நாயகம் எங்கள் தாயகம்

Vinkmag ad
நாயகம் எங்கள் தாயகம்
–வலம்புரிஜான்
 
7.  அன்னை மடியில் அண்ணல் !
 
 
(பக்கம் 131 – 135 )
 
   வள்ளல் நடத்திய வாணிபம் !    
பெரியப்பா வழியில்
பிள்ளை முகம்மதும்
வாணிபம் தொடங்கினார்.
உண்மை ; நம்பிக்கை
கொடுத்த வாக்கை
கோடாது போற்றல்
போன்ற பண்புகள்
பொதிந்து கிடந்தன
நாயகத்திடத்தில் !
அம்சா என்ற
வாணிபர் ஒருவர்
நாயகத்திடமிருந்து
நல்ல சரக்குகள்
வாங்கிடவென்று
குறித்த பொழுதினில்
வருவதாய்ச் சொல்லி
வழிபார்த்துப் போனார் !
சொன்ன சொல்லை
அம்சா என்பவர்
மூன்று நாட்களாய்
முழுவதும் மறந்தார்
மூன்றாம் தினத்தில்
அம்சா பதறினார்
உடனே ஓடினார் !
விழிப்புருவங்களோ
வில்லாய் வளைந்தன …
மூன்று நாட்களாய்
அதே இடத்தில்
முகம்மது என்கிற
தேயாத நிலவு
தேங்கிக் கிடந்தது !
வாக்கை நிறைவேற்றவில்லையென
வருந்தவே இல்லை நபிகள் பெருமான்.
மண்ணில் புதைந்த
விதையைப் போல …
மௌனமானார் !
மூன்று நாட்களாய்
காத்துக் கிடந்தேன்
என்று மாத்திரம்
முன்னவர் முகம்மது
சீதளச் சிரிப்பில்
சொற்களைக் குழைத்தார் !
அந்த நாளில்
மக்கா வாசிகள்
தேடிய பணத்தைப்
புதைத்து விட்டு
இடத்தைத் தேடி இளைப்பது இல்லை !
வாணிபத்தினிலே
வல்லவரிடத்தில்
பணத்தைத் தருவர் ;
ஈட்டும் பொருளில்
பங்கினைப் பெறுவர்.
இப்படிப்பட்ட
பங்கு வாணிபத்தில்
கொடிபோடத் தொடங்கினார்
கோமான் முகம்மது.
 
    தென்றலுக்கு வந்த தினவு !     
அந்த நாளில்
மக்கமா நகரில்
குறைஷி வம்சத்தில்
கீர்த்திமிக்க குடும்பம் ஒன்றில்
கதீஜா என்ற முத்து ஒன்று
கருத்தினைக் கவர்ந்தது !
கதீஜா –
கைகால் முளைத்த கனவு !
மண்ணில் தெரிந்த
மதுர நிலவு !
சதையில் வடித்த
சரித்திரக் கவிதையாய் …
இறைவனை நாடிய
இனிய பறவையாய் …
கதீஜா இருந்தார் !
தங்க நிலவு அது
தாஹிரா என்றும்
அழைக்கப்பட்டது !
தாஹிரா என்ற
பதத்திற்கு …
பரிசுத்தமானவர்
என்பது பொருள் !
கதீஜா அம்மா
வெட்டி எறிந்தால்
கால் நகமும் கூட
விலைக்குப் போகும் !
அவ்வளவானச்
செல்வச் செழுமை.
மக்கமா நகரிலிருந்து
விற்கப் போகும்
பண்டத்தில் பாதி
கதீஜா அம்மா
கைப்பொருள்
ஆகும் !
இரண்டு தடவை
இவர் –
மணம் முடித்திருந்தும்
கணவர் இருவரும்
காலம் ஆயினர் !

News

Read Previous

கலைஞருக்கு என் கண்ணீர் அஞ்சலி !

Read Next

இறவாத இலக்கியம்..!

Leave a Reply

Your email address will not be published.