பாசிஸத்தின் மீதான மோடியின் மௌனம் ஜனநாயகத்தை அழித்துவிடும்!

Vinkmag ad
பாசிஸத்தின் மீதான மோடியின் மௌனம் ஜனநாயகத்தை அழித்துவிடும்!
                                     (கீழை ஜஹாங்கீர் அரூஸி)
எந்த பாசிஸம் நாட்டின் அரியணையில் ஏறி விடக்கூடாதென்று கவலைப்பட்டோமோ? அந்த பாசிஸம் மோடியின் உருவத்தில் தேசத்தின் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விட்டது.
மோடி ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நெருங்கும் வேளையில் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்களால் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் சட்டத்தின் பெயராலும் கலவரத்தின் பெயராலும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற ஜனநாயக படுகொலைகளை கண்டித்த எழுத்தாளர் கல்புர்கி,மாணவர் ரோஹித் வெமுலா போன்றவர்களின்
சாவுக்கு பாசிஸமே காரணமாக இருந்துள்ளது.
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நாட்டு மக்கள் நிம்மதி இல்லாமல் ஒரு வித பதட்டமான சூழலில் வாழக்கூடிய அவல நிலையே தொடர்கிறது.
பாசிஸ பயங்கரவாதிகளால் காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரஷீது தொடர்ந்து தாக்கப்படுவதும்,மாட்டுக்கறியின் பெயரால் அக்லாக் போன்ற அப்பாவிகள் கொல்லப்படுவதும் மோடி ஆட்சியில் தொடர்கதையாகி வருவது வேதனையாக உள்ளது.
பாசிஸத்தின் அராஜங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர நினைக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்களின் மீது தேச விரோத பொய் வழக்கு போடுவதும்,அவர்களை சிறையிலடைப்பதும் போன்ற ஜனநாயக விரோத செயல்களை பல்வேறு நாட்டவரும் கண்டிக்கும் அவலநிலையே தொடர்கிறது.
மோடி பிரதமராக பொறுப்பேற்ற ஓராண்டு காலம் உலகின் பல்வேறு நாடுகளையும் சுற்றி பார்த்து விட்டு பல லட்சம் கோடி அந்நிய முதலீடுகளை தேசத்திற்கு கொண்டு வந்ததை போன்ற நாடகம் நடந்தேறி இரண்டாண்டுகள் நிறைவடைய போகும் நிலையில் ஏதாவதொரு அந்நிய முதலீடாவது தேசத்திற்குள் வந்துள்ளதா?
முதலீடு செய்ய விரும்பிய பல்வேறு நாட்டவரும் இந்தியாவில் தற்போது நிலவி வரும் சகிப்பின்மையை காரணம் காட்டி ஓடி ஒளிந்துகொள்ளும் அவலநிலை தான் நீடிக்கிறது.
தற்போது சட்டமன்ற தேர்தல்கள் நடக்கவிருக்கும் தமிழ்நாடு,கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் தமது ஆளுமையை நிலை நிறுத்த பாசிஸ பரிவாரங்கள் பல்வேறு கோணத்தில் வகுப்பு மோதல்களை உண்டாக்கி அரசியல் ஆதாயம் பெற துடிக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சி என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பல்வேறு மதம்,மொழி,கலாச்சாரம் சார்ந்து வாழும் மக்களின் மூலமே சாத்தியமாகும் என்ற உண்மையை சகித்து கொள்ள முடியாமல் பாசிஸத்தின் மூலமே சாத்தியமாகும் என நினைத்தால்….
இந்திய தேசத்தின் ஜனநாயகம் அழுகி அழிந்து விடும் பேராபத்து தான் ஏற்படும்.
பாசிஸத்தின் மீதான தமது மௌனத்தை மோடி கலைத்து விட்டு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து மீதியுள்ள மூன்று ஆண்டு நிர்வாகத்தையும் தேசத்தின் மீதான வளர்ச்சியில் கொண்டு செலுத்த வேண்டுகிறேன்.

News

Read Previous

முதுகுளத்தூரில் 120 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

Read Next

தாழ்வாய் நினைக்காதே

Leave a Reply

Your email address will not be published.