வேலைவாய்ப்புகளைக் கொன்றொழிக்கும் கொரோனா

Vinkmag ad

வேலைவாய்ப்புகளைக் கொன்றொழிக்கும் கொரோனா

 

யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள், 2020-ம் ஆண்டு மனித குல வரலாற்றில் நெருக்கடி மிகுந்த ஆண்டாக இருக்குமென்று.  இரண்டு உலகப் போர்கள், ஸ்பானிஷ் ஃப்ளு, 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் 21-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை போன்ற சில நெருக்கடிகள்தான் உலகளாவிய பாதிப்பை ஏற்படுத்தின. அந்த வரிசையில் கரோனாவும் வந்துசேர்ந்திருக்கிறது. உடல்நலம், பொருளாதாரம், கலாச்சாரம், வாழ்க்கை முறை எல்லாவற்றையும் கொரோனா பெருந்தொற்று குலைத்துப் போட்டிருக்கிறது. குறிப்பாக, பொருளாதாரத்தில் அது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பாதிப்பு இந்திய அளவிலும் உலக அளவிலும் முன்னுதாரணமற்றது. இந்த நிலையில்தான் அதிர்ச்சி தரும் அறிக்கையை ‘இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம்’ (சி.எம்.ஐ.இ.) வெளியிட்டிருக்கிறது.

 

இந்த அறிக்கையின்படி 2020 ஜூலையில் மட்டும் 50 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 2020 ஏப்ரலிலிருந்து 1.8 கோடி மாதச் சம்பளக்காரர்கள் தங்கள் வேலையை இழந்திருக்கிறார்கள். இந்தியாவில் 21% பேர் முறைசார்ந்த பணிகளில் இருக்கிறார்கள். அமைப்புசாராப் பணிகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. எனினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறைசார்ந்த பணிகளின் பங்களிப்பு அதிகம் என்பதால் இது இந்தியப் பொருளாதாரத்துக்கு ஒரு மோசமான செய்தி.

 

பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதும் பெரும் பாதிப்புக்குள்ளானவர்கள் அமைப்புசாராத் தொழிலாளர்கள்தான். இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்கள். கட்டுமானப் பணிகளில் ஆரம்பித்து தொழிற்பேட்டைகள் வரை அவர்களின் பங்களிப்பு அதிகம். பொது முடக்கத்தின் காரணமாக ஏப்ரலில் இவர்களில் 9.12 கோடிப் பேர் வேலை இழந்தார்கள். அரசுகளும் பிழைப்புக்காக வந்த ஊர்களும் கைவிரித்துவிட்ட நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். மே மாதத்தில் 1.44 கோடிப் பேரும், ஜூனில் 4.45 கோடிப் பேரும், ஜூலையில் 2.55 கோடிப் பேரும் வேலைக்குத் திரும்பினார்கள். இன்னும் 68 லட்சம் பேர் வேலைக்குத் திரும்பவில்லை என்கிறது சி.எம்.ஐ.இ. அறிக்கை.

முறைசார்ந்த துறைகளில் பணிபுரியும் மாதச் சம்பளக்காரர்களின் கதையோ வேறு. அவர்கள் தங்கள் வேலைகளை இழந்தால் அவற்றைத் திரும்பவும் பெறுவது கடினம்.

கொரோனா ஒரு நோயாக உண்டாக்கும் பாதிப்பைக் காட்டிலும், பொது முடக்கம் வழி உருவாக்கும் பாதிப்புகள் மோசமான விளைவுகளாக இருக்கும் என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபணம் ஆகிறது. கொரோனாவுடன் போராடிக்கொண்டே பொருளாதாரத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவருவது பெரும் சவால் என்றாலும், இந்தியா அந்த சவாலில் கடுமையாகப் போராடவில்லை என்றால், பல கோடிப் பேரை சீரழிவில் தள்ளுவதாக அது அமைந்துவிடும். நிச்சயமாக பொது முடக்கத்திலிருந்து வேகமாக இந்தியா வெளியே வர வேண்டும். கடந்த காலப் பொருளாதார மந்த நிலைகளைவிட மோசமான ஒன்றைத் தற்போது எதிர்கொண்டிருக்கிறோம். மக்கள்மையக் கொள்கைகளே இந்த நிலையைச் சமாளிப்பதற்கு ஒரே வழி.

– நன்றி .. ஆகஸ்ட் 25 அன்று தமிழ் இந்துவில் ஆசை எழுதிய கட்டுரையிலிருந்து) 

News

Read Previous

பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு

Read Next

தமிழ் மரபு அறக்கட்டளை

Leave a Reply

Your email address will not be published.