துயரமளிக்கும் வீரர்கள் உயிர்பலியும் கவலை அளிக்கும் சூழலும்

Vinkmag ad
புல்வாமா 
 
துயரமளிக்கும் வீரர்கள் உயிர்பலியும் 
கவலை அளிக்கும் சூழலும் 
எஸ் வி வேணுகோபாலன் 
 
 
 
தேசத்தை உலுக்கியது, புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட கோர தாக்குதலில் இராணுவ வீரர்கள் நாற்பது பேர் பலியான செய்தி. தமிழகத்தைச் சார்ந்த வீரர்கள் சிவசந்திரன், சுப்பிரமணியன் இருவரை இழந்தது நமது மாநில மக்களுக்கு கூடுதல் சோகமெனில், இப்படியான கூடுதல் கதறல் 17 மாநிலங்களில் எதிரொலித்தது. நாடு முழுவதுமே கலங்கி நின்ற நாள் அது. 
 
உலகக் காதலர் தினத்தன்று இதுபோன்ற அராஜகத்தில் இறங்குமளவு வெறியூட்டப்பட்ட ஒருவன், மிகவும் இளவயதுக்காரன் என்பது சமகாலத்தில் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களில் பரிமாணத்தை உணர்த்துகிறது. ‘இளைஞர்களே காதல் செய்யாதீர்கள்…’ என்று தொடங்கும் அவனது உரை வலிக்க வைப்பது. பிஞ்சு மனத்தில் நஞ்சு ஊட்டுமளவு பரஸ்பரம் பகைமை உணர்ச்சி விதைக்கப்பட்டிருப்பது ஒற்றை இரவில் அல்ல, நீண்ட நெடுங்கதை என்பது இன்னும் சோகம் அளிப்பது. 
 
பாகிஸ்தானை தளமாகக்  கொண்டு வெறிச்செயல்களில் ஈடுபட்டு வரும்,  ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பு, தாங்களே புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பு என கூறி உள்ளது.  இந்த அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்தும், சீனாவின் தொடர் எதிர்ப்பு அதை சாத்தியமாக்க இயலாது செய்திருக்கிறது.
 
ஆசியாவின் இந்தப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவ வேண்டும் என்று வேட்கையுற்றுத் திரியும் அமெரிக்க வல்லரசின் நோக்கம் ஊரறிந்த ரகசியம்.  போதாததற்கு,  தாலிபான் ஆளுகையில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து இப்போது தங்களது படைகளைத் திரும்பப் பெற, பாகிஸ்தான் உதவி அவர்களுக்குத்  தேவைப்படும் நிலையில், எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை ஊகிக்க வேண்டியதில்லை.
 
புல்வாமா தாக்குதலை அரசியல் இயக்கங்கள், வெகுஜன அமைப்புகள் பலவும் ஒன்றுபட்டு கண்டித்தன. தேச ஒற்றுமையைக் காக்கும் கடமை இந்தத் தருணத்தில் மிகவும் முக்கியமானது என்பது எல்லா இதயங்களும் எதிரொலிக்கவே செய்கின்றன.பாகிஸ்தான் தூதரை வெளியேற்றியதோடு, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்தை இந்தியா விலக்கிக் கொண்டது. 
 
மிகவும் பொறுப்புணர்ச்சியோடும், தேச மக்களின் நலனைத் தொலைநோக்கில் பார்க்கும் அக்கறையோடும் இந்தச்சூழலை எதிர்கொள்ள வேண்டிய தேவையை இடதுசாரிகள் உள்ளிட்ட சமூக நோக்கர்கள் சுட்டிக்காட்டவும் செய்தனர். இராணுவ வீரரோ, ஏழை விவசாயியோ  எந்த உயிர் இழப்பும் தேசத்தின் துயரம் தான். 
 
பாதுகாப்பு எச்சரிக்கை நிறைந்த நெடுஞ்சாலையில், 2,500 இராணுவ வீரர்களை 73 பேருந்துகளில் பயணம் செய்ய வைத்தது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. உளவுத் துறையிலிருந்து புல்வாமா பகுதியில் தாக்குதல் நடக்கக்கூடும் என்று சொல்லப்பட்டிருந்த அபாய எச்சரிக்கை ஏன் புறக்கணிக்கப்பட்டது என்ற கேள்விக்கும் இன்னும் பதில் இல்லை. பிற்பகல் 3.10 அளவில் நடந்த தாக்குதல் குறித்த செய்தி பிரதமருக்கு எப்போது சொல்லப்பட்டது, அவர் டிஸ்கவரி சானல் நிகழ்ச்சி ஒன்றிற்கான படப்பிடிப்பில் அன்று மாலை வரை கலந்து கொண்டிருந்தார் என்ற செய்தி உண்மையா என்று எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கும் உறுதியான பதில் சொல்லப்படவில்லை.
 
ஒரு தலைப்புச் செய்தி ஏற்படுத்தும் அதிர்ச்சியும், அது கிளர்த்தும் ஆத்திரமும், அதில் வெடிக்கும் பழிவாங்கும் உணர்ச்சியும் போதும் என்று ஆட்சியாளர்கள் நினைப்பதுதான் இதில் வேதனைக்குரிய அடுத்த பக்கம். 
 
ம்மு காஷ்மீர் பகுதி இந்தியாவோடு இணைந்திருப்பது என்று அந்த மக்களை ஏற்க வைத்த முடிவின் பின்னணியில் அரசியல் சாசன சட்டத்தின் சில சரத்துக்கள் உள்ளிட்டு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முக்கியமானவை. வரலாற்றை அவரவர் விருப்பத்திற்கு கொச்சைப்படுத்திப் பேசுவதும், நெடிய பேச்சுவார்தைகளுக்குப் பிறகு எட்டப்பட்ட முடிவுகளின்மீது இப்போது கல்லெறிவதும் இலகுவானது, ஆனால் உண்மை அத்தனை இலேசானது அல்ல. வாட்ஸ் அப் பகிர்வுகளிலும், சமூக ஊடக பக்கங்களிலும் வேகவேகமாகப் பரப்பப்படும் வெறியுணர்வு ஆபத்தானது. சிறுபான்மையினர் அனைவரையுமே தீவிரவாதிகளாக அடையாளப்படுத்திப் பேசும் அரசியல் அராஜகமானது.
 
புள்ளிவிவரங்களைத் தங்கள் வசதிக்கு ஏற்ப சிதைத்தும், மறைத்தும், மழுப்பியும் பயன்படுத்திக் கொள்ளும் இப்போதைய மத்திய ஆட்சியாளர்கள், வேலையின்மை பிரச்சனை பன்மடங்கு வளர்ந்திருப்பதையே முழு சோற்றில் மறைத்த கதை வெளிப்பட்டது. தங்கள் காலத்தில் அழித்தொழிக்கப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கையை மட்டும் விளம்பரப்படுத்தும் அவர்கள், இதே காலத்தில் மிகவும் கூடுதலான எண்ணிக்கையில் சாதாரண மக்களும், இந்திய இராணுவத்தினரும் பலியாகியுள்ளதைக் கணக்கில் கொண்டுவருவதில்லை. 
 
காஷ்மீர் மக்களின் நன்னம்பிக்கையை வென்றெடுப்பதை விடுத்து, மென்மேலும் அவர்களைத் தனிமைப்படுத்தும் தங்களது அருவருக்கத்தக்க – அபாயகரமான அரசியலையே தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது மோடி அரசு. பாகிஸ்தான் மண்ணிலிருந்து தீவிரவாதிகளை கொண்டுவந்து இறக்கிக் கொண்டிருந்த அமைப்புகளுக்கு இங்கிருந்தே இளைஞர்களைத் தேர்வு செய்து தங்கள் நாச வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் தன்மை கடந்த ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வருவதை என்ன சொல்வது!  ஒரு மதவெறி இன்னொரு மதவெறிக்கான தீனியைப் போடுகிறது என்று சமூக அறிவியலாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதைப் புரிந்துகொண்டால் இந்த நிலைமையின் காரணத்தை அறிந்து கொள்ள முடியும்.
 
காஷ்மீர் மக்களுக்கான வாழ்வாதாரம், அமைதியான வாழ்க்கைச் சூழல் இவற்றை உறுதிப்படுத்துவதற்கு மாறாக, தங்கள் வெறுப்பு அரசியலை கூர் தீட்டிக் கொண்டே இருப்பதில் உற்சாகம் கொள்கிற ஆட்சியாளர்கள், ஜம்மு காஷ்மீர் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைக்கான வாசல்களை அடைத்துக் கொண்டே வருகின்றனர். சிவிலியன் மக்களை சந்தேகக் கண்களோடு சோதித்துக் கொண்டே இருப்பது, வெறித்தனமாக தாக்குவது, பெல்லட் ரவைகள் மூலம் இளைய தலைமுறையினர் முகங்களை குரூரமாக சிதைப்பது, துன்புறுத்துவது என இன்னல்களுக்கு ஆட்படுத்திக் கொண்டே இருந்தால், தவறான திசைவழிக்கு சிலர் தூண்டப்படுவதற்கு வழி திறந்து கொடுப்பதன்றி வேறென்ன!
 
ல்லா விதங்களிலும் தங்களது வாக்குறுதிகளில் பொய்த்துவிட்ட ஆட்சி, நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய நேரத்தில், புல்வாமா தாக்குதலைக் கூட தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதிலேயே குறியாக இருப்பது மேலும் வேதனை அளிப்பது.  ஒரு போரை நோக்கித் தேசத்தைத் தள்ளுகிறது இந்த ஆட்சி என்று அண்மையில் சமூக செயல்பாட்டாளர் அருந்ததி ராய் பேசி இருப்பது கவனத்திற்குரியது. 
 
பிப்ரவரி 26ம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து நடத்திய இந்திய வீரர்களின் பதிலடி தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தொழித்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக முதல்கட்ட செய்திகள் வெளியாகின. அப்போது ராஜஸ்தானில்  முன்னாள் இராணுவத்தினர் அதிகம் பங்கேற்ற பொதுக்கூட்டம்  ஒன்றில் பேசிக்கொண்டிருந்த பிரதமர், ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்று எழுப்பிய முழக்கம், 2019 தேர்தல் முழக்கமோ என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. தேசம் பாதுகாப்பான கரங்களில் உள்ளது, இந்த தேசத்தை நான் அழிய விடமாட்டேன், 2014ல் கொடுத்த வாக்குறுதியை நான் தொடர்ந்து பாதுகாப்பேன் என்று அவர் பேசிய பேச்சு முக்கியமானது. 
 
1000 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள் ஐந்தினை, பாலகோட் பகுதியில் வீசித் திரும்பியுள்ளன இந்திய போர் விமானங்கள்.  பதிலடி கொடுத்துவிட்டது இந்தியா என்று  ஊடகங்கள் குரல் எழுப்புகின்றன. 2016ல் துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டபோதும்  இதேபோல் கொண்டாடப்பட்டது. ஆனாலும், தீவிரவாத நடவடிக்கைகளை எந்த அளவுக்கும் குறைக்கவோ, துடைத்தெறியவோ அது உதவவில்லை. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கான காரணங்களில் ஒன்றாக தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது ஒன்றாகச் சொல்லப்பட்டிருந்தது. இப்போது இந்த நடவடிக்கை. அந்தப் பக்கத்திலிருந்தும் எதிர் தாக்குதல் வெடிக்கும்.
 
உள்நாட்டு மக்களிடம் தேச பக்தி வெறிக்கூச்சலை எழுப்பியோ, அதிரடி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டோ இப்படிப்பட்ட நெடிய வரலாற்றுத் தொடர்ச்சி சவாலாக உருவெடுத்து நிற்கும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட முடியாது. அப்பாவி மக்கள் பலியாவதைத் தடுக்கவும் முடியாது. 
 
பரஸ்பரம் நம்பிக்கையும், அக்கறையும் மிகுந்த அரசியல் ரீதியான உறவுகளை உருவாக்கும் திசைவழியில் அண்டை நாடுகளுடனான நட்புறவை உருவாக்க வேண்டும். காஷ்மீர் மக்களது நெஞ்சில் அவநம்பிக்கை அகற்றப்பட்டு சொந்தம் கொண்டாடும் உள்ளுணர்வு பிரதிபலிக்கும் வண்ணம் அவர்களுக்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
 
அப்போதுதான் மனைவியிடம் அலைபேசியில் பேசிவிட்டுப் பயணம் தொடர்ந்த சுப்பிரமணியன் உள்ளிட்டு நாம் பறிகொடுத்திருக்கும் வீரர்களின் நினைவு நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது. நம்மை அலைக்கழிப்பது அந்த முகங்கள் மட்டுமல்ல, தற்கொலை தீவிரவாதியாகத் துணியுமளவு இறுக்கமான உளவியலுக்குத் தள்ளப்பட்டிருந்த இருபதே வயது நிரம்பிய அந்த  இளைஞன் அடில் அகமது தர் முகமும்தான்!
 
தேசத்தை பாதுகாப்பது என்பது வெறும் மண்ணை அல்ல, மனிதர்களை, மனிதத்தை ! 
– 27 02 2019
 
************நன்றி: புதிய ஆசிரியன்: மார்ச் 2019 இதழ்

News

Read Previous

பயணம்

Read Next

சம்பவாமி யுகே யுகே

Leave a Reply

Your email address will not be published.