தமிழக அரசும் தமிழறிஞர் விருதும் !

Vinkmag ad

இருப்பும் பொறுப்பும் 150

 

தமிழக அரசும்

தமிழறிஞர் விருதும் !

-சேமுமு

 

கடந்த 13.04.2015 திங்கள்கிழமை எஸ் – ஐ .ஏ. எஸ் பணிகளை மேர்பார்வையிட்டுவிட்டுப் பகல் உணவிற்காக இல்லம் திரும்பியிருந்த வேளை… சுமார் பிற்பகல் 2 மணி இருக்கும். திருநெல்வேலியிலிருந்து பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய மெளலானா மெளலவி அல்ஹாஜ் டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் பெருந்தகை அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டார். வழக்கமான ஸலாத்திற்குப் பிறகு, “வாழ்த்துக்கள்” என்றார். “எதற்கு?” என்று புரியாமல் கேட்டேன். “தமிழக அரசு உங்களுக்கு உமறுப்புலவர் விருது வழங்கியிருக்கிறதே அதற்காகத்தான்” என்றார். “எனக்கு ஒன்றும் புரியவில்லை” என்று மீண்டும் சொன்னேன்.

“பாலிமர் தொலைக்காட்சியில் இப்போதுதான் பார்த்தேன். நீங்களும் பாருங்களேன்” என்றார். தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒவ்வொன்றாக மாற்றி மாற்றிப் பார்த்தேன். ஏறக்குறைய அனைத்து அலைவரிசைகளிலும் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டையொட்டித் தமிழக அரசின் தமிழறிஞர்களுக்கான விருதுகளை அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களுக்குக் கபிலர், உ.வே.சா., கம்பர், சொல்லின் செல்வர், ஜி.யு.போப், உமறுப்புலவர் ஆகியோர் பெயரால் விருதுகள் வழங்கப்படவுள்ள தமிழறிஞர்கள் பட்டியல் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதில் 2014 ஆம் ஆண்டிற்குரிய உமறுப்புலவர் விருது இவ்வெளியவனுக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மெளலானா மெளலவி டிஜேஎம் அவர்களைத் தொடர்பு கொண்டு “நானே அறியாத ஒரு செய்தியை முதன் முதலாக எனக்குத் தெரிவித்த பெருந்தகை தாங்கள் என்பதில் உள்ளம் நிறைகிறது; அல்ஹம்து லில்லாஹ்” என்றேன். அதற்கு அவர், “நோன்புக் காலத்தில் நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி இப்போது எனக்கு ஏற்படுகிறது” என்று பேருவகையோடு உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து வாழ்த்தினார்.

தொடர்ந்து தொலைபேசியிலும் அலைபேசியிலும், மின் அஞ்சலிலும், முகநூல் பக்கத்திலும் எண்ணற்ற வாழ்த்துச் செய்திகள்…. பாசம் நிறைந்த அன்பர்கள் நேரிலும் வருகைதந்து வாழ்த்தினர். திங்கள், செவ்வாய், மற்றும் புதன் ஆகிய மூன்று நாள்களில் ஆயிரக்கணக்கானோரின் அன்பு வாழ்த்துகள்….

வாழ்க்கையில் மிகுந்த மன நெகிழ்வுக்கு உள்ளான நேரம் … எப்பொழுதும் எனது கல்புக்குள் நிறைந்திருக்கும் சங்கைக்குரிய உலமாப் பெருந்தகைகள், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூண்கள் மெளலானா மெளலவி அல்ஹாஜ் அப்துர் ரஹ்மான், மெளலானா மெளலவி அல்ஹாஜ் டி.ஜே.எம். ஸலாஹுத்தீன், மெளலானா மெளலவி அல்ஹாஜ் ஓ.எம். அப்துல் காதிர் பாகவி ஆகியோரது திருக்கரங்களால் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க உலமா அணி இவ்வெளியவனுக்கு அமீனுல் மில்லத் விருது வழங்கியபோது வல்ல இறையோனின் நற்கிருபையை எண்ணி இவ்விருதுக்கேற்றவாறு இறைவா என்னை வாழச் செய்வாயாக என்ற துஆவுடன் அதனைப் பெற்ற தருணமே உள்ளம் மிக நெகிழ்ந்த நேரமாகும். எத்தனையோ விருதுகளை இலக்கிய உலகிலும், சமுதாயப் பணிகளிலும் பெற்றிருந்த போதிலும் இன்றைக்கும் உயர்வானதாக அது ஒன்றே நிறைந்திருக்கிறது.

இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்களில் சிறந்த காப்பியமான சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப்புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டைப் போற்றும் வகையில், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழறிஞர் ஒருவருக்கு உமறுப்புலவர் பெயரில் விருது வழங்கிச் சிறப்பிக்கத் தமிழக அரசு 2014 ஆம் ஆண்டு முதல் முன்வந்துள்ளது. தமிழக அரசின் தமிழறிஞர் விருதின் உமறுப்புலவர் விருதை முதன்முதலாகப் பெறும்பேறு, தமிழ் இலக்கியத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி., டாக்டர் பட்டம் (1981) பெற்ற முதல் முஸ்லிம் என்ற சிறப்புக்குரிய இவ்வெளியவனுக்குக் கிடைத்திருப்பது முஸ்லிம் சமுதாயத்திற்கான அங்கீகாரமாகும்.

தமிழக அரசின் விருது தந்த மகிழ்வைக் காட்டிலும், ஆயிரக்கணக்கான அன்பு நெஞ்சங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களே பிரமிப்பையும், பேருவகையையும் தந்தன. வாழ்த்திய உள்ளங்களின் இம்மை மறுமை செம்மை வாழ்வுக்காக துஆச் செய்து நன்றி கூறுவதைவிட வேறென்ன இவர்களுக்காகப் பெரிதாக இவ்வெளியவனால் செய்திடவியலும்.

தமிழறிஞர் விருது உமறுப்புலவர் விருது 2014 ஆம் ஆண்டினைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டிற்கான விருதினை அன்புச் சகோதரர் பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் பெறுவது இரட்டிப்பு மகிழ்வைத் தருகிறது. அவருக்காகவும் அவர்தம் துணைவியாருக்காகவும் துஆச் செய்து இருவரையும் பாராட்டி வாழ்த்தி மகிழ்வது நம் கடமையாகும்.

விருதுகள் வருகிறபோது தூயவனுக்கு நன்றி செலுத்திக் கண்ணீர் நிறைகிறது; தூய நபி நாதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாமும் ஸலவாத்தும் கூறி இதயம் நிறைகிறது; பெற்றவர்களை நினைத்து அவர்கள்தம் சொர்க்க வாழ்விற்குக் கைகள் உயர்கின்றன; இந்த எளியவனின் பொது வாழ்விற்கேற்பத் தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கிற துணைவியாரின் பெரும் பாசத்தை எண்ணி நெஞ்சம் கரைகிறது; இவற்றையெல்லாம் மீறி எனதருமைச் சமுதாயம் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத் துறைகளில் மேம்பாடு காண இறையவனின் பொருத்தத்தைப் பெறும் வகையில் இன்னமும் இன்னமும் உழைக்க உள்ளம் ஆணையிடப் பயணம் தொடர்கிறது … துஆச் செய்யுங்கள்.

 

( இனிய திசைகள் – மே 2015 இதழிலிருந்து )

News

Read Previous

துணிவு

Read Next

மூளை இருக்கா, இல்லையா?

Leave a Reply

Your email address will not be published.