இறவாத இலக்கியம்..!

Vinkmag ad

(இரங்கற்பாக்களாலும் இதயங்களைக் கசிய வைக்கும் கலைஞருக்கு ஒரு கலங்கிய நெஞ்சின் இரங்கற்பா…)

இறவாத இலக்கியம்..!

-ஆரூர் புதியவன்

தமிழினத்திற்காய்
துடித்த ஓர் இதயம்
தன் துடிப்பை
நிறுத்தி விட்ட போது…
துடிதுடிக்கும்
இனத்திற்கு
ஆறுதல்தான் ஏது..?

காலத்தை வென்ற
கருணை நதி…
இதற்கு
இன்னொரு பெயர்தான்
கருணாநிதி …

காவேரிப் படுகையில்
பிறப்பு

‘காவேரி’ படுக்கையில்
இறப்பு

காற்றெல்லாம் கமழ்கிறது
உன்
சிறப்பு …

ஆயிரமாயிரமாண்டு
ஆரிய இருள் கிழித்த
வீரிய சூரியனே…!

நீ
‘குவளை’யில் பிறந்து
குவலயம் வியக்க
கடலென விரிந்தாய் …!
கவிதையாய் இருந்தாய்…

போராட்டத்தை
சுவாசித்தவனே..!
உனக்கா வந்தது
சுவாசப் போராட்டம் ..?

மூவண்ணக் கொடியேற்றும்
உரிமையை
முதலமைச்சர்களுக்குப்
பெற்றுத்தந்த
இருவண்ணக் கொடியே..!

ஆரிய
இறுமாப்புகளைத் தகர்த்த
திராவிட இடியே ..!

உன்
உரைநடையும்
திரைநடையும்
உள்ளங்களை
சிலிர்க்க வைத்தது.. !
ஒடுக்கப்பட்டோரை
விழிக்க வைத்தது ..!

நீ
முத்துவேலர் அஞ்சுகத்தாய்
ஈன்ற முத்து
முத்தமிழுக்குக் கிடைத்த
முதன்மைச் சொத்து..!

நெருக்கடிமிக்க
நேரத்திலே
மொழியென்னும் தாய்
சுவாசிக்க உதவியது
மு.க என்னும்
மூக்கா…?

சமூகநீதியும்
இன எழுச்சியும்
நீ கொண்ட
நோக்கா..?

வாழும் வரை போராடு
என்பது தான்
நீ
வழங்கிச்சென்ற
வாக்கா.?

கலையின் கடலே..!
கல்விக் கூடங்கள்
உன்னைக்
கற்றுக்கொண்டன

பள்ளியைத் தாண்டாத
உன்னைப்
பல்கலைக்கழகங்கள்
ஆய்வு செய்தன…

எழுதுகோல் ,
செங்கோல்
இரண்டாலும்
ஆண்டாய்…!

எல்லைகளுக்கடங்காத
நீள் வானாய்
நீண்டாய்…!

நீ …
பெரியாருடன் அண்ணாவைக்
கூட்டிப்பார்த்தால்
வரும் விடை …!

முக்கடல் அலைகளிலும்
மும்மடங்காகும்
உன் ஆணைகேட்டு
வரும் படை…!

புரளாமல்
தூங்கிய தமிழனை
பொங்கியெழ வைத்த
கோபாலபுரத்து
பூபாளமே..!

குளிர்க்கண்ணாடியோடு
உன்னை
கண்ட போதெல்லாம் மனம்
குதூகலித்தது…

குளிரூட்டப்பட்டப் பேழையுள்
உன்னைக் கண்டபோது
மனம்
கல் மோதிய
கண்ணாடியாகச் சிதறியது…

கரகரத்த குரலே ..!

கதிர்வெளிச்ச விரலே…!

எம்மோடு நீ
நிற்க வேண்டிய
காலத்தில்….

எழுத்து , பேச்சு என்னும்
ஈராயுதங்களைப்
போராயுதங்களாய்த்
தந்துவிட்டு
போய்விட்டாயே …!

ஆருரின்
ஆறு நீ…
யாரூரையும்
நனைத்தாய்

சீரூறும்
உன்மொழியால்
தமிழினத்தை
இணைத்தாய்…

உன்
ஆழமான கருத்துத்தளத்தில்
புராணங்கள்
புதைக்கப்பட்டன …
வரலாறுகள்
எழுப்பட்டன…

பயனடைந்தவர்களை
பட்டியலுக்குள்
அடக்க முடியாததால்
நீ ஒரு மழை…!

விழுந்தாலும் எழுகின்ற
விடாமுயற்சி வித்தகத்தால்
நீ ஓர் அலை ..!

மயங்கவும் வைத்து,
இயங்கவும் வைத்த
நீ ஒரு கலை…!

உனக்கு மெரினாவில்
இடம் மறுத்தனர் ..?
கடுகு மனத்தினர்..!

இறந்த பிறகும் உனது
இட ஒதுக்கீட்டு போராட்டம்
மக்கள் மன்றத்தில் நின்றது
நீதிமன்றத்தில் வென்றது …

உடலைப் பிரிவதே
உயிரின் இயற்கை ..!

கடலே…!
நீ
இந்தக் கணக்கிலா
வருவாய்..?

நீ என்றால் – இனம்
நிமிர்த்திடும் எழுத்து

நீ என்றால் – மனம்
பிணித்திடும் பேச்சு

நீ என்றால் – சுடர்
இலக்கியக் கிழக்கு

நீ என்றால் – அது
எளியோரின் விளக்கு

இறவாதிருக்கும்
இனிமைத் தமிழ்போல்
உந்தன் சுவடுகள்
உலகில் நிலைக்கும்….

News

Read Previous

நாயகம் எங்கள் தாயகம்

Read Next

வரலாற்றுச் சிறப்பு மிக்க ராஜாஜி அரங்கம்

Leave a Reply

Your email address will not be published.