பேரழிவல்ல, பெரும் வாய்ப்பு!

Vinkmag ad

பேரழிவல்ல, பெரும் வாய்ப்பு!

By ஜெம் ஆர். வீரமணி

 

சென்னையைப் புரட்டிப் போட்டுப் பேரழிவையும், பேரதிர்ச்சியையும் ஏற்படுத்திச் சென்றது தொடர்ந்து பெய்த பலத்தமழை. அத்துடன் சென்னையில் வாழும் ஒவ்வொருவரும் பல அவதிகளுக்கு ஆட்பட்டார்கள். குற்றம், குறைகள்,தவறுகள், கவனமின்மை போன்ற எதையும் பார்க்கும் நேரமல்ல இது.
ஆனால், இதன் மூலம் பல பாடங்களைக் கற்றுக் கொண்டு எதிர்காலத்தில் இது போன்ற பேரிடர்கள், பேரழிவுகளைத்தடுப்பது, தவிர்ப்பது எப்படி என்றும் அதற்கு எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும்சிந்திக்க வேண்டிய தருணம்.
உலகில் பல நாடுகளையும் பூகம்பங்கள் தாக்குகின்றன. எரிமலைகள் வெடித்துச் சிதறி பேரழிவுகளைஏற்படுத்துகின்றன. அணைகள், ஏரிகள், கரைகள் உடைந்து, மனித உயிர்கள் பறிப்பும், மாற்ற முடியாதபேரழிவுகளும், பொருளாதார சிதைவுகள், சேதங்கள் ஏற்படுத்துவதையும், செய்திகள், ஊடகங்கள் மூலம் நாம்தொடர்ந்து பார்த்து வருகிறோம். பூமி அதிர்வினால் ஏற்படும் பயங்கர சுனாமியும், அதனால் ஏற்பட்ட பேரழிவையும்,லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்ததையும் நாம் பார்த்திருக்கிறோம்.
அக்டோபர் மாதத்திலிருந்து ஏறத்தாழ ஜனவரி மாதம் ஆரம்பம் வரை வடகிழக்கு பருவக்காற்றின் தாக்கம், நம்தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஸா, மேற்கு வங்காளம், வங்க தேசம் போன்ற பகுதிகளில் ஆண்டுதோறும் தொடர்ந்துஎங்காவது சேதம் ஏற்படுத்துவது வழக்கமாகி விட்டது.
அதேபோல, ஆந்திராவின் ஒரு பகுதியும், ஒடிஸாவின் கடற்கரைப் பகுதியும் 2001-ஆம் ஆண்டு பயங்கரப் புயல்தாக்குதலால் பேரழிவை எதிர்கொண்டது. ஒடிஸாவில் மட்டும், லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்,ஏராளமான பொருள் சேதம் ஏற்பட்டது.
ஆந்திரா, ஒடிஸா கடற்கரையில் 5 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை கடல் நீர் கரையிலிருந்துவிளைநிலங்களையும் கிராமங்களையும், ஊர்களையும் அழித்து கால் நடைகளின் உயிர்களைப் பறித்து பயங்கரஅழிவை ஏற்படுத்தியது.
சென்ற ஆண்டு விசாகப்பட்டினத்தை பயங்கரப் புயல் தாக்கியது. அந்தக் கடற்கரை நகரத்திலிருந்த நூற்றுக்குஎண்பது பங்கு மரங்களைச் சாய்த்து வீழ்த்தி, அந்த நகரத்தையே உருக்குலையச் செய்தது அந்தப் புயல்.
நமக்கு தெரிந்து சென்னை விமான நிலையம் ஒரு சில மணி நேரம் அல்லது அதிகபட்சம் ஒரு நாள் இயங்காமல்இருந்த சூழ்நிலையைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் சமீபத்திய மழையால் தொடர்ந்து ஆறு நாள்கள் விமானநிலையம் மூடப்பட்டது இதுவரை கண்டறியாத ஒன்று.
இங்கு மட்டுமல்ல, வேறு எந்த நாட்டிலும் இப்படி விமானத் தொடர்பே இல்லாத நிலைமை ஏற்பட்டதில்லை. ஓரிருநாள்கள் பனிப் புயலால் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விமான நிலையங்கள் செயல்படாமல்இருந்தது உண்டு என்றாலும், விமானம் பறக்க முடியவில்லை, தண்டவாளங்களில் ரயில்கள் செல்லமுடியவில்லை. மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து ஸ்தம்பித்தது என்கிற நிலைமைஏற்பட்டதே கிடையாது.
ஹைதராபாதில் சுதந்திரத்துக்கு முன்னால் நிஜாம் ஆட்சி நடைபெற்றபோது அடிக்கடி அந்த நகரம் வெள்ளத்தால்பாதிக்கப்பட்டது. அந்தச் சூழ்நிலையில் தாற்காலிகமாக அரசு எடுத்த எந்த முயற்சியும் தகுந்த பலன்கொடுக்கவில்லை.
அப்போது, மைசூரில் ஒரு சிறந்த பொறியியல் வல்லுநராகவும், திட்ட நிபுணராகவும், சிறந்த நிர்வாகியாகவும், ஒருமாபெரும் மேதையாகவும் கருதப்பட்ட டாக்டர் விஸ்வேஸ்வரய்யா மைசூர் ராஜியத்தின் திவானாக இருந்தார்.கிருஷ்ணராஜசாகர் அணையைக் கட்டி, அதற்கு அருகிலேயே ஓர் அருமையான அழகிய பிருந்தாவன் பூங்காதோட்டத்தையும், நீருற்றுகளையும் உருவாக்கிய மிகப் பெரும் சாதனையைப் புரிந்தவர் அவர்.
புகழ்வாய்ந்த பொறியியல் வல்லுநரை மைசூர் மன்னரிடம் அனுமதி பெற்று ஹைதராபாத்துக்கு வரவழைத்தார்ஹைதராபாத் நிஜாம். வெள்ளத் தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான வழி முறைகளையும்ஆலோசனைகளையும் கூறுமாறு டாக்டர் விஸ்வேஸ்வரய்யா கேட்டுக் கொள்ளப்பட்டார்.
ஹைதராபாத் நகரில் ஆங்காங்கு ஓடும் கால்வாய்கள் ஆற்றுக்கு செல்லும் நீர் வடிகால்கள் எல்லாம் வீணாகாமல்இருப்பதற்காக சில ஏரி, குளங்களை உருவாக்கி அந்த நீர் நகரத்திற்குள் சென்று பாதிப்பு ஏற்படுத்தாமல் அந்த நகரமக்களுக்குத் தேவையான குடிநீர் வசதிக்கும் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை கூறினார் விஸ்வேஸ்வரய்யா.
மூன்று புதிய ஏரிகள் வெட்டப்பட்டன. இன்றுவரை, ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பெரும் வெள்ளச்சேதம் ஏதும் ஹைதராபாத் நகரில் ஏற்படவில்லை. டாக்டர் விஸ்வேஸ்வரய்யாவுக்கு ஹைதராபாத் நகரில் பெரியசிலையையும் அவர் பெயர் தாங்கிய ஒரு கட்டடத்தையும் எழுப்பி மரியாதை செலுத்தியது அன்றைய நிஜாம் அரசு.
அந்த முன்னுதாரணத்தை எடுத்துக் கொண்டு சென்னை நகரைச் சுற்றியுள்ள ஏரிகள், குடிநீர் ஆதாரங்கள், நீர்ப் பிடிப்புபகுதிகள் அவற்றிலிருந்து உபரி நீர் செல்லும் வழிகளில் ஆழமாக தூர் வாரப்பட வேண்டும். அவற்றின் கரைகள்பலப்படுத்தப்பட்டு அடையாறு, கூவம், போன்ற பல ஆறுகளில் தடையின்றி நீர் செல்வதற்கு தேவையான அனைத்துநடவடிக்கைகளும் நீண்ட கால அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும்.
சென்னை நகரில் ஆற்றங்கரையில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு ஒரு நிரந்தரப் பாதுகாப்பும்,வாழ்வாதாரத்தையும் உருவாக்கித் தர வேண்டும். மீண்டும் மீண்டும் ஏழை மக்களை இந்த ஆற்றங்கரைகளில்குடியமர்த்துவதால் நிரந்தரப் பாதுகாப்பு கொடுக்க முடியாது.
தவிர, அந்த ஆறுகளில் மனிதர்களால் ஏற்படும் மாசுவையும் தவிர்க்க வேண்டும். ஜப்பான், சிங்கப்பூர் போன்றநாடுகளில் கடற்கரைகளையும் ஆற்றங்கரைகளையும் பராமரிப்பு செய்து வருவதால் அவர்களுக்கு இப்படிப்பட்டவெள்ளத்தின் தாக்குதல் வருவது இல்லை. ஆபத்தான கரையோரங்களில் யாரும் குடியிருப்பதுமில்லை. அதற்குஅனுமதிப்பதும் இல்லை.
நம் நாட்டில் பல பொறியியல் வல்லுநர்களும் கட்டமைப்புகளில் சிறந்த மாபெரும் நிபுணர்களும் நம்தமிழ்நாட்டிலேயேகூட இருக்கின்றனர். பல பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அனைத்துத் துறை நிபுணர்களும்தங்கள் ஆலோசனைகளை அரசுக்கு அளிக்க வேண்டும்.
அரசாங்கம் அப்படிப்பட்ட ஆலோசனைகளை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுத்து உலகம் முழுவதும் எல்லாநாடுகளும் இவற்றைப் பின்பற்றுமாறு அமைய வேண்டும்.
பூமிக்கடியிலும், கடலுக்கு அடியிலும் பாதைகள் போடப்பட்டு பாதுகாப்பான போக்குவரத்துக்கு பல நாடுகளும்நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவின் நியூயார்க் நகரை அடைவதற்கு பூமிக்கு அடியிலும்,கடல் நீருக்கு அடியிலும் போடப்பட்ட பாதைகள் செயல்படுகின்றன.
லண்டன் மாநகரில் பூமிக்கடியில் ஓடும் டியூப் இரயில் என்று சொல்லப்படும் மெட்ரோ இரயில் உலகப் புகழ்வாய்ந்தது. பாரீஸ் நகரைச் சுற்றியிருக்கும் ஒரு வெளிப்புறச் சாலை பூமிக்கடியில் செல்லும் பாதைகளால்இணைக்கப்பட்டு தடையின்றி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஹாங்காங் நாட்டிலும் இப்படிப்பட்டகட்டமைப்புகள் உள்ளன.
கடல் நீரைத் தூர்த்து ஒரு புதிய விமான நிலையமே ஜப்பானில் உள்ள ஒசாக்கா நகரில் உருவாக்கப்பட்டுள்ளது.மிகப் பெரிய பாலங்கள் கடலுக்கு மேல் கட்டப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட மாபெரும் விஞ்ஞான சாதனையாளர்கள்உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.
500 – 1000 ஆண்டுகளுக்கு முன்பு உலகிலேயே மிகச் சிறந்து வளர்ந்த நாகரிகம் படைத்த உயர்ந்த நாடாக இந்திய நாடுவிளங்கியது. உலக நாடுகள் முழுவதும் இந்தியாவிடமிருந்து கற்றுக் கொள்ளவும், அனுபவம் பெறுவதற்கும் இங்குவந்துள்ளார்கள்.
கரிகால் மன்னர் உருவாக்கிய கல்லணை இன்றுவரை எந்தப் பாதிப்புமில்லாமல் இருந்து வருவதைப் பார்க்கிறோம்.பவானி ஆற்றிலிருந்து வரும் காளிங்கராயன் வாய்க்கால் ஒரு மாபெரும் விஞ்ஞான அதிசயம் என்று சொல்லலாம்.
விபத்தினை எதிர் கொள்வது, தடுப்பது, மற்றவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வது ஆகியவற்றைப்பள்ளிப் பாடமாகவே கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற சமூக விழிப்புணர்வுக்கான கல்விஅறவே இல்லாமல் போய்விட்டிருப்பது நமது துரதிர்ஷ்டம்.
அதேபோல, இந்த கடற்கரை, ஆற்றுப்படுகை, நீர்நிலைகளின் கரைகள் ஆகியவற்றில் அமைந்த குடியிருப்புப்பகுதிகளில், ஒலிப் பெருக்கிகளைக் கரையில் நிறுவி மழை, புயல் மற்றும் குடிநீர் ஏரித் திறப்பு நேரங்களில் அபாயமுன்னறிவிப்பு செய்ய வேண்டும்.
இப்படிப்பட்ட முன் பாதுகாப்பு பயிற்சியையும் விபத்தை எதிர்க் கொள்ளும் விதத்தினையும் அவர்கள் இத்தகையஆபத்துக் காலங்களில் எங்கு தங்கலாம் என்பது வரை முன்னறிவிப்பாக பகுதி வாரியாக தெரிவிக்க வேண்டும்.அத்துடன், இது போன்று ஆபத்துக் காலங்களில் மக்கள் விரைந்து வெளியேறுவதற்கான பயிற்சியைத் தொடர்ந்துஆண்டுக்கு இருமுறையாவது அளிக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே மிக வளர்ந்த, உயர்ந்த நாடாக விளங்கியது இந்தியா. ஆனால்,இன்றைய சூழ்நிலையில் ஒரு வளர்ந்த நாடாக அங்கீகாரம் பெறுவதற்கு ஒரு சில அளவு கோள்களை உலக நாடுகள்வைத்துள்ளன. அதன்படி, பயணிக்கும் பாதைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
வாழும் இடங்கள் அனைத்தும் தூய்மையாகவும், தூய்மையான குடிநீர் வசதியுள்ளதாகவும் இருக்க வேண்டும்.மருத்துவம், கல்வி, ஆராய்ச்சி, தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, அடிப்படை வாழ்க்கைத் தரம் உயர்தல், நவீனப்போக்குவரத்து வசதிகள், நவீன கட்டட அமைப்புகள், பொழுது போக்கு கலாசார மையங்கள், பூங்காக்கள் என பலநவீன வசதியான கட்டமைப்புகள் வேண்டும். தமிழ்நாடும், குறிப்பாக, சென்னையும் இந்த அம்சங்கள் அனைத்தும்காணப்படும் உலகத் தரத்துக்கு உயர்த்தப்பட வேண்டும்.
தமிழகத்தைத் தாக்கிய பெருமழை பேரழிவை ஏற்படுத்தியது என்பது உண்மை. ஆனால், அதுவே நமக்குப் பலபாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. தவறுகளைத் திருத்த வழிகோலியிருக்கிறது. கட்டமைப்பு வசதிகளைமேம்படுத்தி, சென்னையை உலகத் தரமான நவீன நகரமாக மாற்றுவதற்குகான சூழலை ஏற்படுத்தி இருக்கிறது.
தவறைத் திருத்தி, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தருணம் இது. புலம்பிக் கொண்டிருக்கும் நேரமல்ல. ஜப்பானைமுன்னோடியாகக் கொண்டு, பேரழிவுகளை சாதகமாக மாற்றிகொள்ள நாம் முன்வர வேண்டும்.
விபத்தினை எதிர் கொள்வது, தடுப்பது, மற்றவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வது ஆகியவற்றைப்பள்ளிப் பாடமாகவே கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற சமூக விழிப்புணர்வுக்கான கல்விஅறவே இல்லாமல் போய்விட்டிருப்பது நமது துரதிர்ஷ்டம்

 

News

Read Previous

1330 அடி நீளத் திருக்குறள் பதிப்பு

Read Next

டொனால்ட் டிரம்ப் – வெறுப்புணர்ச்சியின் அசிங்கமுகம்

Leave a Reply

Your email address will not be published.