சிரிக்க பழகுவோம் !

Vinkmag ad

 

 

 

 

சிரிக்க பழகுவோம் !

  • பாத்திமுத்து சித்தீக்

 

மேடைப் பேச்சாகட்டும், பட்டிமன்றமாக இருக்கட்டும் , ஏன் தத்துவ ரீதியான, ஆத்மரீதியான பிரசங்கமாகட்டும், நகைச்சுவையுடன் கூடிய சுருக்கமான ஒன்றுக்குத்தான் கூட்டத்தில் பலமான கைதட்டல் இருக்கும்.

அவர்கள் ரசித்து ம்கிழ்ந்ததின் அடையாளமாக இருக்கும். அது அந்த நிகழ்வோடு நின்றுவிடாமல் தொடர்ந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து காலங்காலமாக அது நிலைத்து நிற்கும்.

ஒவ்வொரு துறையிலே தலைசிறந்து விளங்கியவர்கள் நகைச்சுவை (Sense of Humour ) உள்ளவர்கள் தான்.

அன்றாட வாழ்க்கையில் கூட சக மனிதர்களில் நகைச்சுவையுள்ளர்வர்கள் தான் சாதிப்பவர்களாக இருக்கிறார்கள்.  ஏனென்றால் உண்மையான நகைச்சுவையில் ‘காழ்ப்புணர்ச்சி’ இருக்காது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ’இந்த மனிதர்கள்’ தங்களை உள்ளூர வாட்டிக் கொண்டிருக்கும் கஷ்ட நஷ்டங்களையோ, இழப்புகளோ காட்டிக் கொள்ளாமல் தங்கள் நகைச்சுவையான பேச்சால் மற்றவர்களை சிரிக்க வைப்பார்கள்.

ஆனால், அவர்கள் வாய்விட்டு சிரிக்க மட்டார்கள். மனதுக்குள் சிரித்து மகிழ்வார்களோ தெரியாது !

சிரிப்பு மனிதனுக்கு மட்டுமே இறைவன் அளித்த பரிசு; நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள் எல்லோருமே இறைவன் தந்த இந்த வரத்தை முழுமையாக செயல்படுத்தி மகிழ்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

’வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பது ஒரு முதுமொழி. வாய்விட்டு சிரிப்பதை ஒரு யோகா அம்சமாக எடுத்துக் கொள்ளாமல் வாழ்க்கையில் நடக்கும் வேடிக்கையான சம்பவங்களை பார்க்கும் போதும், ஏன், படிக்கும் போதும் மனம் விட்டு சிரிக்கப் பழகிக் கொள்வதைப் போல் வேறொன்று நம் ஆரோக்கியத்துக்கும் சந்தோஷத்துக்கும் ஈடாகாது.

நகைச்சுவையின் முக்கியத்துவத்தைப் பற்றி பற்பல மனநல வல்லுநர்கள் எழுதியிருக்கிறார்கள். சி.டபிள்யூ.மெட்காஃப் ( C W Metcalf) என்பவர் எழுதியுள்ள நூலில் எப்படி நாம் சிரிக்க பழகிக் கொள்ளாமல் என்று பல குறிப்புகளை தந்திருக்கிறார்.

மனதத்துவ பேராசிரியர், ஒருவர் மனச்சோர்வு ஏற்படும் போது நகைச்சுவை நிறைந்த நாடகங்கள், திரைப்படங்கள், தமாஷான கார்ட்டூன், சித்திரக் கதைகள் என்று பாருங்கள்.

மன இறுக்கத்திலிருந்து விடுபடுவீர்கள் என்று கூறுகிறார். அன்றாட வாழ்க்கையில் நாம் பார்த்து ரசித்து சிரிப்பதற்கான ஏராளமான நிகழ்வுகள் நம்மைச் சுற்றிக் கிடக்கின்றன.

அதைப்பார்த்து பயனடைவது நம் கையில் தான் இருக்கிறது. உதாரணத்துக்கு ஒரு சிறு சம்பவம் நீண்ட க்யூ வரிசையில் நாம் கால் கடுக்க நிற்கும் போது , அது ஆமை, நத்தை வேகத்தில் நகரும் போது நமக்கு பயங்கர எரிச்சலையும், புகைச்சலையும் ஏற்படுத்தலாம். அதனை சரிப்படுத்த நம்மால் ஏதும் செய்ய முடியாத நிலையில் நமக்குள்ளேயே கவுண்டரில் இருப்பவருக்கு ஓட்டுக்குள் இருக்கும் ஆமையையோ அல்லது நத்தையையோ உருவகப்படுத்தி கற்பனை செய்தால் உள்ளூர சிரிப்பு பொத்துக் கொண்டு வருமா, வராதா ? அப்போது வாய்விட்டு சிரிக்காவிடினும் அந்த நேரத்தில் நம்முன் இருக்கும் இறுக்கம் தளர்கிறார் போல் புன்சிரிப்பு கூட நன்மை தரும் இல்லையா ?

நகைச்சுவையான சம்பவங்கள் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கும் போது நம் இருதயம் நன்கு விரிந்து சுருங்குகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதுவே நம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிக்கல்லாக அமையும் போது செலவில்லாமல் இறைவன் தந்த சிரிப்பை நாம் ஏன் நிவாரணியாகக் கொள்ளக் கூடாது ? மனம் விட்டு சிரிக்கப் பழகுங்கள், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ !

 

— நன்றி : முஸ்லிம் முரசு

நவம்பர் 2016

News

Read Previous

அந்த ரோஜா

Read Next

மத நல்லிணக்கம்

Leave a Reply

Your email address will not be published.