‘வருவாய்’ என்
பொறுத்தேன் காலத்தின் அடிகளை
சிறுத்தேன் உடலும் உள்ளமும்
மெலிந்தேன் நூலாய் ; மெய்
சிலிர்த்தேன் பின் நினைவைப் பாலாய்க்
குடித்தேன்; அத்தனையும் ஒரு
‘படித்தேன்’ என்றே அத்துடன்
கலந்தேன் என்றன் கவிதையால்
மலரந்தேன் புதுமலராய் நீ
கனவில் வரும்போதெல்லாம்
நனவாய் மாறும் நம்பிக்கை!
கிழிக்க இயலாத
உணர்வுக் காகித்தில்
அழிக்க இயலாத உண்”மை”களால்
எழுத்தோவியம் தீட்டிய
ஓவியமே!
என்னை வரைந்தவைகள்
இன்னும் இருக்கின்றன
இதயப் பெட்டகத்தில்!
சடுதியில் வருமா
கடுதாசி என்று
அடம்பிடித்த உன் மனத்தைப்
படம்பிடித்த வரிகள்
தீராத வலிகள்!
ஒற்றைத் தீபமாக
ஏற்றிய காதற் பொறி
எத்துணை வெளிச்சத்தைப்
படர விட்டது
மனக்குகைக்குள்!
மெய்தீண்டு மைவிழியால் மெய்தீண்ட மைவிழியாள்
பொய்தீண்டும் பேச்சாலே போய்விட்டாள் என்னையும்
விட்டுவிட்டுக் காதலையும் விற்றுவிட்டு; நானும்தான்
விட்டுவிட்டேன் காதல் உணர்வு.
கவலை கரைசேரக் காணா வழிகள்
அவளை மறக்கவே அன்றாடம் பாக்களில்
மூழ்கியே பார்த்தும் முடியாமல் என்றுமே
ஆழ்கடல் போலவே ஆச்சு.
நேசமென்னும் மேகம் நெருங்கியதால் நித்தமும்
பாசமென்றே என்மீது பெய்திட்ட முத்தமழை;
நெய்வடியும் ஈரிதழால் நீலியின் பொய்க்கவிதை
மெய்யன்று மெய்யின் உணர்வு.
முதற்கா தலும்முதல் முத்தமும் உள்ளே
உதற முடியாமல் உட்கார்ந்து கொண்டு
பதற்றம் தருமென்று பட்டவர் சொல்லும்
விதம்மெய் எனவறிந்தேன் நான்.
வலியவந்து உட்கார்ந்து
வழியில் இற(க்)ங்கி விட்டு
வலிகளை மட்டுமே உட்கார வைத்து
வலி தீர வழியின்றி
வலிந்து சென்றவளே!
நினைவுகள் அனைத்தும்
நிம்மதியைக் குலைக்கும்!!😢😢😢😢
நீங்கா திருக்கும் நினைவாலுனைக் கட்டி வைத்தேன்
ஆங்கே யுறைந்தா லவலங்களைப் பார்ப்ப தெங்கே
தூங்கா மனத்தில் தொடர்காதலி லுன்றன் பேச்சால்
தாங்கா வலிகள் தரும்வேதனை காண வாவா
விழியில் விழுந்த விதை

===================
விழியில் விழுந்தது “அவள்” எனும் விதை
ஊரறிய மணம் பரப்ப மாறியது
உணர்வு மிக்க கவிதையாக!
விழியெனும் ஊடகம்
வழியாக உட்கார்ந்திருக்கிறாய்
மொழிவதற்கு இயலாமல்
ஊமையாய் மவுனமொழியால்
ஓடி ஒளிந்து “விழிக்கிறாய்”
ஊர்கூடி என்னைப் பழிக்கிறார்!
விழியில் விழுந்த விதையே
இதயமரத்தில் நீரூற்றினாய்
இலைகளும் கனிகளுமாகிட
இமைகள் குடைபிடிக்க
இதமாக வளருது காதற்பயிர்!

விழியில் விழுந்த விதையை
வேண்டாமென்றுத் தடுக்குமா
மனநிலத்தின் மனநிலை
மறுமொழியொன்று கொடுக்குமா?
ஏங்கி நிற்கின்ற உன்மனத்தை
இருவிழி இமைகளெனும்
படபடக்கும்
பட்டாம்பூச்சிகள் பகருமா?
காதற் பயணத்தின் வாகனம்
கடிவாளமிட்டு நகருமா?
விழியில் விழுந்த விதையே
உளநிலத்தில் மரமாகி
வளமான கனியாகு முன்பே
களவாடிச் செல்லும் ஓட்டமோ
களமாடிக் கொள்ள நாட்டமோ?
நினைவுகளில் வாழ்கிறாய் நீ
=================

உனைவிடவும் பேரெழில் உண்டோ நிலத்தில்
மனத்தினிலே பூப்போல் மலர்கிறாய் நித்தம்
சுனைவழியும் நீராய்ச் சுரக்கும் விழிநீர்
நினைவுகளில் வாழ்கிறாய் நீ
எண்ண நெரிசலில் என்னை உரசுவதேன்
வெண்மை நிலவொளி வீசும் கதிர்களாய்
நெஞ்சாங் குழிதனில் நீயே நினைவுகளாய்
எஞ்ஞான் றுமிருத்தல் ஏன்?
கோபத்தில் உன்னைக் குதறியே துப்பியும்
தீபத்தின் நடுவில் திரியாகி நீயே
நினைவின் ஒளியாய் நிகழ்த்தும் வினையால்
உனையும் மறவா(து) உளம்

உயிர்ச்சுடர் வீசும் ஒளிவிளக்கும் காதற்
பயிர்வளர் வெய்யில் பகலவனும் நீயே
வனையும் கவிதையின் வாசத்தின் உள்ளே
நினைவின் விதைகளாய் நீ
ஆக்கம்:
கவியன்பன்” கலாம்

News

Read Previous

காதலர் தினம்

Read Next

முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை – எச் ராஜா

Leave a Reply

Your email address will not be published.