உள்ளத்தின் உணர்வுகளை எழுதுங்கள்

Vinkmag ad

 

( முதுவை கவிஞர் மெளலவி அ. உமர் ஜஹ்பர் மன்பயீ )

 

ஒவ்வொரு எழுத்தும் ஒரு துளி உதிரம்

ஒவ்வொரு சொல்லும் உணரும் புலன்கள்

ஒவ்வொரு பக்கமும் செயலின் உறுப்பு

ஒவ்வொரு நூலும் அழகிய குழந்தை

எவ்விதம் கருவோ அவ்விதம் பிறப்பு

எப்படிக் காப்போ அப்படிப் படைப்பு

இவ்விதம் அமைத்து வெளிவரும் நூற்கள்

எழில்மனு வாழ்வின் படிகள் பலன்கள்

 

எண்ணுவா ரெல்லாம் எழுதுவா ரில்லை

எழுதுவ தெல்லாம் ஏற்றமா யில்லை

எண்ணங்க ளெல்லாம் எழுத்தாகும் போது

ஏடுகள் வாங்கிப் படிப்போரு மில்லை

 

மண்ணிலே விரல் போட்டு எழுதிட்ட காலம்

மனதிலே விதைபோட்டு பயிராச்சு சரிதம்

கண்முனே கணினியும் இணையமும் இருந்தும்

காவியம் படைத்திடக் கருப் பொருள் காணோம்

 

சாலையின் கல்வெட்டும் சரித்திரம் பாடும்

சங்கமும் அரசரும் அதைக்காணக் கூடும்

ஓலையில் எழுதினார்; நூறாண்டு காலம்

ஓடியும் ஒளியவோ அழியவோ காணோம்

காலையில் எழுதினால் மாலையில் காணோம்

கருப் பொருள் குற்றமா ? கண்டுநீர் கூறும்

வேளைக்கு ஒரு நூலை வெளியிட்ட போதும்

விடியலோ வெளிச்சமோ வரவில்லை, ஏனோ ?

 

பக்கமோ பத்தியோ பெரிதல்ல தோழா

படைத்திடும் படைப்பதில் உயிரோட்டம் தேவை

மக்களின் குறைகளைக் குத்தூசி கொண்டு

மடிந்திடும் வரையிலும் குத்தியே கொல்லு

எக்காள மிடுவோர்கள் இனம்மாறு வரையும் –

எழுச்சியைப் புரட்சியாய் எடுத்து நீ சொல்லு

 

‘தக்கவை’ எனக்கொரு சரித்திரம் என்று

தரணியே உன்பாதம் பணிந்திடும் என்றும்

உன்னிடம் மாபெரும் வரலாறும் உண்டு

உலகிலே அதற்கெனத் தனியிடம் உண்டு

 

உன்மனக் கோட்டையின் எண்ணங்கள் குழைத்து,

வடித்திடுப் புதுப்புதுத் தூரிகை எடுத்து

உன்னோடு செத்திடும் உணர்வுகள் வேண்டாம்

உள்ளத்(தை) உடைத்து நீ வெளியாக்கு இன்று.

 

 

( இராமநாதபுரம் மாவட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் வெளியிட்ட சிறப்பு மலரிலிருந்து )

News

Read Previous

“அஸ்கான்” புகழ் வாழ்க !

Read Next

வஹியாய் வந்த வசந்தம்

Leave a Reply

Your email address will not be published.