பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் மாநாடு

Vinkmag ad

அறிவியல் கதிர்
                                                                                  பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் மாநாடு
                                                                    பேராசிரியர் கே. ராஜு
13 நாட்கள் நடைபெற்ற 21-வது ஐ.நா. பருவநிலை மாறுபாடு உச்சி மாநாட்டின் இறுதியில் 2015 டிசம்பர் 13 அன்று பசுங்குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்த ஒரு வரைவு ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. வளரும் நாடுகளிடையே இதற்கு முன்னர் நடைபெற்ற கோபன்ஹேகன், கான்கன், டர்பன் போன்ற மாநாடுகளில் எந்தவொரு ஒப்பந்தத்தையும் எட்ட முடியாத ஏமாற்றம் இருந்தது. பருவநிலை மாறுபாடு குறித்த நாடுகளுக்கிடையேயான அமைப்பின் 5வது மதிப்பீட்டு அறிக்கை உலக நாடுகளுக்கு வர இருக்கும் ஆபத்து குறித்து கடும் எச்சரிக்கை விட்டிருந்ததால் ஒப்பந்தத்தை எட்டியே ஆகவேண்டுமென்ற என்ற ஒரு நிர்ப்பந்தம் அனைத்து நாடுகள் மீதும்  இருந்தது. விமர்சகர்கள், ஆர்வலர்களிடையே அது பற்றிய ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது. பருவநிலை மாறுபாடு விளைவித்து வரும் நெருக்கடியை சமாளிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 196 நாடுகளையும் ஏதோ ஒரு விதத்தில் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு வரைவு ஒப்பந்தம் ஏற்பட்டதே ஒரு திருப்புமுனைதான். கார்பன் வெளியீடுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதை அனைத்து நாடுகளும் உணர்ந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முனையத் தொடங்கியிருப்பது வரவேற்கக்கூடிய ஒரு மாற்றமே. ஆனால்  மாநாட்டில் கிடைத்ததாக விளம்பரப்படுத்தப்படும் வெற்றி, பல அடிப்படையான குறைபாடுகளை மூடி மறைக்கிறது. பாரிஸ் மாநாட்டில் வென்றவர்களும் கிடையாது, தோற்றவர்களும் கிடையாது.. பருவநிலை குறித்த நீதி வெற்றி பெற்றிருக்கிறது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன் பெருமிதத்தை வெளியிட்டார். ஆனால் காலநிலை மாற்றத்திற்கு இத்தனை ஆண்டுகளாக ஏற்படுத்திய சேதத்திற்குப் பொறுப்பேற்பதிலிருந்து பாரிஸ் ஒப்பந்தம்  அமெரிக்காவையும் பிற வளர்ந்த நாடுகளையும் விடுவிக்கிறது. பொறுப்பேற்பதில் இந்தியா போன்ற வளரும் நாடுகளையும் ஏழை நாடுகளையும் அது சமப்படுத்திவிட்டது. தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் இருந்ததைவிட பூமியின் கூடுதல் வெப்பநிலை 2 டிகிரிக்குட்பட்டதாக இருக்க வேண்டும் என்ற இலக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  கியூபா, ஜமைக்கா, பிஜி, மாலத் தீவு, சிங்கப்பூர், மௌரிஷியஸ் போன்ற தீவு நாடுகள் இந்த இலக்கை 1.5 டிகிரியாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தன. காரணம், இந்த இலக்கை எட்டாமல் போனால் அவற்றில் பல நாடுகள் கடல் நீரில் மூழ்கி உலக வரைபடத்திலிருந்து காணாமல் போய்விட வேண்டியதுதான். அந்த ஆபத்து அவைகளை நெருக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் பாரிஸ் மாநாட்டில் இப்படிப்பட்ட நிலையில் உள்ள பல நாடுகள் ஒன்றிணைந்து “அதிக எதிர்பார்ப்புடன் உள்ள கூட்டணி (High Ambition Coalition)” என்ற அமைப்பை உருவாக்கின. அவர்களது கோரிக்கையை ஏட்டளவிலாவது மாநாடு ஏற்றுக்கொண்டது ஒரு ஆச்சரியம்தான். அரை டிகிரிதானே என்று அலட்சியமாக நினைத்துவிட வேண்டாம். அந்த வித்தியாசமே உலக அளவில் வெளியிடப்படும் பசுங்குடில் வாயுக்கள் மீதும், அவை பருவநிலை மீது ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் மாநாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகள் இந்த இலக்கை எட்டுவதற்கு உதவப்போகின்றனவா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. காரணம், மாநாட்டு ஒப்பந்தம் சட்டப்படியாக நாடுகளைக் கட்டுப்படுத்தாது. நாடுகள் தாங்களாகவே முன்வைக்கும் கார்பன் குறைப்பின் அடிப்படையில்தான் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. 2030-க்குள் அவை குறைக்கப்போவதாக வாக்களித்தள்ள கார்பனின் அளவு 15 கிகாடன்களாகும் (ஒரு கிகா டன் என்பது ஒரு பில்லியன் டன்.. அதாவது 1000 மில்லியன் டன்கள்). இந்த அளவுகள் 2 டிகிரி இலக்கை எட்டுவதற்கே கூடப் போதுமானவை அல்ல. 1.5 டிகிரி இலக்கை எட்டும் பேச்சுக்கே இதில் இடம் இல்லை. 1.5 டிகிரி என இலக்கில் குறிப்பிட்டதற்குக் காரணமே, அந்த இலக்கை எட்ட வேண்டுமானால் சீனா, இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளை கார்பன் குறைப்பு வளையத்திற்குள் கொணர்ந்து பொறுப்பை அவை மீது சுமத்தும் வளர்ந்த நாடுகளின் ஏற்பாடுதான்.

News

Read Previous

இவர்தான் முஸ்லிம்

Read Next

“எய்ட்ஸ் “விழிப்புணர்வு!

Leave a Reply

Your email address will not be published.