என்றும் உள்ள தென்றமிழ்- நாமக்கல் கவிஞர்

Vinkmag ad

 

Namakalkavi01

அமிழ்தம் எங்கள் தமிழ்மொழி

அன்னை வாழ்க வாழ்கவே.

 

வைய கத்தில் இணையி லாத

வாழ்வு கண்ட தமிழ் மொழி

வான கத்தை நானி லத்தில்

வரவ ழைக்கும் தமிழ்மொழி

பொய்அ கந்தை புன்மை யாவும்

போக்க வல்ல தமிழ்மொழி

புண்ணி யத்தை இடைவி டாமல்

எண்ண வைக்கும் தமிழ்மொழி

மெய்வ குத்த வழியி லன்றி

மேலும் எந்தச் செல்வமும்

வேண்டி டாத தூய வாழ்வைத்

தூண்டு கின்ற தமிழ்மொழி

தெய்வ சக்தி என்ற ஒன்றைத்

தேடித் தேடி ஆய்ந்தவர்

தெளிவு கண்ட ஞான வான்கள்

சேக ரித்த நன்மொழி.       1

 

உலகி லுள்ள மனிதர் யாவரும்

ஒருகு டும்பம் என்னவே

ஒன்று பட்டு வாழும் மார்க்கம்

தொன்று தொட்டுச் சொன்னது;

கலக மற்ற உதவி மிக்க

சமுகவாழ்வு கண்டது;

கடமை கற்று உடைமை பெற்ற

கர்ம ஞானம் கொண்டது

சலுகை யோடு பிறமொ ழிக்கும்

சரிச மானம் தருவது;

சகல தேச மக்க ளோடும்

சரச மாடி வருவது;

இலகும் எந்த வேற்று மைக்கும்

ஈசன் ஒன்றே என்பதை

இடைவி டாமல் காட்டும் எங்கள்

இனிமை யான தமிழ்மொழி.       2

 

கொலைம றுக்கும் வீர தீரக்

கொள்கை சொல்லும் பொன்மொழி!

கொடியவர்க்கும் நன்மை செய்யக்

கூறுகின்ற இன்மொழி;

அலைமிகுந்த வறுமை வந்தே

அவதி யுற்ற நாளிலும்

ஐய மிட்டே உண்ணு கின்ற

அறிவு சொல்லும் தமிழ்மொழி;

கலைமி குந்த இன்ப வாழ்வின்

களிமி குந்தபொழுதிலும்

கருணை செய்தல் விட்டி டாத

கல்வி நல்கும் மொழியிது;

நிலைத ளர்ந்து மதிம யங்க

நேரு கின்ற போதெலாம்

நீதி சொல்லி நல்லொ ழுக்கம்

பாது காக்கும் தமிழ்மொழி.       3

 

அன்பு செய்தும் அருள் அறிந்தும்,

ஆற்றல் பெற்ற அறமொழி;

அறிவ றிந்து திறமை யுற்றே

அமைதி மிக்க திருமொழி;

இன்ப மென்ற உலக றிந்த

யாவு முள்ள கலைமொழி;

இறைவ னோடு தொடர்ப றாமல்

என்று முள்ள தென்றமிழ்.

துன்ப முற்ற யாவ ருக்கும்

துணையி ருக்கும் தாயவள்;

துடிது டித்தே எவ்வு யிர்க்கும்

நலம ளிக்கும் தூயவள்;

தென்பு தந்து தெளிவு சொல்லும்

தெய்வ மெங்கள் தமிழ்மொழி;

திசைக ளெட்டும் வாழ்த்து கின்ற

இசைப ரப்பச் செய்குவோம்.       4

 

பழிவ ளர்க்கும் கோப தாப

குரோத மற்ற பான்மையும்

பகைவ ளர்க்கும் ஏசு போக

ஆசை யற்ற மேன்மையும்,

அழிவு செய்யக் கருவி செய்யும்

ஆர்வ மற்ற எண்ணமும்,

அனைவருக்கும் தன்மை காணும்

வித்தை தேடும் திண்ணமும்

மொழிவ ளர்ச்சி யாக்கு மென்ற

உண்மை கண்டு முந்தையோர்

முறைதெ ரிந்து சேர்த்த திந்த

நிறைமி குந்த முதுமொழி,

வழிய றிந்து நாமும் அந்த

வகைபு ரிந்து போற்றுவோம்;

வஞ்ச மிக்க உலக வாழ்வைக்

கொஞ்ச மேனும் மாற்றுவோம்.

– நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்(பிள்ளை)

 

News

Read Previous

ஏப்ரல் 11, துபை ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

Read Next

பெண்கள் செய்ய வேண்டியவையும் – செய்யக்கூடாதவையும் !

Leave a Reply

Your email address will not be published.