இவர்தான் முஸ்லிம்

Vinkmag ad
அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
7      இவர்தான் முஸ்லிம்
‘இந்த மார்க்கத்தின் பெயர் ‘இஸ்லாம்’ என்பதும், இதைப் பின்பற்றுகிறவர்களை ‘முஸ்லிம்’கள் என்றும் அழைக்க வேண்டும்’ என்பதே மார்க்க அறிஞர்களின் கருத்து, என்பதை முதல் அத்தியாயத்தில் பார்த்தோம்.
இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பறுகின்றவர்களை ‘இஸ்லாமியர்கள்’ என்றும் அழைக்கலாம். ஆனால், ‘முஸ்லிம்’ என்று அழைப்பதே சிறப்பானது. காரணம், இது இறைவன் வைத்த பெயராகும்.
‘நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சிக்க வேண்டியவாறு முயற்சியுங்கள். அவனே உங்களைத் தேர்ந்தெடுத்(து மேன்மையாக்கி  வைத்)திருக்கின்றான். இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை. இது உங்கள் பிதாவாகிய இப்ராகீமுடைய மார்க்கமாகும்.
(அல்லாஹ்) அவன்தான் இதற்கு முன்னரும் இ(வ்வேதத்)திலும் உங்களுக்கு ‘முஸ்லிம்’ என்று பெயரிட்டுள்ளான். (இதற்கு) நம்முடைய இத்தூதரே சாட்சியாக இருக்கிறார்’ என்று திருமறையில் (22:78) இறைவன் கூறுகின்றான்.
‘முஸ்லிம்’ என்றால் ‘கீழ்ப்படிபவர்’ என்று பொருள்.
இறைவன் ஒருவனுக்கு மட்டுமே அடிபணிந்து, அவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து வாழ்பவர்களே முஸ்லிம்கள்.
இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ள அடிப்படைகளில் நம்பிக்கை வைத்து அதன்படி நடப்பவர் மட்டுமே முஸ்லிம் என்ற அந்தஸ்தைப் பெற முடியும்.
‘நிச்சயமாக, எனது தொழுகையும், என்னுடைய வழிபாடுகளும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே உரியனவாகும். அவனுக்கோ யாரும் இணையில்லை. இவ்வாறே எனக்குக் கட்டளை யிடப்பட்டுள்ளது. மேலும் நான் இறைவனுக்குக் கீழ்ப்படிவோரில் (முஸ்லிம்களில்) முதன்மையானவனாக உள்ளேன்’ என்ற திருக்குர்ஆன் (6:162) வசனங்களுக்கேற்ப வாழ்பவர்களே முஸ்லிம்கள்.
இந்த வானங்களிலும், பூமியிலும் இருக்கின்ற எல்லாமே இறைவனுக்கு உரியவையே. மனிதனிடம் இருக்கின்ற, ‘தனது’ என்று உரிமை கொண்டாடுகின்றவற்றுக்கும் அசல் உரிமையாளன் அந்த இறைவனே என்ற எண்ணம் கொண்டவர்களே முஸ்லிம்கள்.
இறைக் கடமைகளை நிறைவேற்றுவதோடு, இறையடியார்களின் கடமைகளை நிறைவேற்றி மனித உரிமைகளை மதிப்பவர்களே முஸ்லிம்கள். சுருங்கச் சொன்னால் ‘பிறர் நலம் பேணுதல்’ என்பதே அவர்களின் அடையாளம்.
‘ஒரு முஸ்லிம் எப்போதும் ஏதாவது ஒரு வகையில் பிறருக்கு நன்மை புரிபவனாக இருக்க வேண்டும்’ என்பதற்கு முன்னுரிமை கொடுத்து நபிகளார் முன்மொழிவதை நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பில் காணலாம்.
‘என்னிடத்திலும், என் சமூகத்தைச் சார்ந்தவர்களிடத்திலும் மறுமை நாள் வரை நன்மை இருந்து கொண்டே இருக்கும்’ என்பது நபிமொழியாகும்..

News

Read Previous

வெற்றிச் சக்கரம்

Read Next

பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் மாநாடு

Leave a Reply

Your email address will not be published.