புனித நோன்பின் பத்து தத்துவங்கள் – முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ

Vinkmag ad

விண்ணும் மண்ணும் விதி கடலும்

வானும் கதிரும் விண்மீனும்

பொன்னும் பொருளும் வான்முகிலும்

பச்சை மரமும் இலை கொடியும்

எண்ணில் அடங்காப் புகழ்ச்சிதனை

என்றும் புகழும் என்னிறைவா !

உனக்கே என்புகழும் புகழ்ச்சியும் சாற்றுகிறேன் !

எல்லாப் புகழும் இறைவனுக்கே

அன்பார்ந்த சகோதரர்களே ! அருமைமிகு சகோதரிகளே ! பண்பான பெரியோர்களே ! பெருமை மிகு நேயர்களே !

தத்துவப் பெட்டகமான கண்ணிய மிக்க மாதம் புனித ரமளானின் புண்ணியங்களைத் தேடிக் கொண்டிருக்கும் தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !

வேதம் தந்த மாதம் புனித ரமளான் மாதம் ! பாவம் தீர்க்கும் மாதம் புனித ரமளான் மாதம் ! பாக்கியங்கள் தரும் மாதம் புனித ரமளான் மாதம் ! சுவனக் கதவுகளைத் திறந்து வைக்கும் மாதம் புனித ரமளான் மாதம் ! நரகின் கதவுகளைத் தாழிட்டு வைக்கும் மாதம் புனித ரமளான் மாதம் ! இந்த ரமளான் தந்த தத்துவங்கள் தான் எத்தனை எத்தனை? ஆஹா ! அதை எண்ணிப் பார்க்கவே இதயம் இனிக்கிறதே !

ரமளான் தந்த தத்துவங்களைக் கன நேரம் எண்ணிப் பார்த்தேன் அதில் அற்புதமான பத்துத் தத்துவங்கள் பளிச்செனப் பட்டன. அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதே பாக்கியமெனக் கருதுகிறேன். அல்ஹம்துலில்லாஹ் !

அன்பார்ந்த பெருமக்களே !

1. உலக வாழ்வில் மனிதன் தேடி அலைவது உண்மையான பாசம் – நேசம் – தூய அன்பைத்தான் ! பெற்றோரிடம் பிள்ளை தேடி அலைவதும் பாசம்தான் ! கணவனிடம் மனைவி நாடி நிற்பதும் பாசம் தான் ! சகோதரனிடம் சகோதரி ஓடி வருவதும் பாசம் தான் ! அல்லாஹ்விடம் அடியார்கள் கூடித் தேடுவதும் பாசத்தைத்தான் ! எல்லா மக்களும் எல்லா மக்களிடமும் எதிர்பார்ப்பது பாசம் தான் !

இறைவன் மீது பாசம் கொண்டு நோன்பு நோற்கும் மனிதன் – தன்னை ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு நிறுத்தி எல்லோரிடமும் அடக்கமாக ஒழுக்கமாக பாசமாக செயல்படுகிறான் ! அவன் நடத்தையால் அனைவரிடமும் பாசத்தைப் பரிசாகப் பெற்று விடுகிறான். இது முதலாம் தத்துவம்.

2. வாழ்வில் கட்டுப்பாடு இல்லாத மனிதன் காட்டாற்று வெள்ளம் போல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனத் திரிகிறான். வாழ்வில் ஒரு கொள்கை இல்லை; கோட்பாடு இல்லை; இப்படிப்பட்ட மனிதன் எப்படிப்பட்ட நிலைகளிலும் வெற்றி பெறுவது குதிரைக் கொம்பாகி விடுகிறது, அவன் வாழ்வில் தோல்வியே மிஞ்சி நிற்கிறது !

மனித வாழ்வில் எதற்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். ஆசைகளை அடக்கிக் கொள்ளும் பண்பு வேண்டும் ! கால் போன போக்கிலே மனம் போகாமல் காத்துக் கொள்ளும் திறமை வேண்டும். இந்தப் பண்புத் திறமையோடு வாழும் மனிதன் நிச்சயம் வெற்றி பெறுவான்.

உண்ணும் உணவிலே ஒரு கட்டுப்பாட்டையும், பருகும் பானத்திலே ஒரு கட்டுப்பாட்டையும், உறவின் சுகத்திலே ஒரு கட்டுப்பாட்டையும் பழக்கப்படுத்திக் கொண்ட மனிதன் மற்ற பிற காரியங்களில் எல்லாம் நிச்சயம் தன்னைக் கட்டுப்படுத்தி வாழ முடியும். இது இரண்டாம் தத்துவம்.

3. எந்நம்பிக்கை கொண்டோரும் உயர் விழக்கலாம். ஆனால் தன்னம்பிக்கை கொண்டோர் என்றுமே உயர்வை இழப்பதில்லை. தன்னைத் தானே நம்பாதவன் வாழ்ந்தால் என்ன; வீழ்ந்தால் என்ன? என்று சொல்லுவார்கள். அந்த அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை அவசியம்.

தான் மேற்கொள்ளும் உபவாசம் – இந்த நோன்பு தனக்கு பாவம் நீக்கி சொர்க்கபதியைத் தரும் என்ற நம்பிக்கையுடன் முழுதாக ஒரு மாதம் நோன்பிருந்து பழக்கப்படும் மனிதன் – மற்ற காரியங்களிலும் நன்னம்பிக்கை கொண்டு செயல்படுவதற்கு ஒரு பயிற்சிப் பட்டறையாக அமைகிறது. இது மூன்றாம் தத்துவம்.

4. மனிதன் தனது வாழ்வில் பல முன்னேற்றங்களை அடைவதற்குத் தனது கல்வி அறிவு, சிந்தனை ஆற்றல், விடா முயற்சி இவைகளைப் பயன்படுத்தி செயல்படுகிறான். இதற்கும் மேலாக ஆக்கவும் அழிக்கவும், கொடுக்கவும் எடுக்கவும் ஒரு சக்தி இருக்கிறது – அது இறை சக்தி என்ற உணர்வோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் வரும். வணக்கத்தின் வழி இந்த இறைபக்தியை இந்த நோன்பு அதிகமாகவே நமக்கு வழங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. இது நான்காம் தத்துவம்.

5. உலகில் பிறந்த மனிதன் கோடானகோடி செல்வங்களைப் பெற்றிருந்தாலும் சிக்கன வாழ்வு இல்லை என்றால் சீரழிந்து போவான். இந்தச் சிக்கன வாழ்வை உண்ணும் உணவிலும் உபயோகிக்கும் மற்ற பொருட்களிலும் இயற்கையாகவே இந்த நோன்பு உருவாக்கிக்காட்டுகிறது. இது ஐந்தாம் தத்துவம்.

6. எத்தனை கோடிப் பணமிருந்தாலும், எவ்வளவு உயர்ந்த கல்வி கற்றிருந்தாலும், எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் மனித வாழ்வில் ஒழுக்கம் அவசியம் ஒழுக்கம் தான் விழுப்பம் தரும். அது உயிரினும் ஓம்பப்படும். ஒழுங்கீனம் அழிவைத்தரும்.

நோன்பிருக்கும் மனிதன் சொல்லிலும் செயலிலும் நல்ல ஒழுக்கத்தைப் பேணி நடக்கத் தூண்டப்படுகிறான். இது ஆறாம் தத்துவம்.

7. மனித வாழ்வில் குடும்பத்திலோ, வேலையகத்திலோ, தன் சமுதாயத்திலோ ஒற்றுமை உணர்வுடன் செயல்பட்டால்தான் நற்பெயரும் நல்ல முன்னேற்றமும் கிடைக்கும். நோன்பிருக்கும் மனிதன் எல்லாவகையிலும் சகமனிதர்களுடன் ஒற்றுமை உணர்வுடன் நடக்கிறான். இது ஏழாம் தத்துவம்.

8. மனிதன் ஒரு செயலைச் செய்யும்போது நீதி நேர்மை பற்றி நல்ல மனசாட்சி வேண்டும், நோன்பாளி மனசாட்சியோடு தான் உண்ணாமல் பருகாமல் இருந்து பக்குவம் பெறுகிறான். இது எட்டாம் தத்துவம்.

9. மனிதன் நற்சிந்தனையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் உண்டு. இந்த நற்சிந்தனை பசித்திருக்கும் மனிதனுக்கு நிச்சயம் கிடைக்கும். இது ஒன்பதாம் தத்துவம்.

10. பணம், பதவி, பட்டமிருந்தாலும் மனிதனுக்கு மன நிம்மதி தேவை. இது நோன்பாளிக்கு அனுதினமும் கிடைக்கிறது. இது பத்தாம் தத்துவம்.

News

Read Previous

வஃபாத்து செய்தி

Read Next

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு முனைவர் பட்டம்

Leave a Reply

Your email address will not be published.