திருக்குர்ஆன் மீதான சில புரிதல்கள்…!

Vinkmag ad

திருக்குர்ஆன் மீதான சில புரிதல்கள்…!

அறியாமையும் பிற்போக்குத் தனங்களும் நிரம்பிக்கிடந்த அரபுச் சமூகத்தில்…
முன்னோர்களின் மீதான தவறான மதிப்பீடும் மூடநம்பிக்கைகளும் மலிந்துபோய்,
தங்களது வாழ்வியல் மேம்பாடு குறித்து மறுசீராய்வு செய்ய முன்வராத அந்த முரட்டுச் சமூகத்தில்…
திருக்குர்ஆன் #வன்முறைப்_புரட்சி எதையும் தூண்டவில்லை.
மாறாக வலிமையான #சிந்தனை_மேம்பாட்டை முன்வைத்தது.
சிறந்த #பண்பாட்டு_சீர்திருத்தத்தை வலியுறுத்தியது.

மனிதனின் புறக்கண்களால் பார்த்து அறிந்திட முடியாத வகையில் மறைந்திருப்பவன் இறைவன்.
தொட்டுப் பார்த்தோ, பேசக் கேட்டோ தெரிந்துகொள்ள முடியாதவன்.
உணர்வுகளின் ஊடாக மட்டுமே உணரப்படுபவன்.
அதனால்தான் அதற்கேற்றவாறு மனித சிந்தனைகளை மேம்படுத்தும் உரையாடல்கள் வாயிலாகவே அவர்களிடம் இவ்வாறு பேசியது.

۞ “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன் என்று நபியே சொல்வீராக.
“எதையும் அந்த இறைவனுக்கு இணையாகக் கருதாதீர்கள்;
பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்;
வெளிப்படையாகவோ இரகசியமாவோ அருவருப்பான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்;
அல்லாஹ் புனிதமாக்கியுள்ள எந்த ஓர் ஆத்மாவையும் முறைதவறி கொலை செய்து விடாதீர்கள் – நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு இவற்றை போதிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 6:151)

۞ “அநாதையின் பொருளை அவன் பருவத்தை அடையும் வரையில் அழகான முறையில் (பாதுகாத்து, ஒப்படைப்பதற்காக) அன்றி அதன் பக்கம் நீங்கள் நெருங்காதீர்கள்;
அளவு, நிறுவையை நீதத்தால் நிரப்புங்கள்;
எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி நாம் கஷ்டப்படுத்துவதில்லை;
நீங்கள் பேசும்பொழுது (அதனால் பாதிக்கப்படுபவர்) நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் – நியாயமே பேசுங்கள்;
அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள்.
நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து) கொள்வதற்காக அல்லாஹ் உங்களுக்கு (இவற்றை) போதிக்கிறான்.
(அல்குர்ஆன் : 6:152)

۞ “நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளைப் பின்பற்றிட வேண்டாம் – அவை உங்களை உங்கள் இறைவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் இறையச்சம் கொண்டவர்களாக இருப்பதற்காக இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.
(அல்குர்ஆன் : 6:153)

۞ “உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்களாகக் கருதி பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
(அல்குர்ஆன் : 7:3)

۞ “உம் இறைவன் (முதல் மனிதரான) ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக; (ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.
(அல்குர்ஆன் : 7:172)

۞ “மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் வந்திருக்கிறது; மேலும் (அது) முஃமின் (இறைநம்பிக்கையாளர்)களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.
(அல்குர்ஆன் : 10:57)

இவை சில துளிகள் மட்டுமே. இத்தகைய உரையாடல்கள் திருக்குர்ஆனில் ஏராளம் உண்டு.

திருக்குர்ஆன் பேசிய இந்த விதம்…
இறைவனைப் பற்றி அது வெளிப்படுத்திய முழுமையான புரிதல், தெளிவான இலக்கணம்…
இறைவனுடனான மனிதத் தொடர்பையும் அதன் பிரதிபலிப்பான இவ்வுலக வாழ்வியலையும் வரையறுத்த இந்தச் சிந்தனைகள்தான் அந்த அரபுச் சமூகத்தை இதனை நோக்கி ஈர்த்துக் கொண்டு வந்தது.

தவறவிட்ட தன் பிள்ளையை தேடிப்பெற்ற ஒரு தாயின் ஆரத்தழுவல் போல…
ஒவ்வொரு மனித உள்ளமும் எப்படி தன்னை முழுமையாக ஒப்படைத்து, சரணடைய விரும்பும் தன் இறைவனுடன் உள்ளார்ந்த தொடர்பில் லயித்திருக்குமோ அப்படியான பேரானந்தத்தை இந்தத் திருக்குர்ஆன் வசனங்கள் அவர்களிடம் ஏற்படுத்தியது.
அதுவரை வாழ்ந்த வாழ்க்கையை தூக்கியெறிந்து விட்டு, தங்கள் இறைவன் விரும்பிய வாழ்வின் பக்கம் – ஆர்ப்பரிக்கும் வெள்ளப் பிரளயமாய் அவர்களை ஆவலுடன் ஓடிவரச் செய்தது.

ஒரு #இறைவேதம் தாங்கியிருக்கும் #தன்னிகரற்ற_சிறப்பு என்பதாலும்,
#உண்மையானதேடல் கொண்ட உள்ளங்கள் அதை #உள்வாங்கும்திறன் கொண்டிருப்பதாலும் இன்று வரையும் இந்த அருள்மறையால் கவர்ந்திழுக்கப்படுபவர்கள்
ஏராளம் ஏராளம்.

News

Read Previous

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Read Next

மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை

Leave a Reply

Your email address will not be published.