கலைஞருக்கு அஞ்சலி

Vinkmag ad

( தொகையறா)
திருக்குவளை ஈன்றெடுத்த திராவிடத்தின் சூரியனே,
திகட்டாத தேன்தமிழே காவியத்தின் நாயகனே,
பெரியாரும் அண்ணாவும் புகழ் படித்த மாமகனே,
பிரியா விடைப்பெற்று சென்று விட்டாய் பூமகனே,
(பல்லவி)
தமிழுக்குப் புகழ்சேர்த்து தமிழனுக்குத் தரம் சேர்த்து
தமிழாக வாழ்ந்திட்ட தலைவனே !!
அமுதான தமிழ்மொழியை அழகான செம்மொழியாய்
ஆக்கி தந்த முத்தமிழ் அறிஞனே!!
அஞ்சுகத்தாய் மடிவளர்ந்த புதல்வனே!!
ஐந்துமுறை அரசாண்ட முதல்வனே!!

( சரணங்கள் )
நெருப்புக் கற்களிலும் நெறிஞ்சி முட்களிலும்
நடந்தே பழகிய கால்களே,
கருப்பு சிவப்புக் கொடிதனை ஏந்தி
களப்பணி ஆற்றிய கைகளே,
விருப்புடன் தொண்டர்களை வாவென அழைத்து
விடியலைக் காட்டிய கண்களே,
வீரம் செறிந்த மேடைப் பேச்சினால்
வெற்றியை வழங்கிய சொற்களே,
உடன்பிறப்பே உடன்பிறப்பே என்றழைத்த உயிர்துடிப்பே,
ஓய்வெடுத்து கடலோரம் உறங்குகின்றாய் ஒளிப்பிழம்பே……

எண்பது ஆண்டுகள் அரசியல் வாழ்விலே
எத்தனை ஆயிரம் போராட்டம்,
உண்பதை மறந்தாய் உறக்கத்தை இழந்தாய்
ஓடோடி உழைத்தாய் நீராட்டம்,
ஐம்பது ஆண்டுகள் தலைமைப் பொறுப்பிலே
ஆக்கிய திமுக பூந்தோட்டம்
ஆதிக்கப் பேய்களின் வேதனை சோதனை
அனைத்தையும் சுமந்தாய் அன்றாடம்,
சரித்திரமே சகாப்தமே சாதனையின் சமுத்திரமே,
சாந்தமுடன் துயில்கொண்டாய் நெஞ்சில்வாழும் அறிவகமே……..

ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் கண்டவனே,
ஏற்புறும் திட்டங்கள் தந்தவனே,
எதையும் தாங்கிடும் இதயம் கொண்டவனே
இடர்களை எதிர்த்தே வென்றவனே,
சொன்னதை எல்லாம் செய்தவன் நீயே,
சிறுபான்மை மக்களைக் கவர்ந்தவனே,
சிறைச்சாலை சென்றும் சிரித்திருந்தாயே,
சீர்மிகும் வசனங்களைக் கொடுத்தவனே,
உனைஇழந்த சோகத்திலே உலகமே கலங்குதம்மா,
இமைகளையே நனையவிட்டு இமயமே உறங்குதம்மா……
—————————————–
கவிஞர் நாகூர் காதர்ஒலி..

News

Read Previous

வரலாற்றுச் சிறப்பு மிக்க ராஜாஜி அரங்கம்

Read Next

பள்ளபட்டி மண்ணில் மலர்ந்த இறை ஞான இந்திய சுதந்திர போராட்ட வீரர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *