வரலாற்றுச் சிறப்பு மிக்க ராஜாஜி அரங்கம்

Vinkmag ad

வரலாற்றுச் சிறப்பு மிக்க ராஜாஜி அரங்கம்

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் உடல் மக்கள் பார்வைக்கு ராஜாஜி அரங்கில் 08.08.2018 அன்று வைக்கப்பட்டது.
பிரதமர்,அனைத்து கட்சித்தலைவர்கள் முன்னாள் இன்னாள் முதல்வர்கள் என மிக மிக முக்கிய பிரமுகர்களும் அங்கு வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.ராஜாஜி அரங்குக்கு என்ன சிறப்பு அதன் வரலாற்று பெருமை என்ன என்பதை தெரிந்து கொள்வோமா?

ராஜாஜி அரங்கமான பான்குவிடிங் ஹால்

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள ராஜாஜி ஹால் இரு நூற்றாண்டுகள் சரித்திர நிகழ்வுகள் பலவற்றை தன்னகத்தே கொண்டதாகும்.

கடல்வழி மார்க்கத்திற்காக 1453களில் போர்த்துக்கீஸியர்கள் வழிதேடினர். அதன் மாலுமி வாஸ்கோடகாமா 1498ல் கோழிக்கோடு வந்தார். 1522களில் சென்னை சாந்தோம் பகுதியில் அவர்கள் குடியேறினர் டச்சுக்காரர்கள், டேனியர்கள், பிரஞ்சுக்காரர்கள். அவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களும் வருகை தந்தனர்.

1600 டிசம்பர் 31 அன்று ஆங்கிலேயர்களின் வருகை தொடங்கியது. லண்டன் வியாபாரிகள் 100 பேர் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை தொடங்க ராணி எலிஸபெத் அனுதி வழங்கினார்.

சந்திரகிரி அரசிடமிருந்து 1639ல் பெறப்பட்ட நிலத்தில் 1640ம் ஆண்டு (தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் அமைந்துள்ள) புனித ஜார்ஜ் கோட்டையை கட்டிய கிழக்கிந்திய கம்பெனியினர், சென்னையில் செல்வாக்குடன் வாழ்ந்த ஆண்டானியா தி மதிரோஸ் குடும்பத்தாரிடமிருந்து பரந்து விரிந்த மைதானத்தை 1753ல் விலைக்கு வாங்கினர். அதுவே இப்போதைய அரசினர் தோட்டமாகும். இதற்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது சென்னையிலுள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி ஏற்றியவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். சென்னை மாகாண முதல்வராக இருந்த அவர் மது விலக்கு, ஜமீன்கள் ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு உள்ளிட்ட புரட்சிகரமான திட்டங்களை கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரந்து விரிந்த இடத்தில் மெட்ராஸ் ஆளுனர்கள் தங்குவதற்கு ஒரு பங்களாவையும் ஆங்கிலேயர்கள் கட்டினர். அதுதான் இப்போதைய அரசினர் இல்லம்.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை நிலைபெறச் செய்த ராபர்ட் கிளைவ் அதன், வங்க ஆளுனராகவும் சென்னையின் மேஜர் ஜெனலராகவும் பணியாற்றியவர். அவரது புதல்வர் எட்வர்ட் 1800களில் மெட்ராஸ் ஆளுனராக இருந்தார். அந்த ஆண்டு தொடங்கப்பட்டு 1802ல் கட்டி முடிக்கப்பட்டதுதான் “பான்கு விடிங் ஹால்”. 120 அடி நீளம் 65 அடி அகலம் 40 அடி உயரம் கொண்டது.

கிழக்கிந்திய கம்பெனி பொறியாளர் ஜான் கோல்டிங்ஹாம் வானியல் நிபுனராக இருந்த காரணத்தால் கிரேக்க தெய்வம் ஏத்தெனாவின் பார்த்தினான் கோவில் மாதிரியில் இதனை வடிவமைத்தார். திப்பு சுல்தானுக்கு எதிராக நடைபெற்ற நான்காவது மைசூர் யுத்த வெற்றிக்காக இது கட்டப்பட்டது. பொது நிகழ்ச்சிகளை நடத்தும் அரங்கமாக இது உருவாக்கப்பட்டது.

சுதந்திரத்திற்குமுன் மூதறிஞர் ராஜாஜி என்ற சி.இராஜகோபாலாச்சாரியார் 1937 ஜூலை 14 முதல் 1937 அக்டோபர் 29 வரை சென்னை மாகாண முதல்வராக பதவி வகித்தார். அப்போது 1938 ஜனவரி 27 முதல் அவர் பதவி முடியும் வரை மதராஸ் மாகாண சட்டப்பேரவை இங்குதான் இயங்கியது. அதன் நினைவாகவே பான்குவிடிங் ஹால் ராஜாஜி அரங்கம் என அழைக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை இங்கிலாந்து ஈடுபடுத்தியதை எதிர்த்து 1939 அக்டோபர் 30 அன்று ராஜாஜி பதவி விலகினார். அன்று முதல் 30.4.1946 வரை ஆளுனர் ஆட்சி நடைபெற்றது.

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது என் மனசாட்சியின் காவலர் என மகாத்மா காந்தியால் புகழப்பட்ட ராஜாஜி, இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த ஒரே இந்தியர். சுதந்திர இந்தியாவில் 10.4.1952 முதல் 13.4.1954 வரை முதல் அமைச்சராக பதவி வகித்தார்.

மெட்ராஸ் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாக்கள் 1957 முதல் இங்குதான் நடைபெற்று வந்தன. 1916ல் இங்கிலாந்து ராணி எலிசபெத் இங்கு தனது பிறந்த நாளை கொண்டாடினார். சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா உருவப்படத்தை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 10.2.1969 அன்று ராஜாஜி அரங்கில்தான் திறந்து வைத்தார்.

அண்ணா முதல் கலைஞர் வரை

தமிழக முதல்வர்களாக இருந்த பேரறிஞர் அண்ணா 3.2.1969ல் மறைந்த போதும், மூதறிஞர் ராஜாஜி 25.12.1972ல் மறைந்த போதும் பொதுமக்கள் பார்வைக்காக அவர்கள் உடல்கள் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டன.

தந்தை பெரியார் 24.12.1973ல் மரணமடைந்த போது அவரது உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அன்றைய திமுக முதல்வர் கலைஞர் அறிவித்தார். அரசுப் பொறுப்புக்கள் எதிலும் பெரியார் இல்லாததால் அவ்வாறு செய்ய இயலாது என அதிகாரிகள் தெரிவித்தனர். மகாத்மா காந்தி எந்த அரசுப் பொறுப்பில் இருந்தார்? என கேள்வி எழுப்பிய கலைஞர், என் பதவி போனாலும் பரவாயில்லை அரசு மரியாதையுடன்தான் உடல் அடக்கம் நடைபெறும் என கூறிவிட்டார். அதன்படி பெரியார் உடலும் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

1975 அக்டோபர் 2ல் மரணமடைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராசர் உடலும் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சொன்னபோது ராஜாஜி அரங்கத்தில்தான் வைக்கவேண்டும் என்ற அன்றைய முதல்வர் கலைஞர் சொன்ன யோசனையை ஏற்று அதன்படியே வைக்கப்பட்டது.

24.12.1987ல் மரணமடைந்த எம்.ஜி.ஆர். உடல் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட போது அங்கேயே இடைக்கால முதல்வர் நெடுஞ்செழியன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று அடக்கம் குறித்து முடிவு செய்யப்பட்டது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததும் அவரது உடலும் 6.12.2016 அன்று ராஜாஜி அரங்கத்திலேயே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. திமுக தலைவர் கலைஞர் உடலும் 08.08.2018 அன்று ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உதயம்

சரித்திரத்தை தாங்கிநிற்கும் ராஜாஜி அரங்கிற்கு இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த சரித்திர நிகழ்வு, இங்குதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மலர்ந்தது.

இந்தியா -& பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் அகில இந்திய முஸ்லிம் லீக் குறித்து முடிவெடுக்க பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள காலிக்தினா ஹாலில் 1947 டிசம்பர் 13,14ல் தேசிய கவுன்ஸில் கூட்டம் காயிதே ஆஜம் முஹம்மது அலி ஜின்னாஹ் தலைமையில் நடைபெற்றது.

1906 டிசம்பர் 31 அன்று இன்றைய வங்கதேச தலைநகர் டாக்காவில் ஆரம்பிக்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீகை இந்த கூட்டத்துடன் நிறைவு படுத்துவது என்ற முடிவு செய்ததோடு, முஸ்லிம் லீகை வரும் காலத்தில் நடத்துவதா வேண்டாமா என்பதை பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை சேர்ந்த கவுன்ஸில் உறுப்பினர்கள் தனித்தனியாக கூடி முடிவெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

எனவே அத்தகைய கூட்டங்களை கூட்டி முடிவு எடுக்க வசதியாக பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கென தலா ஒரு கன்வீனர்கள் தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் கன்வீனராக அன்றைய அகில இந்திய முஸ்லிம் லீகின் பொதுச் செயலாளரும் பாகிஸ்தான் பிரதமருமான லியாகத் அலிகான் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவுக்கான கன்வீனராக அன்றைய சென்னை மாகாண முஸ்லிம் லீக் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான காயிதேமில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் சாகிப் தேர்வு செய்யப்பட்டார்.

முஸ்லிம் லீகிற்கு எதிரான பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்ட நிலையில் மிரட்டலும் எதிர்ப்புகளும் தொடர்ந்து கொண்டிருந்த சூழலில், முஸ்லிம் பிரமுகர்களே முஸ்லிம் லீகை கலைத்து விடுங்களேன் என அச்சப்பட்டு நச்சரித்து வந்த நேரத்தில் இந்தியாவில் உள்ள அகில இந்திய முஸ்லிம் லீக் தேசிய கவுன்ஸில் கூட்டம் 1948 மார்ச் 10 அன்று சென்னையில் நடைபெறும் என காயிதே மில்லத் அறிவித்தார்.

சென்னையில் நடைபெறும் என காயிதேமில்லத் அறிவித்தாரே தவிர கூட்டம் நடந்த இடம் கிடைக்கவில்லை ஹாலை கொடுத்தால் அரசு நடவடிக்கை எடுக்குமோ என அஞ்சி பலரும் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில்தான் அரசுக்குச் சொந்தமான ராஜாஜி அரங்கையே அரசிடம் கேட்டுப் பெறுவது என காயிதேமில்லத் முடிவு செய்தார். அப்போது சென்னை மாகாண முதல்வர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார், உள்துறை அமைச்சர் டாக்டர் பி.சுப்பராயன். ராஜாஜி அரங்கை கேட்டு விண்ணப்பித்த போது ‘முஸ்லிம் லீகை கலைத்துவிட்டோம் என்ற நல்ல முடிவை எடுப்போம் என்ற நம்பிக்கையில் தருகிறோம்’ என்றார், டாக்டர் பி.சுப்பராயன்.

எல்லோரும் முடிவுக்காக காத்திருக்க 1948 மார்ச் 10 புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை ராஜாஜி அரங்கில் காயிதேமில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் சாகிப் தலைமையில் கவுன்ஸில் கூட்டம் தொடங்கி 10 மணிநேர விவாதத்திற்கு பின் இந்தியாவில் முஸ்லிம் லீகை ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்காக’ மலரச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டு காயிதெமில்லத் அதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
1999 மார்ச் 10 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொன்விழா நிறைவு மாநாடு சென்னை மெரினா கடற்கரை சீரணி அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற போது சமுதாய ஓளி விளக்கு விருது வழங்கும் நிகழ்வும், உறுதியேற்பு நிகழ்ச்சியும் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமத் அவர்களால் நடத்தப்பட்டது.
2008 ஜுன் 21 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு சென்னை தீவுத்திடலில் மிகச்சிறப்பாக நடைபெற்றபோது ராஜாஜி அரங்கில் தான் மகளிர் அணி கருத்தரங்கை முனீருல் மில்லத் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் நடத்தினார்கள்.
சுதந்திர இந்திய வரலாற்றில் ராஜாஜி அரங்கில் ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டு நிகழ்வுகளை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே நடத்தியுள்ளது என்பது பெருமைக்குரிய வரலாற்று பதிவுகளே!

– காயல் மகபூப்

News

Read Previous

இறவாத இலக்கியம்..!

Read Next

கலைஞருக்கு அஞ்சலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *